கண்ணில் தெரியுதொரு தோற்றம்(1)

யமுனா வீட்டை நெருங்கியபோது கேட் திறந்திருந்ததைச் சற்று கலக்கத்தோடு பார்த்தாள். கேட்டுக்கு வெளயிலேயே ஸ்கூட்டியை விட்டிறங்கி கேட்டுக்குள் அதனை உருட்டி நிறுத்தியபோது பெற்றோர் இருவரின் கார்களும் நிற்பதைப் பார்த்துக் கைக்கடிகாரத்தை நோட்டமிட்டாள். மணி மதியம் இரண்டு.

‘இந்த நேரத்திலா? அதுவும் திங்கட்கிழமையில்? ஏதாவது பிரச்சினையோ?’

சாவிக்காகக் கைப்பையைத் துழாவிக் கொண்டே கதவைத் துரிதமாய் அடைந்தவள், உள்ளிருந்து வந்த கங்காவின் வார்த்தைகளில் விக்கித்தாள்:

"எனக்கு மட்டும் ஆசையா இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்னு? மூச்சுத் திணறுது தெரியுமா? மனசில உள்ள கோபத்தைக் கொட்டித் தீக்கக்கூட முடியலை. என்ன செய்யறது, பெண்ணைப் பெத்துட்டோமே, அவ வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அவளுக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் பல்லைக் கடிச்சிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்"

"முதல்ல அவளுக்கு விபரம் தெரியற வரைக்கும்னே… பின்ன +2 முடிக்கட்டும்னே… இப்ப கல்யாணம்ங்கறே… எத்தனை வருஷம்தான் நான் டிவோர்ஸுக்குக் காத்திருக்கிறது? எனக்கென்னவோ நீ வேணும்னு என்னை இழுத்தடிக்கறேன்னு தோணுது" அப்பா ரகுபதி.

யமுனாவுக்கு உடல் நடுங்கியது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவ்வப்போது உரசல் வருவது சகஜம்தான். இருவரும் இணக்கமாயில்லை என்பதும் தெரியும்தான். ஆனால் விவாகரத்து வரை போய்விட்டதா?

அந்தப் பதினேழு வயதுப் பெண்ணின் மனதுக்குள் பூகம்பத்தைக் கிளப்பியது அந்த நிகழ்வு. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல், ஸ்கூட்டரை உருட்டிக் கொண்டு வெளியே வந்தாள். முகம் அந்திநேரச் செவ்வானமாய்ச் சிவந்திருந்தது. சடுதியில் கண்ணீர் உற்பத்தியாகி இமையை முட்டிக் கொண்டு நின்றது.

‘விவாகரத்தென்றால் அப்பாவும் அம்மாவும் தனித்தனி வீடுகளில் வசிப்பார்களோ? நான் யாருடன் இருப்பேன்? யாருடன் இருந்தாலும் அடுத்தவரைப் பார்க்க முடியாதோ? வெவ்வேறு திருமணம் செய்து கொள்வார்களோ? என்னை ஹாஸ்டலுக்குப் போகச் சொல்லி விடுவார்களோ?’ அவளுக்குள் ஏகப்பட்ட கேள்விகள்.

வண்டியிலேறி மனம் போகிற போக்கில் பத்துப் பதினைந்து நிமிடம் ஓட்டிய பின் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள கண்ணில்பட்ட ஐஸ்க்ரீம் கடைக்குள் நுழைந்தாள். ஏதோவொரு ஐஸ்கிரீமை கடமைக்கு ஆர்டர் செய்துவிட்டு உலகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் கண்ணை மூடிக் கொண்டாள்.

யமுனாவுக்கு ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. தன் பெற்றோர் ஏன் மற்றவர்களைப் போல இல்லை என்ற கோபம் தலையை நிறைத்தது. மூளை தீப்பற்றி எரிவது போல் வலித்தது.

வீட்டை விட்டு எங்கேனும் தூரமாய், முகம் தெரியாத இடத்துக்கு ஓடிப் போய்விடவேண்டும் போலிருந்தது யமுனாவுக்கு. ஆனால் யதார்த்தத்தில் அது நடக்காதென்பதால் தற்காலிகமாவது இந்தச் சூழலிலிருந்து தப்பிக்க வழி தேடியபோது விஜி நினைவுக்கு வந்தாள். கல்லூரியில் க்ளாஸ்மேட். லேப் பார்ட்னர் வேறு. இப்போதுதான் ஒரு மாதமாய்ப் பழக்கம். தனிப்பட்ட விதத்தில் பெரிதாகத் தெரியாவிட்டாலும் அலைவரிசை நன்றாக ஒத்துப்போவதால் நட்பு முளைவிட ஆரம்பித்திருக்கிறது. விஜி எல்லாவற்றையும் லேசாய் எடுத்துக் கொள்ளுவாள். கலகலவென்றிருப்பாள். அவளிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் இறுக்கம் குறைய வாய்ப்புண்டு.

அலைபேசியில் விஜியை அழைத்தாள். "விஜி, உனக்கு ஐஸ்க்ரீம் வேணுமா?"

"வாவ்! ஏதாவது ட்ரீட்டா? இல்லை, இளிச்சவாயன் யாராவது மாட்டினானா?" விஜிக்கு எப்போதும் எதிலும் நையாண்டி.

"க்ளாஸ் இல்லைன்னு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டமா, அதான் போரடிக்குது. தனியா ஒரு பார்லர்ல ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டிருக்கேன். உன் ஞாபகம் வந்தது" யமுனா தன் சோகம் குரலில் வெளிவந்துவிடாதபடி கவனமாய்ப் பேசினாள்.

"அப்போ எங்க வீட்டுக்கு வாயேன்டி. இன்னிக்கு நான் மட்டும்தான். அப்பா அம்மா கூட இல்லை"

யமுனாவுக்கும் அதுதானே வேண்டும்! பிகு செய்யாமல் ஒப்புக் கொண்டாள். முகவரி சொல்லி வழியை விளக்கியபின், "நானும் வெளிலதானிருக்கேன். கொஞ்சம் ஷாப் பண்ண வேண்டி இருக்கு. நீ எனக்கு முன்னால போனாலும் போயிடுவேன்னு நினைக்கிறேன். கேட் கூட பூட்டியிருக்கும். வெளில வெயிட் பண்ணு. நான் சீக்கிரம் வந்திடுவேன்" என்றாள் விஜி.

****
விஜியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது கேட் வெறுமனே சாத்தியிருந்தது. விஜி தனக்கு முன்னால் வந்துவிட்டாளென எண்ணிக் கொண்டே கேட்டைத் திறந்து வண்டியை நிறுத்தினாள். ஆனால் விஜியின் கைனடிக் ஹோண்டாவைக் காணாததில் சற்றுக் குழம்பி சுற்று முற்றும் பார்த்தவாறே வீட்டின் பிரதான கதவை அடைந்தாள்.

அவள் கதவை நெருங்கிய நொடியில் சரியாய்க் கதவு திறந்தது. சற்றே திடுக்கிட்டுப் பின் வாங்கியவள், கதவை அகலமாய்த் திறந்தபடியே, "வாங்க" என்றவனை சற்று மிரளலாய்ப் பார்த்தாள்.

"பயப்படாதீங்க, வாங்க. நானும் உங்களைப் போல திருட வந்தவன்தான்" அவன் சீரியஸாய்ச் சொன்னதும் மெல்லப் பின்வாங்கி ஓடத் தயாரானாள் யமுனா.

கடகடவெனச் சிரித்த அவன், "என்னங்க, இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். என்ன விக்க வந்தீங்கன்னு சொல்லுங்க" என்றான்.

அவன் தன்னை விற்பனைக்கு வந்த பெண்ணாக நினைத்துவிட்டதில் யமுனாவின் சுயமரியாதை காயம் பட்டது.

"நீங்க முதல்ல என்ன திருட வந்தீங்கன்னு சொல்லுங்க" என்றாள் கோபத்தோடு.

கேலியாய்ச் சிரித்து, "எங்க வீட்ல நான் ஏங்க திருடணும்?" என்றான் அவன் சிரிப்பு மாறாமல்.

"அது உங்க வீடா இல்லியான்னு இப்ப வீட்டுக்காரி வந்து சொல்லுவா. தைரியமிருந்தா தப்பிச்சு ஓடாம நில்லுங்க பார்ப்போம்" யமுனா அவனுக்கு சவால் விட்டபோது பின்னிருந்து விஜியின் ஆச்சர்யக் குரல் கேட்டது.

"நீ எப்படா வந்தே, தடியா?"

திரும்பிப் பார்த்த யமுனா திகைத்தாள்.

"யமுனா, இது எங்கண்ணா. பேரு விக்ரம். பைத்தியத்துக்குப் படிக்கிறான்" என்று விஜி சொன்னதும், "ஏய்…" என்று விளையாட்டாய் அவளைக் குத்த வந்தான் அவள் சகோதரன்.

"சரி… சரி… எம்.பி.பி.எஸ். முடிச்சிட்டு கீழ்ப்பாக்ல பி.ஜி சைக்யாட்ரில பண்றான்" என்று அறிமுகத்தை சற்று மாற்றிச் சொன்னாள்.

"நல்ல வேளை நீ வந்தே. இல்லைன்னா உன் ஃப்ரண்ட் என்னைப் போலீஸில பிடிச்சுக் கொடுத்திருப்பாங்க" என்றான் விக்ரம் யமுனாவைப் பார்த்தபடியே.

"அடடா, தெரிஞ்சிருந்தா லேட்டாவே வந்திருப்பேனே. சொல்லுடி, யமுனா… ஈவ் டீஸிங் கேஸ்ல உள்ள தள்ளிரலாமா?" விஜி தன் தோழியின் தோள் மேல் கைபோட்டபடி கேட்டாள்.

"ஸாரி" விக்ரமைப் பார்க்காமலேயே அவனிடம் மன்னிப்புக் கேட்டாள் யமுனா.

"தட்ஸ் ஆல்ரைட்" என்று சிநேகமான புன்னகையை வீசியவன் விஜியிடம், "அம்மாதாண்டி, நீ தனியா இருப்பேன்னு என்னை காவலுக்கு வரச் சொன்னாங்க. உங்கிட்ட சொல்லலை?" எனக் கேட்டான்.

"இல்லையே… எனக்கு நீ காவலா? ஹும்… எல்லாம் விதி. அது சரி, இன்னிக்கு யமுனா சாப்பிட்டுட்டுத்தான் போவா. சரியா ஏழு மணிக்கு டின்னர் ரெடியாகணும். சாமான்லாம் இதில இருக்கு" என்று ஷாப்பிங் பையை நீட்டினாள்.

"எஸ், மேம்" என்று பவ்யமாய்க் குனிந்து வாங்கிக் கொண்டான் விக்ரம்.

(தொடரும்)

About The Author