கண்ணில் தெரியுதொரு தோற்றம்

என்னுரை
————-

மனித மனங்கள் சிக்கலானவை; வரையறுத்தலுக்கும் ஊகித்தலுக்கும் அப்பாற்பட்டவை. இத்தனை அறிவியல் வளர்ச்சியிலும் மனித உணர்வுகளை முன்னறிவிக்கும் சமன்பாடுகள் இன்னும் முளைக்கவில்லை. இந்தக் கதையின் நாயகி யமுனாவுக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியாத வயது. பிரியத் துடிக்கும் தன் பெற்றோரை எப்படியேனும் அன்பால் இணைத்துவிட வேண்டும் என்று அவள் எடுக்கிற முயற்சிகளும் அந்த முயற்சிகள் தருகிற சோதனைகளும் அந்த சோதனைகளினூடாய் அவள் சந்திக்கிற மனிதர்களும் அந்த மனிதர்கள் தருகிற அனுபவங்களும்தான் இந்த நாவலைப் பின்னியிருக்கின்றன.

இந்தக் கதையில் நல்லவர்களென்றும் கெட்டவர்களென்றும் முத்திரை குத்தப்பட்டவர் எவருமில்லை. அன்பான தந்தையானாலும் நளினத்துக்கும் நயத்துக்கும் அதீத முக்கியத்துவம் தரும் ரகு, பொறுப்பான தாயானாலும் எவருக்காகவும் எதற்காகவும் தன்னை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லாத கங்கா, வயதுக்கு மீறிய அதிகப்பிரசங்கித்தனமிருந்தாலும் பெற்றோரின் நலம் விரும்புகிற யமுனா, முறையில்லாமல் காதல் வயப்பட்டாலும் அடுத்தவர்களைக் காயப்படுத்த விரும்பாத அஞ்சலி என்று என்னைப் போல, உங்களைப் போல நிறைகளும் குறைகளும் நிறைந்த சாமானிய மனிதர்கள்தான் பிரதான பாத்திரங்கள்.

வாழ்க்கை ஒரு மலரெனில் காதல்தான் அதில் தேன் என்பார்கள். காதலை ரசிக்காத மனிதர்கள் அபூர்வமாதலால் இந்த கதையில் வருகிற அத்தனை முக்கியப் பாத்திரங்களும் ஒரு காட்சியிலேனும் காதலிக்கிறார்கள். வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிற காதல் கதைக்கும் சுவை கூட்டியிருக்கிறதென்றுதான் எண்ணுகிறேன்.

‘காதல் குருடானதல்ல; அது ஆழமாய்ப் பார்ப்பதால் குறைகளைத் தவறவிடத் தயாராக இருக்கிறது’ என்கிறார் ஜுலியஸ் கார்டன் என்கிற அறிஞர். தன்னைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதேனும் இக்கட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் யமுனாவை விக்ரம் நேசிப்பதும் கங்காவின் வாழ்வில் முக்கியத் திருப்பத்தை அவன் அறியாமலேயே ஏற்படுத்துவதும் கூட இதன் அடிப்படையில்தான்.

காதல் மட்டுமல்ல, சில சமயம் அதிகம் அலட்டிக் கொள்ளாத நட்பும் கூட சுகமானதுதான் என்பது விஜியின் மூலம் வெளிப்படுகிறது. தன் தோழியின் குழறுபடிகளில் பங்கேற்காமல் இருப்பதே தான் அவளுக்குச் செய்யும் நன்மை என்று சில சந்தர்ப்பங்களில் ஒதுங்கி இருக்கும் விஜி, தேவையான சமயங்களில் முழு அக்கறையுடன் யமுனாவைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்கிறாள் பாசமாய்.

கண்ணில் தெரியும் ஆரவாரமான அலைகளைக் கொண்டு மட்டும் சமுத்திரத்தினை மதிப்பிட்டால் அதன் ஆழத்திலிருக்கும் அற்புதமான அமைதியை சுவைக்க இயலாமலேயே போய்விடும். அப்படித்தான் வாழ்க்கையை மேலோட்டமாய் வாழும் போதும் மேற்பரப்பின் கசடுகளில் சிக்கி கசப்பை மட்டுமே உணர நேரிடும். அவ்வாறு வாழும் காங்காவுக்கும் ரகுவுக்கும் துன்பம் ஒரு நல்லாசிரியனாய் வாழ்க்கையை, மனிதர்களை ஆழ்ந்து படிக்கக் கற்றுத் தருகிறது. அவர்கள் தத்தம் பாடங்களைக் கற்றுக் கொள்ளும் போது எதிரெதிர்த் திசையில் வெகு தூரம் பயணப்பட்டுவிட்டார்களா அல்லது உருண்டையான உலகம் அவர்களை மீண்டும் சந்திக்க வைத்ததா என்பதுதான் கதை.

ஒரு சிறுகதை எழுத வேண்டுமென்றாலும் கூட அதனை மனதில் வைத்து உருட்டித் தட்டி மெருகேற்றி எழுத்தில் கொண்டுவருவது ஒரு பிள்ளையைக் கருவுற்றுப் பத்து மாதங்கள் பொத்திப் பாதுக்காத்து ஊட்டம் கொடுத்துப் பிரசவிப்பது போலத்தானிருக்கும் எனக்கு. ஆனால் இந்த நாவல் எழுத நான் அதிகம் யோசிக்க வேண்டி இருக்கவில்லை. கடகடவென காட்சிகளும் வார்த்தைகளும் குதித்தோடி வந்து விழுந்தன அதிசயமாய். முதல் அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரை அதே வரிசையில் எழுதி முடித்த போது இந்த விந்தைக்கான காரணம் எனக்கே புரியவில்லை. இந்தக் கதையை ராணிமுத்துவில் படித்த நண்பர்கள் திரைப்படம் பார்த்தது போல விறுவிறுப்பாய் இருப்பதாய்ச் சொன்னபோது சுகப்பிரசவமானது போன்ற நிம்மதி.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு என்னை எழுத்தாளராய் அங்கீகரித்த சந்தியா பதிப்பகத்தின் மூலம் இந்த நாவல் நூலாய் வெளிவந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.

‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்’ எனது இரண்டாவது நாவல்தான். எழுத்துலகில் நான் கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் கடலளவு என்பதனை உணர்ந்தே இருக்கிறேன். ஒவ்வொரு படைப்பிலும் ஒரு அணுவேனும் சிறப்பாய்ச் செய்ய எப்போதும் முயன்று கொண்டே இருப்பேன் உங்கள் ஆதரவுடன்.

‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ தொடருக்கு நீங்கள் அளித்த வரவேற்பினை இங்கு நன்றியோடு நினைவு கூர்ந்து அடுத்த பயணத்துக்கு அன்புடன் அழைக்கிறேன்.

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

8 Comments

  1. PREMALATHA

    வணக்கம். உங்களின் நிலாச்சாரலில் அனைத்துப் பகுதிகளும் அருமையாக இருந்த வண்ணம் வந்து கொண்டிருந்தன. திடீரென்று இப்பொழுது அந்த கட்டுரைகள் எதுவும் வெளிவருவதில்லை. காரணம் என்ன? முக்கியமாக ரிஷி ராக்ஸ், ஸ்பெஷல்ஸ் பகுதியில் எழுதும் ஜோ, கவிதா, தேவிராஜன், மாயன் இவர்களின் பதிவுகள் எதுவும் வருவதில்லையே! எங்கே??????

  2. Nila

    பிரேமலதா,
    வணக்கம்.
    சொல்லும்படியான ஒரு காரணமுமில்லை. ஒவ்வொருவருக்கும் ஏதோவொருவிதத்தில் எழுத முடியாத நிலை. உங்களைப் போன்ற ரசிகர்களிடம் சொல்லிவிட்டு நிறுத்துங்கள் என்று நான் சொன்னேனே! 🙂

    வரவர எனக்கும் கூட போரடிக்கிறது. நிலாச்சாரலைக் கொஞ்ச நாளைக்கு நிறுத்தலாமா என்று யோசிக்கிறேன். என்ன நினைக்கிறீர்கள், வாசகர்களே?

  3. Nila

    என்ன செய்யறது, மாலீக்? நிலாச்சாரலை சிறப்பா நடத்தறதுக்கு இன்னும் ஆதரவு தேவை. சும்மா பேருக்கு நடத்த எனக்கு விருப்பமில்லை… யோசனையாத்தானிருக்கு…

  4. PREMALATHA

    நிலா வணக்கம், என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? தயவுசெய்து முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய தளம் மிகவும் அருமையாகவும், இந்த கால கட்டத்தில் அனைவரும் படிக்கும் ஒரு குடும்ப தளமாகவும் இருந்து வந்தது. அதை நிறுத்துகிறேன் என்று சொல்கிறீர்களே!!! மிக மிக நாகரீகமான முறையில் அனைவரையும் கவரும் தளமாக இருந்து வந்தது. ஏன் நம்ம ரிஷிக்கு என்ன ஆச்சு? ஏன் எழுதுவதில்லை? எங்களிடமெல்லாம் யாரும் சொல்லவில்லை!!! மாலீக் சொல்வது போல் தீர்ப்பை மாற்றவும்!!! :-))

  5. Nila

    எல்லாம் சரிதான், பிரேமலதா… ஆனால் எந்த ஒரு அமைப்புக்கும் வளர்ச்சி இருக்க வேண்டுமல்லவா? இத்தனை நாளும் நானும் எங்கள் குழுவும் எங்களால் முடிந்த வரை ஊட்டி வளர்த்தோம். குழந்தை எப்போதுமே குழந்தையாக இருந்தால் பெற்றோருக்கு சலித்துப்ப் போய்விடுமல்லவா. அப்படித்தான் எனக்கும் இருக்கிறது. நிலாச்சாரல் தன் காலில் நிற்க வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது. அதற்கான எத்தனயோ முயற்சிகளை நானும் எடுத்துப் பார்த்துவிட்டேன். நடக்கவில்லையே 🙁 அதனால்தான் இந்த யோசனை… பார்க்கலாம்…

  6. Kavitha

    பிரேமா,

    என் கட்டுரை வரும் வாரங்களில் பிரசுரமாகும். மற்றவர்களுக்கு சொந்த வேலைகள் காரணமாக எழுத முடியவில்லை. நானும் காத்திருக்கிறேன் அவர்களின் படைப்புகளுக்கு…

Comments are closed.