எட்டரைவாக்கில் யமுனா வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு நிசப்தமாய் இருந்தது. கார்கள் இல்லாதது கண்டு பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லை எனத் தெரிந்து கொண்டாள். நிம்மதியாய் இருந்தது.
ஷவர் தந்த புத்துணர்ச்சியுடன் பாத்ரூமிலிருந்து வெளி வந்தவள், அலைபேசியை ஆன் செய்தாள். காத்திருந்தது போல் சிணுங்கியது.
"எவ்ளோ நேரமா ட்ரை பண்றேன். பயந்தே போயிட்டேன், யமுனா. சொல்றதில்லையா?" கங்கா.
"பேட்டரி டௌன்." விறைப்பாய் பதில் சொன்னாள் யமுனா.
"இப்போ எங்கே இருக்கே?"
"வீட்டுக்கு வந்து ஒரு மணி நேரமாச்சு." பொய் சொன்னாள்.
"சாப்பாட்டுக்கு என்ன பண்ணினே?"
"நான் ஃப்ரண்ட் வீட்ல சாப்பிட்டுட்டு வந்திட்டேன்"
அம்மா, அப்பாவைப் பற்றிக் கேட்காதது உறுத்தியது. அதற்கு மேல் பேசப் பிடிக்காமல் அவள் அமைதியாக இருக்க,
"ஸாரிடா… நீ ரொம்ப நாளா நான் செய்யற மைசூர்பாகு வேணும்னு கேட்டுட்டிருந்தியேன்னு அரை நாள் லீவுபோட்டுட்டு வீட்டுக்கு வந்திருந்தேன். ஆஃபீஸ்ல ஒரு எமர்ஜென்ஸின்னு திரும்பி வரவேண்டியதாப் போச்சு"
".. .. .."
"கோபமா, தங்கம்?"
"இல்லை. தூக்கம் வருது" என்று சொல்லித் துண்டித்தாள்.
கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. "யமுனா… " ரகுபதி.
யமுனா தன் அறையின் கதவை உட்பக்கமாய்த் தாளிட்டுக் கொண்டாள்.
ரகுபதி வெகு நேரம் கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். "சாப்பிடாமப் படுக்கக் கூடாதுடா, யமுனா. உனக்குப் பிடிச்ச சைனீஸ்டா" அவரது கெஞ்சலைப் பொருட்படுத்தாமல் பிடிவாதமாய்ப் படுக்கையில் படுத்திருந்தாள் யமுனா.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்து, "யமுனா… " என்றார் சற்று அதட்டலாய் கதவைப் பலமாகத் தட்டியபடி.
"சாப்பிட்டேம்பா… ரொம்ப டயர்டா இருக்கு. தூங்கிட்டேன்… ஸாரி" உள்ளிருந்தபடியே உறக்கக் கலக்கத்தில் பேசுவதாய் பாவனை செய்தாள் மகள்.
"ஸாரிடா… தூங்கு. குட்நைட்" வாஞ்சையாயத் தந்தை சொன்னபோது சட்டென்று மனசு இளகிற்று.
தன் மேல் தன் பெற்றோர் வைத்திருந்த அலாதிப் பிரியம் அவளை மேலும் வதைத்தது. அந்த அன்பினை, அரவணைப்பினை அவள் இழந்துவிடத் தயாராக இல்லை. எப்படியாவது அவர்களிருவருக்குள்ளிருக்கும் கசப்பினை நீக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உறங்கப் போனாள்.
கல்லூரி மதிய இடைவேளையில் கேன்டீனில், "இன்னிக்குத் தனியா உட்காரலாம், விஜி. எனக்கு உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று தனி டேபிளுக்கு அழைத்துப் போனாள் யமுனா.
"ஏன் எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிடிக்காமப் போயிருக்கும்?" என்று எடுத்த எடுப்பில் கேட்ட யமுனாவிடம்,
"அடடா, எனக்கு ஜோசியம் தெரியாதே!" என்றாள் விஜி சப்பாத்தியை வாயில் மென்றபடியே.
"மண்டூ… என்னெல்லாம் காரணம் இருக்கலாம்னு சொல்லுடி"
"ஓ… ஆல்ரைட்" என்றவள் யோசித்து,
"ரெண்டு பேருக்கும் வேற வேற தேவைகள் இருக்கலாம்"
"எப்படி?"
"உதாரணத்துக்கு உங்கம்மாவுக்கு பணம் முக்கியமா இருக்கலாம். உங்கப்பாவுக்கு என்ஜாய்மென்ட் முக்கியமா இருக்கலாம்"
"ம்ம்ம்… வேறே?"
"உங்கம்மா அல்லது அப்பா யாருக்காவது வேற ஒரு லவர் இருக்கலாம்"
யமுனா முகம் சுளித்தாள் "நோ…நோ… வேற சொல்லு"
"ரெண்டு பேருக்கும் ஜஸ்ட் பிடிக்காமப் போயிருக்கலாம்"
"அதெப்படிடி?"
"இப்பப் பாரேன்… கொஞ்ச நாளைக்கு முன்னால மன்மதராசா பாட்டை ஒரு நாளைக்கு இருபது தடவையாவது கேப்பேன். இப்போ அதைக் கேட்டாலே அலர்ஜியா இருக்கு. அப்படித்தான். ஜஸ்ட் பிடிக்காமப் போகும்"
"ம்ம்… இதை எப்படி சரி செய்யறது?"
"ரொம்பக் கஷ்டம்னு நெனைக்கிறேன். பிடிக்கலைன்னா பிடிக்கலை. இதை எப்படி சரி செய்ய முடியும்னு எனக்குத் தெரியலை"
"எனக்கு எப்படியாவது எங்கப்பாவும் அம்மாவும் சேர்ந்து இருக்கணும்னு இருக்கு. உனக்கு ஏதாவது ஐடியா தோணிச்சின்னா சொல்லு. ஓகே?"
"ரைட்… ‘இங்கே பிரிந்த ஜோடிகள் சேர்த்து வைக்கப் படுவார்கள்’ அப்படின்னு யாராவதொரு சாமியார் போர்டு வச்சிருக்காரான்னு பார்க்கறேன்" என்றாள் விஜி அவளது வழக்கமான மத்தாப்புப் புன்னகையோடு.
ஒரே யோசனையாயிருந்தாள் யமுனா. ஏதாவது காரணமிருந்தால் சரி செய்யலாம். காரணமே இல்லாமல் பிடிக்காமல் போயிருந்தால்தான் பிரச்சினை. எப்படித் தெரிந்து கொள்வது? மணி பார்த்தாள். காலை பத்து. சனிக்கிழமையாதலால் ரகு க்ளப்புக்கு டென்னிஸ் ஆடப் போய்விட்டார். கங்காவுக்கு விடுமுறை என்றாலும் அவள் வழக்கம்போல அலுவலகம் சென்றிருந்தாள்.
தன் தந்தை மதிய உணவு முடித்துவிட்டுத்தான் வருவார் என்பதை அறிந்திருந்ததால் ரகுவின் அறைக்குள் சுதந்திரமாய் நுழைந்தாள். அப்பாவும் அம்மாவும் தனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து தனித்தனி அறைகளில்தானிருக்கிறார்கள் என்பது அவளுக்கு அப்போதுதான் உறைத்தது.
வார்ட்ரோபைத் திறந்தாள். ஆடைகள் அழகாய் அயர்ன் செய்யப்பட்டு ஹாங்கரில் அதீத ஒழுங்குடன் தொங்கிக் கொண்டிருந்தன. அப்பாவின் ஆடை தேர்வு அவளுக்கு எப்போதுமே பிடிக்கும். மேஜை ட்ராவைத் திறந்தாள். சொல்லிக் கொள்ளும் படி ஒன்றுமில்லை. கொஞ்ச நேரம் மேய்ந்துவிட்டு, ‘இந்த அப்பா சரியான திறந்த புத்தகம் போலிருக்கிறது’ என்று நினைத்தபடியே வெளியேற யத்தனித்தவள், ஏதோ உறைக்க, நாற்காலியைத் தூக்கிவந்து வார்ட்ரோபுக்கு மேலே இருந்த அலமாரியைத் திறந்தாள். அடுக்கிவைக்கப்பட்டிருந்த வழ வழ பத்திரிகைகளை எடுத்தவளுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அத்தனையிலும் ஆபாசப் படங்கள்.
அவற்றை எடுத்த இடத்தில் வைத்தவள் இடது புறமிருந்த வீடியோ கேசட்டுகளை ஆராய்ந்தாள். அவற்றின் முகப்பிலும் அரைகுறை மங்கையரின் படங்களே இருக்க, அருவருப்பில் முகம் சுளித்தபடியே அவள் வந்த சுவடுகளை அழித்துவிட்டு அறைக்குத் திரும்பினாள்.
(தொடரும்)”