நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாய் நடந்தது. அஞ்சலியை ஒரு பிரச்சினையாக விக்ரமின் பெற்றோர் எண்ணாதது அனைவருக்குமே பெரிய நிம்மதியைத் தந்துவிட்டிருந்தது. அஞ்சலி தயங்கினாலும் யமுனாதான் அவளை வற்புறுத்தி நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள வைத்திருந்தாள். ஜென்னியிடம் விக்ரம் யமுனாவை அறிமுகப் படுத்திய போது இருவரையும் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
"உன்னால நாங்க பிரிஞ்சோமா சேர்ந்தாமோன்னா தெரியலை… அவ்வளவு குழப்பம்" என்றான் விக்ரம் ஜென்னியிடம்.
நிச்சயம் ஆனதற்கு அடுத்த நாள் கங்கா – ரகு விவாகரத்துக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயின. மூன்று மாதத்தில் கோர்ட் சம்பிரதாயங்கள் முடிந்துவிடும் என்றார்கள். ரகுவும் அஞ்சலியும் திடீரெனக் கிடைத்துவிட்ட சுதந்திரத்தில் கட்டற்றுப் போகாமல் பொறுப்பாய் நடந்து கொண்டார்கள். கங்காவிடம் இது விஷயத்தில் ஒரு விட்டேற்றித்தனம் வந்துவிட்டிருந்தது. தன் அமெரிக்கப் பயண ஏற்பாடுகளில் பரபரப்பாய் இருந்தாள் கங்கா.
விக்ரம் தன் யு.கே விசா ஏற்பாடுகளில் தீவிரமாய் இறங்கிவிட, யமுனா மட்டும் அவனைச் சுற்றி வருவதையே குறிக்கோளாய் வைத்துக் கொண்டிருந்தாள்.
"ஏண்டி இப்படிப் படுத்தறே?" என்று விக்ரம் சில சமயம் அலுத்துக் கொள்ளும் போதெல்லாம்,
"லவ் பண்றேன்னு பேரு. உன்னைப் பார்க்கறதுக்கே கெஞ்ச வேண்டிருக்கு. யுகே போனப்பறம் தினமுமா பாக்க முடியும்? பக்கத்தில இருக்கும்போதாவது கொஞ்சம் கொஞ்சலாமில்லை?" என்று அவள் ஏக்கமாய்ச் சொல்லும்போது மனசு இளகிப் போகும் அவனுக்கு.
அப்படி பார்க்க வருகிற போதெல்லாம், "என்னைக் கல்யாணம் பண்ணி உன் கூட கூட்டிட்டுப் போயேன். நான் சமத்தா இருப்பேன்" என்பாள்.
"உதை படப் போறே… ஒழுங்கா படிச்சு முடிக்கிற வழியைப் பாரு. இப்படி உன் மனசு அலைபாயும்னுதான் நான் நாளைக் கடத்தினேன்" என்பான் அவன்.
"ஏதோ அஞ்சலிம்மா புண்ணியத்திலே எங்கேஜ்மென்ட் நடந்தது. இல்லைன்னே ஒண்ணும் சொல்லாம யுகே போயிருப்பேதானே?"
"ம்ஹும். போற அன்னைக்கு உன்னைப் பார்த்து பொறுப்பாப் படிச்சிட்டு எனக்காக வெயிட் பண்ணச் சொல்லி சொல்லிட்டுப் போயிருப்பேன்"
"அப்பவும் லவ் பண்றதா சொல்லிருக்க மாட்டியா?"
"பைத்தியம்… பைத்தியம்… வார்த்தையால சொன்னாத்தானாச்சா?"
"அப்போ எப்படிச் சொல்லணுமோ அப்படிச் சொல்லேன் இன்னொரு முறை" என்பாள் குறும்புச் சிரிப்போடு அவன் சட்டைப் பட்டனைத் திருகியபடியே.
***
ரகு விக்ரமைத்தான் முதலில் அழைத்தார்.
"அஞ்சலிக்கு ஸ்ட்ரோக்னு சொல்றாங்க, விக்கி. எனக்கு பயம்மா இருக்கு"
விக்ரம் மற்றவர்களைக் கலவரப்படுத்த விரும்பாமல் அவர் சொன்ன மருத்துவமனைக்கு உடனே சென்று சேர்ந்தான்.
"திடீர்னு மயங்கி விழுந்துட்டான்னு வேலைக்காரி முகத்தில தண்ணி தெளிச்சிப் பாத்திருக்கா. அரை மணி நேரமா எழுந்திருக்கலைன்னதும் எனக்கு ஃபோன் பண்ணினா. நான் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி ஆம்புலன்ஸை அனுப்பிட்டு நேரா ஹாஸ்பிடல் வந்தேன். கொஞ்சம் சீக்கிரம் கொண்டு வந்திருந்தா முழுசா சரி பண்ணிருக்கலாம்கறாங்க" என்றார் கலக்கத்தோடு.
விக்ரம் மருத்துவர்களைப் பார்த்துப் பேசிவிட்டு வந்தான்.
"பாதிப்பு அதிகமா இருக்கும் போலருக்கு, அங்கிள். ட்ரீட்மென்ட் நடந்துக்கிட்டுதானிருக்கு. அவங்க ரிலேடிவ்ஸுக்கு சொல்லிட்டீங்களா?"
"இல்லை, விக்கி. எதுவும் ஓடலை. அவளோட பேரன்ட்ஸ், எக்ஸ்-ஹஸ்பெண்ட், ரெண்டு டாட்டர்ஸ் எல்லாருக்கும் சொல்லணும். உயிருக்கொண்ணும் இல்லையே" ரகு ஆடிப் போயிருந்தார்.
விக்ரம் நிதானித்து வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்து பதில் சொன்னான், "உயிருக்கு ஆபத்தொண்ணுமிருக்காது, அங்கிள். ஆனா எவ்வளவு ஆக்டிவா இருப்பாங்கன்னு சொல்லமுடியாது"
"உங்க ஹாஸ்பிடலுக்கு வேணா கொண்டு போயிரலாமா?"
"தேவை இல்லை, அங்கிள். அப்பாவை அழைச்சிட்டு வந்து டாக்டர்ஸ்கிட்டே பேச வைக்கிறேன்"
எவ்வளவு தேடியும் அஞ்சலியின் குடும்பத்தாரின் தொடர்பொன்றும் கிடைக்காமல் போக அவள் தன்னை வேண்டுமென்றெ தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று பட்டது. ஒரு வேளை இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ!
இரு தினங்களுக்குப் பின் அஞ்சலி கண்விழித்த போது, ரகுவோடு கங்கா, யமுனா, விக்ரம் மற்றும் மங்கை இருந்தனர்.
டாக்டர், "உங்க பேரு நினைவிருக்காம்மா?" என்று கேட்டபோது மலங்க மலங்க விழித்தாள்
"நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியுதா?" எனக் கேட்டபோது பார்வையால் அறையைத் துளாவினாள். பின் எதுவும் புரியாத இயலாமையில் கண்ணோரத்திலிருந்து நீர் கசிந்தது. பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் மனதைப் பிசைந்தது. ரகு துக்கத்தை மென்று விழுங்கினார்.
"இவங்க யாருன்னு தெரியுதா?" யமுனாவைக் காட்டிக் கேட்டார்
கண்களில் பரபரவென்ற தேடல் தெரிந்தது. பின் சோகம் கவிந்து கொண்டது
ஒவ்வொருவராய்க் காட்டி அவர் கேட்டபோதும் அதே போல நடக்க, விழிகளின் பிரவாகம் மட்டும் அதிகரித்துக் கொண்டே வந்தது.
கடைசியாய் ரகுவைக் காட்டி, "இவர்?" என மருத்துவர் கேட்டபோது, கண்ணில் சின்ன மின்னலோடு, "ழகு" என்றாள் குழறலாய்
ரகு அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் சட்டென்று வெளியேறி கைகளில் முகத்தைத் தாங்கி விசிக்கலானார். விக்ரம் அவரோடு வெளியேறி அவர் தோள்களை ஆறுதலாய் அணைத்துக் கொண்டான்.
"அவளுக்குத் தன் பேரு கூடத் தெரியலை. ஆனா என்னை மட்டும் தெரிஞ்சிருக்கு, பாருங்க" அவளன்பின் ஆழத்துக்குள் புகுந்து எழுந்து வந்தவர் போல உணர்ச்சிவசப்பட்டிருந்தார்.
கங்கா மறுநாள் அமெரிக்கா கிளம்பவேண்டும். மருத்துவமனை சென்ற போது ரகு அஞ்சலிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். பார்வையால் அவள் வருகையை அங்கீகரித்துவிட்டு, மௌனமாய்த் தன் வேலையைத் தொடர்ந்தார். அவள் சாப்பிட்டானதும், அருகிலிருந்த துண்டால் அவள் வாயைத் துடைத்துவிட்டு, தலையணையைச் சாய்த்து அவளைப் பூப்போல கிடத்திவிட்டு எழுந்து வெளியேறினார். சின்ன முகக் குறிப்பில் அவளையும் வெளியில் வரும்படி அழைத்தார்.
கங்கா உடனே அவரைத் தொடராமல், அஞ்சலியின் தலையைப் பரிவுடன் வருடினாள். "பை அஞ்சலி" என்று அவள் அன்பாய்ச் சொன்னதை கதவருகில் நின்று நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ரகு.
வெளியில் வந்ததும், "தாங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட்னஸ்" என்று அவர் சொன்னதைப் பொருட்படுத்தாமல், "நாளைக்கு நான் கிளம்பறேன்" என்றாள் அவர் பார்வையை சந்திக்காமல்.
"ஓ… ஆல் த பெஸ்ட்" என்ற ரகு அவள் முகத்தை வெகு நாட்களுக்குப் பின் ஆழ்ந்து கவனித்தார். காதோர நரையும் முகத்தின் சுருக்கத்தின் ரேகையும் அவருக்கு அந்நியமாய்த் தோன்றின. ஆனாலும் முகத்தில் காலத்தின் கோலங்களை மீறிய ஒரு வெளிச்சம் இருந்தது. அறிவுக் களையோ? தன்னம்பிக்கையின் பிரதிபலிப்போ?
அவரை சுயநினைவுக்கு இழுத்து வந்தன கங்காவின் வார்த்தைகள்: "நீங்க அஞ்சலியை வீட்டுக்குக் கூட்டிவர வசதியா நான் என் ஜாமானையெல்லாம் வேற அபார்ட்மென்டுக்கு மாத்திட்டேன்" நெஞ்சில் குளிர் தண்ணீர் பட்டாற்போன்று சிலிர்த்தது ரகுவுக்கு. சில சமயம் அதீத அன்பு கூட வலிக்கிறது. அவர் கூட யோசித்திராததை அவள் அஞ்சலிக்காய் யோசித்திருக்கிறாள். அவளின் பெருந்தன்மையில் அவரது வார்த்தைகள் கட்டுண்டன.
தலையசைக்கக் கூடத் திராணியின்றி மரமாய் நின்றவரை நிமிர்ந்து பார்த்து, "நான் போறேன்" என்றாள் ஆயிரம் அர்த்தங்களை அந்த வார்த்தைகளில் பொதித்து. அரைகணம் சந்திந்துக் கொண்ட அவர்களின் பார்வைகள் வார்த்தைகள் சொல்லாதவற்றை அவசரமாய்ப் பரிமாறிக் கொண்டு சடுதியில் பிரிந்தன.
(தொடரும்)