கண்ணில் தெரியுதொரு தோற்றம் -4

அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத யமுனாவுக்குத் தன் பெற்றோருக்கிடையிலிருந்த பிணக்கின் காரணம் புரிந்தாற்போலிருந்தது. ஆனால் அதனைத் தெரிந்து கொண்டிருக்காமலிருந்திருக்கலாம் என்றே தோன்றியது. தன் அன்னையின் மேல் திடீரென பச்சாதாபம் உண்டாயிற்று. ‘அப்பா இவ்வளவு மோசமானவராய் இருந்தால் பின் எப்படி அவரோடு வாழப் பிடிக்கும்?’

தன் தந்தை திருந்தினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் எப்படி அவரைத் திருத்துவது என்பதுதான் தெரியவில்லை. விஜியிடம் பேசினால் கொஞ்சம் தெளிவு வரும் போலிருந்தது.

விஜியை அலைபேசியில் அழைத்து, "வீட்டுக்கு வாயேண்டி" என்றாள்.

"குடுமி சும்மா ஆடாதே… என்ன விஷயம்னு சொல்லு" விஜி நேரடியாய் விஷயத்துக்கு வந்தாள்.

"ஃபோன்ல பேச முடியாது. நீ வர முடியுமா முடியாதா?"

"விக்கி கூட இன்னிக்கு சினிமா போறதா ப்ளான். நீ மூவி வர்றதா இருந்தா நான் உங்க வீட்டுக்கு வர்றேன்" என்ற விஜியிடம்

"ப்ளாக்மெயிலா?’ என்றாள் யமுனா ரசமான கோபத்தோடு.

"ஆமாம்" என்றாள் விஜி அழுத்தமாய்.

விஜிக்கு யமுனாவின் வீடு மிகவும் பிடித்திருந்தது. உள்ளே நுழைந்ததுமே தன் எண்ணத்தை வாய்விட்டுச் சொன்னவளிடம்,

"வீடெல்லாம் நல்லாதானிருக்கு. வீட்ல இருக்கற மனுஷங்கதான் சரியில்லை" சலித்துக் கொண்டாள் யமுனா.

"என்னாச்சு, அம்மணி?"

எப்படிச் சொல்வதென்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டவள், "எங்கப்பா சரியில்லைப்பா. அதான் அவங்களுக்குள்ள பிரச்சினைன்னு நெனைக்கிறேன்."

"சரியில்லைன்னா?"

"கெட்ட கெட்ட புக்ஸ், வீடியோஸ் எல்லாம் வச்சிருக்காருடி"

"ஓ… அதனால?"

"அதனால என்ன அதனால? எங்கப்பா இப்படி இருக்கறதுதான் எங்கம்மாவுக்குப் பிடிக்கலை போலிருக்கு. அவரை எப்படியாவது திருத்தணும். அதான் சைக்கியாட்ரிஸ்ட் யாரையாவது கன்ஸல்ட் பண்ணலாம்னு இருக்கேன்"

"நீ கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் பண்றியோன்னு தோணுதுடி… இதெல்லாம் பெரியவங்க விஷயமில்லையோ?" விஜிக்குத் தோழியின் செயல்களின் உடன்பாடில்லை என்பது தெளிவாய்த் தெரிந்தது.

"உங்க வீட்ல இப்படிப் ப்ராப்ளம்னா உனக்குப் புரியும். உனக்கு ஹெல்ப் பண்ண இஷ்டமில்லைன்னா ஒண்ணும் வேண்டாம்" என்று யமுனா பொங்கியதும் விஜி அவள் முகத்தை வெகு அருகில் ஆராய்ந்து,

"இந்தக் கோபம் மூக்கு நுனில இருக்கும்பாங்களே, தெரியுதான்னு பார்த்தேன்" என்றாள்.

பட்டென்று சிரித்த யமுனா "அப்புறமென்ன, என் நிலைமை தெரியாம நீ அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டே"

அவள் சொல்லிக் கொண்டிருந்த நேரம் அழைப்பு மணி ஒலித்தது.

"விக்கியா இருக்கும்டி" என்று விஜி சர்வசாதாரணமாய்ச் சொன்னதும்,

"என்னது?" என அதிர்ந்தாள் யமுனா.

"ஏன், விக்கி இங்கே வரப்படாதா?" என்று கிண்டலாய்க் கேட்டவள், "நீ கதவைத் திறக்கலைன்னா அவன் போயிடுவான். அப்புறம் மூவி அம்பேல்" என்றாள்.

‘நான் பக்கி மாதிரி இருக்கேன். இப்படியே போய் எப்படித் திறக்கறது. நீ போய் திற. நான் குளிச்சிட்டு ஓடி வந்திர்றேன்" என்று எழுந்து ஓடிப் போனாள் யமுனா.

விஜி படியிறங்குகையில், "ஏண்டி முன்னாலேயே சொல்லலை?" என்று யமுனா கத்துவது கேட்டது.

"நீ எங்கே சொல்ல விட்டே?" என்றபடியே கதவை நோக்கிப் போனாள் விஜி.

"ஹாய்" என்று பெரிய புன்னகையை உதிர்த்த விக்ரம், விஜியைக் கண்டதும், "ச்சீ நீயா?’ என்றான் முகத்தைச் சுருக்கி.

"ஏய்… என்ன மப்பா?" என்று எகிறிவிட்டு, "ஏந்தான் பொண்ணுங்கன்னா இப்படி வழியறீங்களோ தெரியலை. வா, வந்து தொலை" என்று வழிவிட்டாள்.

"எங்கே, யமுனாவைக் காணோம்?" என்று அவன் தேடியதும், "அலையாதே… வருவா" என்று சோஃபாவில் அமர்ந்தாள்.

"ஹௌ இஸ் யமுனா நவ்?" என்றபடியே அவனும் அவளெதிரில் அமர்ந்தான்.

"அதை ஏன் கேக்கறே… அது ஒரு பெரிய கதை" என்று அலுத்துக் கொண்டாள் விஜி.

பின் "ஏண்டா விக்கி, எல்லா ஆம்பளைங்களுமே இப்படித்தானா?" என்றாள் தன் சகோதரனை நோக்கி.

"சரியான மட்டித்தனமாக கேள்வி. ஒழுங்கா கேளு"

"இல்லை, யமுனாவோட அப்பா போர்ன் புக்ஸ், வீடியோஸெல்லாம் வச்சிருக்காராம். அதான் கேட்டேன். எல்லாமே இப்படி அலைஞ்சான்கள்தானான்னு"

"ஏன் இதெல்லாம் பாத்தா தப்பா?"

"ச்சீ… வெக்கமாயில்லை இப்படிப் பேச? இரு இரு அப்பாகிட்ட சொல்றேன்"

"தோ பார்றா… மதர் தெரேஸா… போ… போ… அவர் ரூம்ல போய்ப் பாரு. அப்ப தெரியும்"

"ஹாய்" என்றபடியே யமுனா மாடியிலிருந்து இறங்கி வந்தாள். வெளிர் நீல வண்ணச் சுரிதாரும், மஞ்சள் துப்பட்டாவும் அவளுக்கு நன்றாகப் பொருந்தியிருந்ததாய்ப் பட்டது விக்ரமுக்கு.

அருகில் வந்ததும் அவள் முகத்திலிருந்த ஒப்பனையைப் பார்த்ததும் விஜி, "நான் விக்கி பொண்ணு பாக்க வர்றான்னு சொல்லலையே" என்றாள்.

"ச்ச்சீ… போடி… வெளில போறமேன்னு கொஞ்சம் மேக்கப் போட்டேன்" என்றாள் தோழியின் தோளில் தன் முகத்தின் சிவப்பைப் புதைத்தபடி.

"உங்கப்பா மட்டமானவர்னா இந்த விக்கி அதைவிட கேவலமா இருப்பான் போலிருக்கு. பார்த்து பத்திரம். லவ் கிவ் பண்ணித் தொலைக்காதே" என்றாள் விஜி காட்டமாய் சகோதரனை வெறித்தபடி.

மருட்சியாய் யமுனா விக்ரமைப் பார்த்த பார்வை அவனுக்கு பரிதாபத்தை ஏற்படுத்திற்று.

"ஆண்கள் உலகத்தில இதெல்லாம் ரொம்ப சாதாரணம்" என்று சாவதானமாய் அவன் சொல்லவும் துணுக்குற்றாள் யமுனா.

"உடனே இவன் நம்மளை ரேப் பண்ணிருவாங்கற ரேஞ்சுக்கு ஒரு பார்வை பாக்கற பாத்தியா…" என்றான் அவள் மனதைப் படித்தவாறு.

"இல்லை… இல்லை" அவசரமாய் யமுனா மறுத்ததும், "அப்போ அதெல்லாம் பார்த்தா பரவாயில்லைங்கறியா, யமுனா?" என்றாள் விஜி எரிச்சலோடு.

"எனக்குக் குழப்பமா இருக்குடி"

"போடா… ஒரு பச்சைப் பிள்ளையை இப்ப்படிக் குழப்பிட்டே" என்றாள் யமுனா பெரிதாய் சிரித்து.

"இதான் ஸ்கூல்ல செக்ஸ் எஜுகேஷன் இருக்கணும்கறது" என்று விக்ரம் ஆரம்பிக்கவும்,

"ஐயோ… இங்கே உன் சகோதரி உக்காந்திருக்கேன்" என்று காதைக் கைகளால் பொத்திக் கொண்டாள் விஜி.

"நீ கொஞ்ச நேரம் மேல போய் இரு. நான் யமுனாகிட்ட பேசிக்கறேன்" என்று அவன் சொன்னதும் எழுந்த விஜியின் கையை இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டாள் யமுனா

அதனைக் கவனித்த விக்ரம், "தாயே, இந்த லூசு மேல சத்தியமா உன்னை நான் ஒண்ணும் செய்ய மாட்டேன். விபரம் தெரியாம நீயும் குழம்பி குடும்பத்தையும் குழப்பிக்கறதைத் தடுக்கறதுக்கு டாக்டரா நான் ஒரு சின்ன லெக்சர் தரப் போறேன். அவ்வளவுதான்." என்று அவன் உறுதி தந்ததும் தன் பிடியைத் தளர்த்தினாள் யமுனா.

(தொடரும்)

About The Author