"அம்மா, நான் பிஸினஸ் நடத்தினா எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களாம்மா?" திடீரெனத் தன் மகள் இப்படிக் கேட்டதும் நகைத்தாள் கங்கா
"என்னாச்சு, யமுனா… திடீர்னு ப்ளானெல்லாம் பெரிசா இருக்கு?"
"ஆமா, போன வாரம் அப்பாவோட ஆஃபீஸ் போயிருந்தேன். ரொம்ப இம்ப்ரஸிவா இருந்ததும்மா. படிச்சு முடிச்சதும் நானும் நம்ம பிஸினஸ்ல இறங்கிடலாம்னு இருக்கேன்" என்று யமுனா சொன்னதும் கங்காவின் முகம் இருண்டது. பெண் தந்தையோடு நீண்ட காலத் திட்டம் போடுகிறாள். தகப்பன் எப்போது வெட்டிக் கொண்டு போகலாமென்றல்லவா பார்க்கிறார்!
"உங்கப்பா என்ன சொன்னார்?" என ஆழம் பார்த்தாள்
"அவருக்கு ரொம்ப சந்தோஷம்மா. ஹாலிடேஸ்லாம் ஆஃபீஸ் வரச் சொல்லிருக்கார். செமஸ்டர் ஹாலிடேஸ்க்கு ப்ராஜக்ட் கூட தரப்போறார்"
‘மகளின் மேல் பாசம் விட்டுப் போகவில்லை போலிருக்கிறது’
"நம்ம கம்பெனி திடீர்னு நெறைய வளர்ந்திட்டதுனால நெறைய ஆர்கனைஸ் பண்ணாம இருக்காம் -குறிப்பா உங்க ஏரியாலதான் நிறைய ஹெல்ப் வேணுமாம்" மகள் மெல்ல தூண்டிலைப் போட்டாள்.
கங்கா பதில் சொல்லாதது கண்டு, "செமஸ்டர் ஹாலிடேஸ்ல என் கூட நீங்களும் வாங்களேம்மா" என்று துணிச்சலாய்க் கேட்டாள் யமுனா.
முதலில் அதிரடியாய் மறுத்த கங்காவை கொஞ்ச கொஞ்சமாய் கரைத்து அவளின் அரைகுறை ஒப்புதலைப் பெற்ற போது யமுனாவுக்குப் பாதிக் கிணறு தாண்டிவிட்ட திருப்தி எழுந்தது.
டிசம்பரில் செமஸ்டர் முடியமட்டும் சிந்தனையை சிதறவிடாமல் இருக்க மிகவும் சிரத்தை எடுக்கத்தான் வேண்டி இருந்தது யமுனாவுக்கு. கடைசித் தேர்வு முடிந்ததும் விஜியும் யமுனாவும் ஓய்வாய் ஒரு ரெஸ்டாரண்டுக்குச் சென்றார்கள்.
"என்னடி ஒரு செமஸ்டரே இப்படிப் படுத்திடுச்சி. இன்னும் ஏழு இருக்கு" என அலுத்துக் கொண்டாள் விஜி
"ஆமா, நீ ஏன் கல்யாணம் பண்ணிட்டு யு.எஸ்ல போய் படிக்கக் கூடாது?" என்று யமுனா தன் யோசனையைச் சொன்னதும், "உனக்குத் தெரியுது… தெரிய வேண்டியவங்களுக்குத் தெரியலையே. படிச்சு முடிச்சப்பறம்தான் கல்யாணமாம்" என்றாள் விஜி பெருமூச்சுடன்.
"அது சரி, திரைமறைவில என்ன நடந்துச்சுன்னு சொல்லவே இல்லையே?"
"உங்கிட்ட சொல்லலையா நான்? விக்கி மாயாகிட்ட தனியா பேசணும்னு கேட்டானாம். பேசி முடிச்சப்புறம் மாயாவே இது சரிப்படாதுன்னு சொல்லிட்டாளாம். என்ன பேசுனான்னு யாருக்கும் தெரியாது. அப்பாவுக்கு பயங்கர கோபம். இன்னும் அவன் கூட பேசறதில்லை" என்று விளக்கிவிட்டு, "உனக்கெதுவும் அவன் தொந்தரவு தரலையே?" என அக்கறையாய் விசாரித்தாள்.
"சேச்சே… உன் எங்கேஜ்மென்ட்ல பார்த்ததுதான்" என்று யமுனா சொன்னபோது அவள் தொனியில் ஏக்கம் இழையோடினாற்போலிருந்தது விஜிக்கு. தன் தோழியைப் புரிந்து கொள்ள முடியாத அவஸ்தையில் விஜி உதட்டைக் கடித்துக் கொண்டாள்.
"யூ நோ… எங்கம்மா என் கூட அப்பா ஆஃபீஸ் வர சம்மதிச்சிட்டாங்க" என்று யமுனா பெருமிதமாய்ச் சொன்னபோது,
"பரவாயில்லையேடி… ஏதோ சின்னப்புள்ளைத் தனமா பேசறேன்னு நெனச்சா பாஸிடிவா ஏதோ நடக்குதேடி… வெல்டன்" எனத் தட்டிக் கொடுத்தாள் தோழி.
சந்திரன் பூமியை மூன்று முறை விறுவிறுப்பாய் சுற்றி முடித்திருந்த போது கங்காவும் சுறுசுறுப்பாய் ரகுவின் அலுவலகத்தில் நிறைய மாற்றங்கள் செய்திருந்தாள்.
"ஒழுங்கு ஒழுங்குன்னு அலட்டிப்பாரே? சம்பளம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. ஒரு அடிப்படையே இல்லை" என்று கங்கா முதலில் கடுகடுத்த போது யமுனா, தந்தைக்கு பரிந்து கொண்டு வந்தாள்.
"அதான் திடீர்னு வளர்ந்திருச்சின்னு சொன்னாரேம்மா. அதுக்குத்தானேம்மா உங்களை வரச் சொன்னேன்"
முதலில் ரகு அலுவலகத்தில் இல்லாத நேரமாய்ப் பார்த்து அங்கு சென்று கொண்டிருந்த கங்காவை பணியிலிருந்த சவால் நேரம் காலமில்லாமல் இழுத்து வந்தது. சில சமயம் தன் அலுவலகப் பணியை முடித்துவிட்டு நேராய் ரகுவின் அலுவலகம் செல்வதுமுண்டு. ஆனால் அப்படிச் செல்லும்போதெல்லாம் அவர் அநேகமாய்க் கிளம்பி விட்டிருப்பது கண்டு ‘ஒரு மனிதர் இத்தனை நேரமா க்ளப்பில் காலம் கழிப்பார்?’ என்ற சந்தேகம் எழாமலிருக்காது. ஆனால் அவர் வாழ்க்கைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று வலுக்கட்டாயமாய் தன் கவனத்தை இத்தகைய எண்ணங்களிலிருந்து திருப்பிக் கொள்வாள்.
கோப்புகளிலிருந்து ரகுவின் பணியாளர்களில் பெரும்பாலோர் நீண்ட காலமாய் அங்கு பணியாற்றி வருவது தெரிந்தது. ‘இந்த முசுடு கூட எப்படித்தான் இவ்வளவு வருஷம் காலம் தள்ளுதுங்களோ’ என்று அதிசயித்திருந்தாள் கங்கா. ஆனால் அவர்களில் சிலரிடம் பேசியபோது ரகுவிடம் அவர்கள் பெரிய மரியாதை வைத்திருந்தது புலப்பட்டதோடு அவளுக்கு அதுவரை தோன்றியிராத புதிய கோணம் ஒன்றும் உதயமானது.
"தப்பா நெனச்சுக்காதீங்க மேடம், ஸார்ட்ட வேலை செய்றது கஷ்டம்தான். ஆனா நல்லா வேலை கத்துக்கலாம். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒண்ணும் தெரியாமத்தான் வந்தேன். ஆனா இன்னிக்கு இந்த இண்டஸ்ட்ரில பெஸ்ட்ல ஒருத்தரா நான் இருப்பேன்னு தைரியமா சொல்லுவேன்"
"இப்பப் பாருங்க மேடம், நமக்கு 20 மாடி ஏற முடியும்னு வச்சுக்கங்க, நம்ம அதைப் புரிஞ்சுக்காம நாலு மாடிலயே திருப்தியாயிட்டோம்னா யாருக்கு நஷ்டம்? சார், நம்மளைத் தள்ளித் தள்ளி 25 மாடி ஏற வச்சிருவார். ஏறும்போது கடுப்பா இருந்தாக்கூட ஏறி முடிச்சப் பிறகு நமக்கு கிடைக்கிற திருபதி இருக்கு பாருங்க… எவ்வளவு காசு குடுத்தாலும் கிடைக்காது"
"எந்த வேலையா இருந்தாலும் துல்லியமா அலசுவார்ங்க மேடம். க்ளீனரா இருந்தா கூட வேலை நல்லா இருந்தா நின்னு பாராட்டுவார். நல்லா இல்லைன்னா பளிச்சுன்னு சொல்லிருவார். அதுனால் அவரு வாயிலருந்து ஒரு நல்ல வார்த்தை வாங்கிட்டம்னு வச்சுக்கங்களேன், அன்னைக்கெல்லாம் நமக்கு கிரீடம் வச்சாப்ல இருக்கும்"
இவர்களுக்கெல்லாம் ரகுவை திருப்திப்படுத்த முடிகிறபோது தன்னால் மட்டும் ஏன் முடியாமல் போயிற்று என்ற குறையும் ஒருவேளை தன்மேல்தான் தவறோ என்ற சஞ்சலமும் அவ்வப்போது எழுந்தாலும் தன்னை அவர் நடத்திய விதம் வேறு என்று சற்று சமாதானப்படுத்திக் கொண்டு தன் வேலையில் முழுகவனத்தையும் செலுத்தினாள் கங்கா.
நிர்வாகத் தரப்பிலிருந்த ஆலோசனை தருவதற்காக ரகு நியமித்திருந்த வெங்கட்ராமன் அனுபவசாலியாக இருந்தாலும் முடிவுகள் எடுப்பதில் மிகுந்த தயக்கம் காட்டினார்.
சின்னச் சின்ன முடிவுகளுக்குக் கூட "ஸாரை ஒரு தடவை கேட்டுடலாம், மேடம்" என்று அவர் தள்ளிப் போட்டுக் கொண்டே வர, வேலைகள் இழுபட்டுக் கொண்டே போனதில் கங்காவுக்கு எரிச்சல் ஏறிக் கொண்டே போயிருந்தது. ரகுவின் நேரடி ஈடுபாடு அவசியம் என்பதை உணர்ந்தவுடன், பிரச்சினைகளை வரிசைப்படுத்தி, அவற்றிற்கான தீர்வுகளையும் அவை ஒவ்வொன்றின் சாதக பாதகங்களையும் தெளிவாய் அலசிய ஆவணம் ஒன்றினைத் தயார் செய்து ரகுவின் பார்வைக்கு அனுப்பினாள்.
ரகு கங்காவின் புதிய பரிமாணத்தில் பிரமித்து போனார். வெங்கட்ராமன் வாய்க்கு வாய், "மேடம் ரொம்ப ப்ரில்லியன்ட், ஸார். எல்லார் நிலையிலயும் இருந்து பார்க்கறாங்க. சொந்தக் கம்பெனின்னா கூட எம்ப்ளாயீஸுக்கு எல்லா வசதியும் இருக்கணும்னு பார்த்துப் பார்த்து திட்டம் போடறாங்க. அதே சமயம் மேனேஜ்மென்டுக்கு அநாவசியமா ஒரு பைசா கூட வீணாகக் கூடாதுங்கறதுலயும் கறாரா இருக்காங்க. கிரேட், ஸார்" என்று கங்காவின் புராணம் பாடினார்.
தானறிந்த கங்கா வளர்ந்துவிட்டிருக்கிறாள். தான் அதனைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்ற குற்ற உணர்வு மெல்லத் தலை தூக்கியது ரகுவிடம். ஆனால் இனி வருந்திப் பயனில்லை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. இது பாறையில் ஏற்பட்ட விரிசல்; ஒட்டவைக்க முடியாது. தவிர, இந்தப் பாலையில் ஒரு பூ வேறு பூத்திருக்கிறது!
மார்ச் மாத இறுதிக்குள் அடிப்படை சம்பளக் கட்டமைப்பொன்றை உருவாக்கி, தன் ஒப்புதல் பெற்றதோடு, நிறுவனத்தில் பணி புரியும் ஒவ்வொருவருக்கும் அவரவர் மேலாளரைக் கொண்டும், சக பணியாளரைக் கொண்டும் மதிப்பீடு நடத்தி, மதிப்பீட்டின் அடிப்படையில் சம்பள உயர்வை நிர்ணயம் செய்து தனித்தனியாய் ஒவ்வொருவருக்கும் கடிதம் மூலம் விளக்கத்தோடு தெரிவித்த போது கங்காவின் மேல் ரகுவுக்குப் பெரிதாய் மதிப்பு ஏற்பட்டிருந்தது.
(தொடரும்)
“