தன் பிள்ளையின் முகத்தில் விசனம் அப்பியிருந்ததைக் கண்ட கங்கா, "என்னடா ஆச்சு, எனி ப்ராப்ளம்?" என கரிசனமாய் விசாரித்தாள்.
யமுனாவுக்கு அம்மாவின் தோளில் சாய்ந்து அழ வேண்டும் போல்தானிருந்தது. ஆனால் என்னவென்று காரணம் சொல்வாள்? நான்கே முறை சந்தித்தவன் தன்னை ஏமாற்றிவிட்டானென்றா?
"இல்லைம்மா, கெமிஸ்டிரி லேப்ல எக்ஸ்பெரிமென்ட் கஷ்டமா இருந்தது. வரும்போது பொல்யூஷன் வேறே" என்றவாறே குளிக்கக் கிளம்பினாள்.
"ஹாஸ்டல் கேட்டியாடா?" என்று கேட்ட தாய்க்கு "விஜி அவங்க வீட்ல இருக்கச் சொல்றாம்மா" என்று பதில் சொன்னபோது விக்ரமின் நினைவு மீண்டும் மனதை நசுக்கியது. தொண்டை இறுக லேசாய்ச் செருமிக் கொண்டாள்.
"ஒரு வாரம் அவங்க வீட்லயா?" கங்கா யோசிக்கவும், "நீங்க யோசிச்சுச் சொல்லுங்கம்மா" என்றவாறு அறை நோக்கி ஓடினாள்
வெந்நீரோடு கண்ணீரும் கலந்து கொட்டியது குளியலறையில். அம்மாவுக்குக் கேட்டுவிடக்கூடாதென வாய் பொத்தி அழுதாள். அவளுக்கே அவள் செயல் முட்டாள்தனமாய்த்தான் பட்டது. விக்ரம் அவளுக்கு யார்? கையைப் பிடித்துப் பேசினால் காதலிக்கிறான் என்று கற்பனையை வளர்த்துக் கொள்வதா? தானாகவே வளர்த்துக் கொண்ட கனவுதானென்றாலும் அதனை விதைத்ததில் அவனுக்கும் பங்குண்டு என்பதில் யமுனாவுக்கு சந்தேகமில்லை. தான் அவனுக்கு ஒரு பொழுதுபோக்கோ என்ற எண்ணம் தோன்றிற்று.
தன் பெற்றோரை விட்டால் இனி தனக்கு யார் இருக்கிறார்கள் என்ற கழிவிரக்கம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது. அவர்களது அன்பு மட்டுமே சாஸ்வதம் என்ற திடீர் ஞானோதயம் தோன்ற, அதாவது நிலைக்க வேண்டுமே என்ற கவலை அவளை வாட்டியது. அவர்களை இணைத்து வைக்க வேண்டும் என்ற ஆசை இப்போது வெறியாகவே கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது
வெகுநேரமாகியும் யமுனா சாப்பிட வராதது கண்டு, கங்கா அழைத்ததும்தான் சுய நினைவு திரும்பியது யமுனாவுக்கு.
அவசரமாய் குளியலறையிலிருந்து வெளி வந்தவள், "பசிக்கலைம்மா" என்றாள்.
"ராத்திரி சாப்பிடாம படுக்கக் கூடாது, தங்கம். கொஞ்சமாவது சாப்டுட்டுப் போப்பா"
அம்மாவின் வற்புறுத்தலுக்காக கீழே இறங்கிப் போனாள்.
"ரசமும் பீன்ஸும்தான் வைச்சேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோப்பா" என்றவாறே மகளுக்குப் பரிமாறிவிட்டு தனக்கும் போட்டுக் கொண்டாள் கங்கா.
"எதுக்கும்மா டெல்லி?" எப்போதும் தன் அலுவலக விஷயத்தைப் பற்றிப் பேசியிராத மகள், இப்படிக் கேட்கவும் வியப்பாய்ப் பார்த்தாள் கங்கா.
"ஹெட் ஆஃபீஸ் அங்கேதானடா. ஒரு ஹை லெவல் கான்ஃபரன்ஸ் இருக்கு. அதுக்குத்தான் போறேன்"
"வாவ்! என்ன ட்ரெஸ் போட்டுக்கப் போறீங்க?"
கங்கா கண்களை இடுக்கி மகளைப் பார்த்தாள். ‘என்னவானது இவளுக்கு?’
"சேலைதான்"
"சூட் போட்டுக்கோங்கம்மா" என்று மகள் சொன்னதும் சிரிப்புத்தான் வந்தது கங்காவுக்கு.
"எதுக்குப்பா வேஷமெல்லாம்? நான் இவ்வளவுதான். சூட் போட்டாதான் மதிப்பாங்கன்னா எனக்கு அந்த மதிப்பு வேண்டாம்" என்றாள் சற்று கசப்புடன். தன் சொந்த வாழ்க்கையின் பிம்பம் தெரிந்திருக்க வேண்டும்!
"சரி… சூட் வேண்டாம். ப்யூட்டி பார்லர் போய் ஃபேஷியல் மட்டும் பண்ணிக்கோங்கம்மா" என்று யமுனா சொன்னதும் கங்காவின் முகத்தில் வேதனையின் நிழல் படர்ந்தது.
"காலேஜ் போனதும் உனக்கும் அம்மா பிடிக்காமப் போயிருச்சில்ல?"
"அய்யோ அப்படியெல்லாம் இல்லம்மா. ட்ரெண்டியா இருக்கும்னுதான் சொன்னேன். ஸாரிம்மா" என்று அவசரமாக மன்னிப்புக் கோரினாள் யமுனா.
கங்கா உதடுகளை இறுக்கிக் கொண்டு வெறுமனே தலையை ஆட்டிவிட்டு மௌனமானதும் "நீங்க டெல்லி போறது அப்பாவுக்குத் தெரியுமாம்மா?"
"நீயே சொல்லிடு, யமுனா" என்றுவிட்டு எழுந்து கை கழுவிய அன்னையை ஊன்றிப் பார்த்தாள் யமுனா.
‘ஏன் இத்தனை பிடிவாதம்?’ என்று வேதனையாய் இருந்தது. அதே நேரம் தனக்குப் பிடிக்காத வாழ்க்கையை மகளுக்காகவேனும் சகித்துக் கொள்ளும் தாயின் மேல் அன்பும் பெருகியது.
தன் அறையின் தனிமைக்குத் திரும்பியதும் மனம் மீண்டும் சுருண்டு கொண்டது. இமயம் போல கனத்த இதயத்தின் பளு தாங்காமல் களைத்துப் போன மூளை அவளை உறக்கத்துக்கு இழுத்துப் போனது.
(தொடரும்)