வண்டியை நோக்கி நடந்தபோது, "யாரும்மா யுவன்?" என்றாள் யமுனா நேரடியாக.
உடனடியாகப் பதில் சொல்லாமல் சிந்தனை வயப்பட்டாள் கங்கா. யமுனா பொறுமையாகக் காத்திருந்தாள்
ஒரு சுதந்திர தினத்தன்னிக்கு ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கோவளம் பீச்சுக்கு பிக்னிக் போயிருந்தோம். எப்பவுமே அங்கே ரொம்பக் கூட்டம் இருக்காது. உனக்கு ஒரு அஞ்சு வயசிருக்கும். மற்றப் பசங்களோட சேர்ந்து ஓடிப் பிடிச்சு விளையாடிக்கிட்டிருந்த நீ திடீர்னு எங்கிட்ட வந்து, "அங்க ஒரு கூடைக்குள்ள தம்பி இருக்கான். வாங்க காட்டறேன்னு என்னை இழுத்துட்டுப் போனே. அந்தத் தம்பிதான் யுவன்"
இப்போது உண்மையாகவே அதிர்ந்தாள் யமுனா. "நானா யுவனைக் கண்டுபிடிச்சேன்?"
"ஆமா. பச்சைக் குழந்தையைக் கூடையிலே வச்சு பீச்ல போட்டுட்டுப் போயிட்டாங்க. அரைகுறை உயிராத்தானிருந்தான் நாம பாக்கும்போது"
யமுனாவுக்கு அழுகை முட்டியது. "ஏம்மா எங்கிட்ட முன்னமே சொல்லலை?"
"யுவனை எடுத்துக்கிட்டு வந்து ஹாஸ்பிடல்ல சேத்து அவனை நான் கவனிச்சிக்கிட்டபோது நீ ரொம்ப அடம் பண்ணினே. அவனை கையிலே எடுத்தாலே நீ ஓன்னு அழுவே. அவனை மட்டுமில்லை. எந்தக் குழந்தையை நான் தூக்கினாலும் ஒரே கத்தல்தான்."
"அப்போ நான் சின்னப் பிள்ளை. வளர்ந்தபிறகு சொல்லி இருக்கலாமே"
"நீ எனக்கு எப்பவுமே சின்னப் பிள்ளைதானே, யமுனா?"
"அப்பா ஏம்மா தம்பியைப் பார்க்கலை இன்னைக்கு?"
கங்காவின் முகத்தில் வேதனை பரவியது.
"அவராலதான் தம்பி இங்கே இருக்கான், யமுனா. நான் அவனை நம்ம கூட வச்சிக்கத்தான் ஆசைப்பட்டேன்"
கங்காவின் விழியோரம் நனைவதைப் பார்த்ததும் யமுனாவுக்கு நெஞ்சு கனத்தது.
"ஏம்மா, அப்பா வேண்டான்னு சொன்னார்? என்னாலயா?"
"அவருக்கு க்ளாஸ் முக்கியம். அவரோட ப்ரெஸ்டீஜ் முக்கியம்."
அப்பாவுக்கும் அம்மாவுக்கான வேறுபாடுகளின் ஒரு முகத்தை வெளிக்கொணர்ந்து விட்டதற்காய்ப் பெருமைப் படுவதா அல்லது யுவனுக்காகத் துக்கப்படுவதா என்று தெரியாமல் குழம்பி நின்றாள் யமுனா.
நீண்ட மௌனத்துக்குப் பின், "நான் அப்பாகிட்டே பேசிப் பார்க்கட்டாமா? இப்போ கூட நாம தம்பியைத் தத்தெடுத்துக்கலாமே"
"பேசி பிரயோஜனம் இல்லை, யமுனா. அது மேல மேல ப்ரச்சினையைத்தான் கிளப்பும். முதல்ல உன் வாழ்க்கை செட்டிலாகட்டும். அப்புறம் பார்ப்போம்"
‘சுற்றிவந்து பந்து என் பக்கமே விழுகிறதே!’ யமுனா பெருமூச்சு விட்டாள்
***
வகுப்பில் தாமதமாய் வந்து இணைந்து கொண்டபோது, விஜி மேஜைக்கடியில் கிரீட்டிங் கார்டைத் தந்தாள். திருட்டுத்தனமாய்ப் பிரித்து. கார்டில் அமர்த்தலாய் அணைத்துக் கொண்டிருந்த இரு கரடிகளைப் பார்த்ததும் புன்னகைத்து, "தேங்க்ஸ்" என்றாள் வாயசைப்பில்.
மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து சர்ப்ரைஸாகக் கேக் கொண்டு வந்து வெட்டச் செய்து ஹாப்பி பர்த்டே பாடி அமர்க்களப் படுத்திவிட்டதில் நெகிழ்ந்து போனாள் யமுனா.
"எல்லாம் உன் ஏற்பாடா?" விஜியிடம் கேட்டாள் யமுனா.
"உன் பர்த்டேன்னு ஒலிபரப்பு செய்தது மட்டும்தான் நான். மற்றதெல்லாம் பசங்கதான். உனக்கு க்ளாஸ்ல நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க போலிருக்கு. அதான் ஓடி ஓடிச் செய்திருக்காங்க"
‘விக்ரமிடம் சொல்லியிருப்பாளா? வாழ்த்துவானா? அவனிடம் என் நம்பர் இருக்கிறதா?’
யமுனாவின் கண்கள் முன் சொடுக்குப் போட்டாள் விஜி. "என்ன… கனவு?"
பேச்சை மாற்ற விரும்பி யுவன் பற்றிய விபரங்களை விரிவாகச் சொன்னாள். சுவாரஸ்யமாய்க் கேட்டுக் கொண்டிருந்த விஜி, "ஆனாலும் உன் லைஃப் நல்லா சுவாரஸ்யமா இருக்குப்பா. எனக்குப் பாரு… போரான ஒரு அப்பா, அம்மா, ஒரு அண்ணன் தடியன்"
அதுதான் வாய்ப்பென்று மெல்ல விக்ரம் பற்றிப் பேச்செடுத்தாள். "ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சேன். ஏன் உங்கண்ணா ஹாஸ்டல்ல இருக்கார்?"
ஒரு கணம் அவளை நேராய்ப் பார்த்த விஜி, "வேறென்ன… நல்லா ஊர் சுத்தலாம்னுதான்" என்றுவிட்டு, "ரைட்டோ… உன் பர்த்டே ட்ரீட் எப்போ?" என்று வலிந்து பேச்சைத் திசை திருப்பினாள்.
அன்று முழுவதும் அலைபேசி வேலை செய்கிறதாவென்று பலமுறை சோதித்தாள் யமுனா. அது தன் வேலையை சரியாகத்தான் செய்தது. ஆனால் விக்ரம் மட்டும் அழைக்கவே இல்லை.
அந்தப் பிறந்த நாள் அப்பா தந்த விலை உயர்ந்த பரிசு, யுவன் பற்றிய உண்மை, சக மாணவர்களின் தோழமை என்று எதிர்பார்த்ததிருந்ததை விட விமரிசையாகக் கழிந்திருந்தாலும் விக்ரம் தந்த ஏமாற்றமே அவள் மனதை வியாபித்திருந்தது.
(தொடரும்)