"ஏன்னு சொல்லுடி. எங்க வீட்டுக்கு வராம ஹாஸ்டல் போறேன்னு சொல்றதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரிஞ்சாகணும்" விஜி பிடிவாதமாய்க் கேட்டாள்
"அம்மா வேண்டாம்னு சொல்றாங்கடி" அவள் கண்ணில் அப்பட்டமாய் பொய் தெரிந்ததும் அவளை வெறித்துப் பார்த்த விஜி, "உனக்கு நான் நல்ல ஃப்ரண்ட்டாதானே இருந்திருக்கேன்?" என்று சீரியஸாய்க் கேட்கவும் திகைத்த யமுனா, "ஏண்டி இப்படிக் கேக்கறே? நீதான் எனக்கு ஒரே ஆறுதல்" குரல் பிசிறிற்று
"என்னத்தையோ மனசில வச்சிக்கிட்டு குமைஞ்சிக்கிட்டிருக்கே. என்னன்னு என்கிட்ட சொல்லக் கூடாதா?"
தோழியின் அக்கறையும் கனிவும் யமுனாவின் கண்களைக் குளமாக்கின. கண்களைப் படபடத்து கண்ணீரை விரவினாள். அவளைத் தோளோடு அணைத்துக் கொண்ட விஜி, "உன்னை நான் வற்புறுத்தலை. உனக்கா எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லு. ஆனா ஏன் எங்க வீட்டுக்கு வரமாட்டேங்கறேன்னு மட்டும் இப்போ சொல்லு" என்று விடாப்பிடியாய்க் கேட்டாள்.
யமுனா பதிலற்றிருக்க, "இங்கே பாருப்பா… சும்மா கண்டதையும் போட்டு யோசிக்காம எங்கூட வந்து ஸ்டே பண்ணு. ஒரு வாரம் ஜாலியா ஊர் சுத்தலாம். கவலை எல்லாம் பஞ்சாய்ப் பறந்துடும்" அவள் முடிவாய்ச் சொல்லவும் யமுனாவுக்கும் ஒப்புக் கொள்ளவே தோன்றியது.
‘அவனைக் கண்டு நான் ஏன் பயந்தோட வேண்டும்? பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நறுக்கென்று நாலு கேள்வி கேட்கலாம். கோபத்தைக் கொட்டிவிட்டால் ஒரு வேளை மனம் அமைதியடையும்’ என்று தன்னையே சமாதானமும் செய்து கொண்டாள்.
"குட் கேர்ள். உங்கம்மாகிட்டே பெர்மிஷன் வாங்க வேண்டியது என் பொறுப்பு" என்று சந்தோஷமாய்ச் சொன்னாள் விஜி.
கங்கா அரை மனதோடுதான் அனுமதி தந்தாள்.
"இதுவரை இவளைப் பிரிஞ்சதே இல்லைம்மா. முதல் தடவையா புது இடத்தில விட்டுட்டுப் போக எப்படியோ இருக்கு" என்று தயங்கிய கங்காவை விஜிதான் சரிக்கட்டினாள்.
"பளிச்சுன்னு உண்மையை சொன்னதுக்கு தேங்க்ஸ், ஆன்டி. நீங்க இப்பவே கிளம்புங்க. எங்க வீட்டைக் காட்டிட்டு எங்க அப்பாவையும் அம்மாவையும் ஹாஸ்பிடல்ல போய்ப் பாத்துட்டு வரலாம்" என்று அவள் அதிரடியாய் இறங்க, "சேச்சே, அதெல்லாம் வேண்டாம்பா… நான் ஏர்ப்போர்ட் போகும்போது இவளை விட்டுட்டு அப்படியே உங்க பேரன்ட்ஸை மீட் பண்றேன்" என்று இறங்கி வந்தாள் கங்கா.
"உங்க வீட்ல வேற யாரெல்லாம் இருக்காங்க?" தாய்க்கே உரிய எச்சரிக்கை உணர்வு ஆழமான விசாரணையில் இறங்கிற்று.
"வீட்ல நான், அம்மா, அப்பா மட்டும்தான். ஒரு அண்ணன் இருக்கான். ஆனா அவன் ஹாஸ்டல்ல இருக்கான். வேலைக்காரங்க, குக் எல்லாம் அப்பப்ப வந்துட்டுப் போவாங்க"
கங்கா மகளைப் பார்த்தாள். "எனக்கும் ஹாஸ்டல் கேர்ள்ஸ் யாரையும் அவ்வளவா தெரியாதும்மா. விஜியோட இருந்தா சீக்கிரமா நேரம் போயிடும். நீங்க இல்லாதது தெரியாது" என்று தன் பக்க நியாயத்தை எடுத்து வைத்தாள் யமுனா.
பெருமூச்செறிந்த கங்கா, "உங்கப்பாகிட்டே ஒரு வார்த்தை கேட்டுக்கோ, யமுனா" என்று முடித்துக் கொண்டாள்.
ரகு அலட்டிக் கொள்ளாமல், "தாராளமாய்ப் போயிட்டு வாடா. எஞ்சாய்" என்று உடனே அனுமதியளித்தார். அந்த ஒரு வார சுதந்திரத்தை அவரும்தானே எதிர்பார்த்திருந்தார்!
அசோக் நகரிலிருந்த விஜியின் வீட்டில் யமுனாவை விடச் சென்ற போது விஜியின் தாய் டாக்டர் மங்கையர்க்கரசி முகம் குளிர வரவேற்றார்.
“எப்போப் பாத்தாலும் உங்க பொண்ணு பேச்சுதான் விஜிக்கு. சின்னக் குழந்தை போல ஒரே கொண்டாட்டம் யமுனா வரப்போறான்னு"
கங்காவுக்கு அவரின் சுபாவமும் அந்த கம்பீரமான பெரிய பங்களாவும் மிகவும் பிடித்திருந்தன. மகள் பாதுகாப்பாய் இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது.
"சின்னப் பொண்ணு. வேறெங்கேயும் இருந்ததில்லை. கொஞ்சம் பாத்துக்கோங்க" என்று கரகரவென்ற குரலில் அவர் சொன்னபோது மங்கை சிநேகமாய்ச் சிரித்தார்.
"மாமியார் வீட்ல விட்டுட்டுப் போற மாதிரி கலங்கறீங்க. உங்க பொண்ணை என் பொண்ணு மாதிரி பாத்துப்பேன், கவலைப்படாம போயிட்டு வாங்க. ஒரு வாரம் ஓடிப் போயிடும்" என்று சமாதானப் படுத்தி கங்காவை அனுப்பி வைத்தார்.
***
"அஞ்சலி, இன்னிக்கு வெளில சாப்பிடப் போலாமா?" தொலைபேசியில் கேட்டார் ரகு. அவருக்கு அந்த ஒரு வார சுதந்திரத்தை எப்படியேனும் கொண்டாட வேண்டும் என்ற ஆவல்.
"ஏன் ரகு, என் சாப்பாடு அவ்வளவு சீக்கிரம் போரடிச்சிருச்சா?" வாரத்தில் மூன்று முறையேனும் இரவுச் சாப்பாடு அவள் வீட்டில் என்று ஆகியிருந்ததால் சந்தேகத்தோடு கேட்டாள் அஞ்சலி.
"சேச்சே… சும்மா செலிபரேட் பண்ணணும் போல இருக்கு"
"என்ன, ஏதாவது பிஸினஸ் டீலா?"
"ஆமா" என்றார் அவளிடம் பொய்யாய்.
சற்று தயங்கியவள், "உங்க வீட்ல என்னால ஏதும் பிரச்சினை வரக்கூடாது, ரகு" என்றாள்.
‘விரைவில் இவளிடம் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும்’
அவர் பதிலிறுக்காததால், "நியாயமா நீ உன் ஃபேமிலியோடதானே இதை செலிபரேட் பண்ணணும்?" என்று வினவினாள்.
"அப்போ நீ மட்டும் ஏன் உன் குடும்பத்தை விட்டு வந்தே?"
"என் சூழ்நிலை வேறே, ரகு"
"என்னுதும் உன்னது போலத்தான்" இறுக்கமாய்ச் சொன்னார்.
"சரி… நான் இப்போ உன் மூடைக் கெடுக்க விரும்பலை. ஆனா நம்மால யாரும் காயப்படக்கூடாது. புரிஞ்சதா?" கண்டிப்பாய்ச் சொன்னாள்.
"லௌட் அண்ட் க்ளியர்" அதற்கு மேல் பேசினால் மனம் மாறி விடுவாளோவென்ற அச்சத்தில் சட்டென்று முடித்துக் கொண்டார்.
அன்று டின்னருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றார்கள். உச்சியிலிருந்த ரெஸ்டாரென்ட் ரம்யமாய் இருந்தது. ஜன்னல் வழியே சென்னை பளிச்சிட்டது. கீழே நீச்சல் குளம் நீலக் கலரில் கவர்ச்சியாய் இருந்தது.
"கங்கிராஜுலேஷன்ஸ்" என்றாள் அஞ்சலி.
"எதுக்கு?"
"பிஸினஸ் டீலுக்குத்தான்"
"டூ ஸுன். இன்னும் முழுசா கிடைக்கலை" என்றார் தன் குடும்பச் சூழ்நிலையை எண்ணியவாறு.
அஞ்சலியோடிருந்த ஒவ்வொரு கணமும் ரகுவுக்கு இனிமையாய் இருந்தது. மேகத்தில் மிதப்பது போல சுகமாய் இருந்தது. இப்போதைக்கு இது ஒரு கனவு. எந்நேரமும் கலைந்துவிடலாம். கனவை நனவாக்கும் ஆசை ரகுவுக்கு வலுப் பெற்றுக் கொண்டே வந்தது. ஆனால் அஞ்சலி அவரை ஒரு எல்லைக்கப்பால் நிறுத்தி வைத்திருந்து சித்ரவதையல்லவா செய்து கொண்டிருக்கிறாள்!
வாரத்தில் பலமுறை தொலைபேசியில் பேசினாலும், சில முறையேனும் மாலையில் சந்தித்தாலும் நட்பு என்ற வட்டத்துக்குள்ளேயே அந்த உறவு இருக்குமாறு பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. எட்டரைக்கு மேல் ஒரு நாளும் வீட்டிலிருக்க அனுமதித்ததில்லை. ஏதேனும் காரணம் சொல்லி அவரை அனுப்பிவிடுவாள்.
"நீ இங்கே ரெகுலரோ? உன்னைப் பார்த்தவுடனே டிரிங்ஸ் கொண்டு வந்து வச்சிட்டாங்க?" என்று அஞ்சலி கேட்டதும் அசட்டுச் சிரிப்போடு, "ஆமா… பிஸினஸ் மீட்டிங்ஸ் எல்லாம் இங்கேதான் நடக்கும். அதுனால எல்லாருக்கும் என்னைத் தெரியும்" என்றார்.
"இல்லை, இப்படி டின்னருக்கு அடிக்கடி வருவியோன்னு நினைச்சேன்" குறும்பாய்ச் சொன்னாள் அஞ்சலி.
இளமைக்காலம், இசை, புத்தகங்கள் என்று அவர்களுக்குள் பொதுவாய்ப் பேச நிறையவே விஷயங்களிருந்தன. நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தபின் கிளம்பும் நேரம் வந்ததும் வெறுமையாய் உணர்ந்தார் ரகு.
வீட்டில் அவளை இறக்கிவிடுமுன், அவளைப் பிரிய மனமில்லாமல், "தப்பா நினச்சுக்காதே, அஞ்சலி. இன்றைக்கு நான் உன் வீட்ல தங்கலாமா?" என்று மெல்லிய குரலில் கேட்டார் ரகு.
"நோ" அஞ்சலி அழுத்தமாய்ச் சொன்னாள்
ரகுவுக்கு அந்த நிராகரிப்பு கசந்தது. "ஏன், அஞ்சலி?" ஏமாற்றமாய்க் கேட்டார் ரகு.
"நான் உன் கீப் இல்லை, ரகு. அப்படி ஒரு எண்ணம் இருந்ததுன்னா இனி இங்கே வராதே" கடுமையாய்ச் சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கி திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள். மூடிய கதவை வெகுநேரம் பார்த்துக் கொண்டு நின்ற ரகுவின் நெஞ்சை அடைத்த சூன்யம் வாழ்க்கையின் மேல் வெறுப்பை உண்டாக்கிற்று. அதையும் மீறி அஞ்சலியின் மீதான மரியாதையும் பிரியமும் அதிகமாகின.
மூடிய கதவின் மறுபுறம் ரகுவின் கார் கிளம்பும் ஓசைக்காய்க் கண்மூடிக் காத்திருந்த அஞ்சலிக்கு எத்தனை நாள் தன் எல்லைக் கோட்டைக் கட்டிக் காத்திருக்க முடியுமென்ற சந்தேகம் வலுத்தது. தானே வகுத்துக் கொண்ட அந்த எல்லை அவளையுமல்லவா மூச்சுத் திணற வைக்கிறது!
(தொடரும்)
Hai nila,
i like ur storys very much
ethanai nallay engeunthai( E N E)” is a fantastic story, i like that story very much.
and this story also nice
i want one information pls tell me, which date the “kannil theriyuthur thotram” will published in Rani Muthu Pls i want that story book pls…..
and your last story(E N E) was published in any book? pls tell me…….
i already send this msg two weeks before
i m waiting for ur reply pls tell me………….
i like ur way of writting………”
Hi Divya prabha,
Thank you for your kind words… apologies for the delay in responding. I suppose you would find it difficult to locate the ranimuthu issue. Both the novels are published as books by Sandhya pathippagam in Ashok nagar. You could get the books from them. The phone number is: 24896979. Or you can get them from Tristar housing, T.Nagar:
2431 2323,2431 2424
Hai Nilla,
Thanks for ur reply
thank u very much……