"வெள்ளிக் கிழமை சாயந்தரம் அந்த பிரபாகர் வீட்டுக்கு வர்றாண்டி. தனியா பேசினப்பறமும் பிடிச்சிருந்துதுன்னா அவங்க அப்பா, அம்மால்லாம் அப்புறம் வருவாங்களாம்" என்று சுரத்தே இல்லாமல் சொல்லிய யமுனாவிடம்,
"நீ விக்கிகிட்டே பேசவே இல்லையா?" என தன் நிம்மதிக்ககக் கேட்டு வைத்தாள் விஜி.
"ப்ச்… இனிமே அதையெல்லாம் பேசிப் பிரயோஜனமில்லை. வெள்ளிக் கிழமை நீ காலேஜ் முடிஞ்சதும் என்கூட வீட்டுக்கு வா"
"அவன் கூட தனியாத்தானேடி பேசப்போறே? அப்புறம் நானெதுக்கு?"
"டென்ஷனா இருக்குடி. நீ இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்"
விஜி தன் சகோதரனிடம் தெரிவிப்பதா வேண்டாமா என பலவிதங்களில் யோசித்து டூ லேட் என விட்டுவிட்டாள். ஆனால் இதில் ஏதோ தவறிருக்கிறது என்ற உறுத்தல் மட்டும் அவள் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.
வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்த விக்ரம் மங்கை பத்திரிகை படித்துக் கொண்டு ஓய்வாய் அமர்ந்திருந்ததைக் கண்டு, "என்னம்மா அதிசயமா இருக்கு? நீங்க வீட்ல இருக்கீங்க… வீடு அமைதியா இருக்கறதைப் பார்த்தா மகாராணி வீட்ல இல்லை போலிருக்கு?" என்றான்.
"விஜி யமுனா வீட்டுக்குப் போயிருக்கா… அவளை இன்னிக்கு பொண்ணு பார்க்க வர்றாங்களாம்" என்றார் மங்கை கையிலிருந்த பத்திரிகையிலிருந்து கண்ணெடுக்காமல்.
அதிர்ச்சியான விக்ரம், "என்னது? யமுனாவைப் பொண்ணு பார்க்க வர்றாங்களா?"
"ஆமாடா" என்றார் அவன் கதை படிக்கவிடாமல் தொணதொணப்பதில் சற்று எரிச்சலாகி.
பையை அங்கேயே விட்டுவிட்டு "நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேம்மா" என்று அவன் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் கதையில் அமிழ்ந்தார் மங்கை.
***
அழைப்பு மணியின் ஒலிக்கு கதைவைத் திறந்த கங்கா, பிரபாகருக்கு பதில் விக்ரம் நிற்பதைக் கண்டு தடுமாறி, "விஜியை அழைச்சுட்டுப் போக வந்தீங்களா?" என்றாள்.
"யமுனாகிட்டே பேசலாம்னு வந்தேன்" என்றான் துளியும் தயக்கமில்லாமல்.
கங்கா முகம் இருண்டு "ஸாரி, இது சரியான நேரமில்லை" என்றாள்.
சத்தம் கேட்டு மாடியிலிருந்து எட்டிப்பார்த்த விஜி, "நீ ஏண்டா இந்த நேரத்தில இங்கே வந்தே?" என பதறினாள்.
"யமுனாவைக் கூப்பிடு. அவகிட்டே பேசணும்" பிடிவாதமாய் அவன் சொல்ல, "நௌ இஸ் நாட் எ குட் டைம். நீ வீட்டுக்குப் போ. அப்புறம் பேசிக்கலாம்" என்று அவனின் கையைப் பிடித்து வெளியில் இழுத்துப் போக முற்பட்டாள்.
மாடியிலிருந்து இறங்கி வந்த ரகு குழம்பி, "மிஸ்டர் பிரபாகர்?" என்றார் அவனைக் கேள்விக் குறியோடு பார்த்து.
"ஸாரி. என் பேர் விக்ரம். விஜியோட ப்ரதர். யமுனாகிட்டே கொஞ்சம் பேசணும்" அவன் கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். சொன்னதோடு நிற்காமல், "மாடிலதானே இருக்கா?" என சுவாதீனமாய் மாடி ஏறினான். பெற்றோர் இருவரும் திகைத்து நிற்க, அவன் பின்னாலேயே ஓடிய விஜி, "தகராறு பண்ணாதே, விக்கி" என்றாள் அவனைத் தடுத்து நிறுத்தி.
"என்னை நல்லாப் பாருங்க. என்னைப் பார்த்தா பொறுக்கி மாதிரியா தெரியுது? ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். கண்டிப்பா இதுக்காக யாரும் வருத்தப்பட மாட்டீங்க, ப்ராமிஸ். இப்போ நான் பேசலைன்னா பின்னால யமுனா ரொம்ப வருத்தப்படுவா" என்றான் அனைவரையும் பார்த்து.
அவன் மேல் நம்பிக்கை ஏற்பட்டாற்போல ரகுவும் கங்காவும் பேசாமலிருக்க, விஜி தயக்கத்துடன், "இந்த ரூம்" என கை காட்டினாள்.
லேசாய் சாத்தியிருந்த கதவை அறிவிப்பில்லாமல் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவனைக் கண்டதும் யமுனா திடுக்கிட்டெழுந்தாள்.
"நீ… எப்படி இங்கே?"
அவன் தனக்குப்பின் கதவை இறுக்கமாய் சாத்திவிட்டு, அவளை நெருங்கி, "வேறொருத்தனை கல்யாணம் பண்ணிக்கப் போறியா நீ?" என்றான் அவள் கண்ணுக்குள் பார்த்து.
அவள் பின்னால் நகர்ந்து கொண்டே, "ஆமா… அதனால உனக்கென்ன?" என்றாள்.
"ரைட், அன்னைக்கு நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமப் போயிடுச்சு. இன்னிக்கு அதை மட்டுமாவது சொல்லிட்டுப் போறேன்." என்றவன் தொடர்ந்து, "நீ பைக்ல என்னோட பார்த்த ஜென்னி என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவ்வளவுதான்" என்றான்.
"ஆஹாஹா… அதான் முக்காடு போட்டு மறைச்சு கூட்டிட்டுப் போனியாக்கும்?"
"பொல்யூஷனுக்காக நீ முக்காடு போட்டுக்கறதில்லை?" என அவன் கேட்கவும் விட்டுக் கொடுக்காமல், "அப்படியே வச்சுக்குவோம். அதென்ன அவ்வளவு உல்லாசமா உரிமையா தோள்ல சாஞ்சிக்கிட்டு காலேஜ்ல சுத்தறது?" கடுப்பாய் அவள் கேட்டதும் நெற்றி சுருக்கி, "காலேஜ் வந்திருந்தியா?" என்றான்.
"ஆமா. உன்னையும் அவளையும் பார்த்தேனே! சும்மா சொல்லக் கூடாது. மேட் ஃபார் ஈச் அதர்" என வெறுப்பேற்றினாள்.
அவன் அவளைச் சட்டென்று நெருங்கி இறுக்கமாய்த் தழுவி, "அவளை இப்படிக் கட்டிப்புடிச்சதைப் பாத்தியா?" என்றான்.
யமுனா அதிர்ச்சியில் செயலற்று நின்றிருந்தாலும் தலை இல்லை என்றாடியது. அவள் முகத்தைக் கையிலேந்தி ரசித்து அவள் அதரங்களில் முத்தமிட்டு நிமிர்ந்து, "இப்படி முத்தம் தந்தேனா?" என்றான்.
யமுனா கண்கள் சொக்கிய பரவச நிலையில் தடுக்கத் தோன்றாமல் இல்லை எனத் தலையசைத்தாள்.
"பின்னே? எதைப் பார்த்து நாங்க லவ் பண்றோம்னு நீ முடிவு பண்ணினே?"
அவள் பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். கால்கள் ஜெல்லி போல துவள அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
"ஜென்னி லண்டன்ல பொறந்து வளர்ந்த ஆங்கிலோ இண்டியன். அவளுக்கு ஃப்ரண்ட்ஸ்ல ஆண், பொண்ணுன்னெல்லாம் பிரிச்சு வித்தியாசம் பாக்கத் தெரியாது. அவளுக்கு பெங்களூருல ஒரு பாய்ஃப்ரண்ட் இருக்கான். நீ இப்படி நினைச்சதுக்கே உன்கிட்ட சண்டைக்கு வருவான்" என்று தன் தரப்பு விளக்கத்தை எடுத்து வைத்தான்.
அதோடு நில்லாமல் ஜென்னியை அலைபேசியில் அழைத்து யமுனாவிடம், "கேளு" என நீட்டினான். அவள் வாங்கிக் கொள்ளாமல் ஒரு மிரளலான பார்வை பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு, "ஏய், ஜென்னி… பாரு, உன்னால எனக்கு எவ்வளவு தொந்தரவு. நீ என் தோள் மேல சாஞ்சிருந்தேன்னு யமுனா வேற கல்யாணம் பண்ணிக்கப் போறேங்கறா. எனக்குத் தெரியாது நீதான் இதை சரி பண்ணணும். அவகிட்ட தரேன்" என்று ஜென்னியிடம் பேசிவிட்டு திரும்ப அலைபேசியை நீட்டினான்.
யமுனா தட்டமுடியாமல் "ஹலோ" என, ஜென்னி வெகுநாள் தெரிந்த தோழி போல், "ஹலோ டார்லிங்" என விளித்து ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினாள்: "ஸாரி, யமுனா. என்னால நிறைய குழப்பம் போலிருக்கு. வெளிநாட்டுப் பொண்ணுன்னா எப்படி யூஸ் பண்ணிக்கலாம்னுதான் நெறையப் பேர் நினைக்கறாங்க. விக்கி வித்தியாசம். நல்ல பையன். அதான் எனக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். மை பெஸ்ட் ஃப்ரண்ட் இன் இண்டியா. ஆனா அவனைவிட எனக்கு ரயனைப் பிடிக்கும். என் பாய் ஃப்ரண்ட். பேங்களூர்ல இருக்கான்"
"ம்"
"க்ளியரா இருக்கா?"
"ம்"
"அவனை கெட்டியா பிடிச்சிக்கோ. இங்கே நிறையப் போட்டி இருக்கு"
"தேங்க்ஸ்"
"இட்ஸ். ஆல்ரைட். குட் லக்" என வைத்தாள் ஜென்னி.
அவளையே குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டிருந்தவன், "நம்பிக்கை வந்தாச்சா?" என வினவினான்.
அவள் பதில் பேசாததைக் கண்டு, "இன்னும் நம்பிக்கை வரலைன்னா மாயாவுக்கு மெயிலனுப்பி கேளு அவகிட்ட என்ன சொன்னேன்னு?"
"என்ன சொன்னே?"
அவன் நேரடியாய் பதில் சொல்லவில்லை.
"பாரு, எனக்கு அம்பிஷன் இருக்கு. உன் பின்னால மட்டும் என்னால அலைஞ்சிக்கிட்டிருக்க முடியாது" என்றான்.
"நீ இன்னும் சொல்லவே இல்லை"
"என்னது?"
"நீ என்னை லவ் பண்றேன்னு சொல்லவே இல்லை" என்றாள் அவனை ஏக்கத்துடன் பார்த்து.
அவன் குனிந்து அவளை முத்தமிட்டு, "இப்படிச் சொன்னேனே? பத்தாதா?" என்றான் காதலுடன்.
அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து, "இன்னொரு முறை சொல்லு" என்றாள் யமுனா உரிமையோடு.
(தொடரும்)
wow…wat a lov story…pullarikkithu…
Super madam, very nice