திடீரென்று மூன்று தினங்களாக ரகுவின் அஞ்சல் வராமல் போக, தவித்துப் போனாள் கங்கா. கடந்த ஆறு மாதங்களில் எப்போதும் இது போல நடந்ததில்லை. அஞ்சல் அனுப்ப இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் முன்னறிவித்துவிடுவாரே!
யமுனாவிற்கும் விக்ரமிற்கும் தனித்தனியே ஒரு ஒற்றை வரி அஞ்சலனுப்பி ஆழம் பார்த்தாள்: ‘ஏதாவது தகவலுண்டா?’
இருவரிடமிருந்தும் பதிலில்லாமல் போக, யமுனாவை அழைத்தாள். யமுனாவின் தொண்டை கட்டியிருந்தது
"எங்கேடா இருக்கே? மெயிலே காணுமே"
"அப்பா கூட இருக்கேம்மா"
"ஏண்டா, என்னாச்சு?"
"உங்களுக்குத் தெரியாதா? அஞ்சலிம்மா இறந்துட்டாங்க" சோகமாய்ச் சொன்ன யமுனா, "உங்களுக்கு யாரும் சொல்லலியாம்மா?" என்றாள் மூக்கை உறிஞ்சிக் கொண்டே.
கங்கா அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் "இல்லையே"
என்றாள் சுரத்தில்லாமல்.
"திடீர்னு உடம்பு மோசமாய் ஆயிடுச்சின்னு ஹாஸ்பிடல்ல ரெண்டு நாள் வச்சிருந்தாங்க. ஆனா யூஸ் இல்லை"
கங்கா வெகுவாய்த் தயங்கிக் கேட்டாள், "அப்பா எப்படி இருக்கார்?"
"இப்போ பரவாயில்லை. ஆனா இனி வீட்ல தனியா இருக்கணுமே. அப்பதான் இன்னும் கஷ்டமா இருக்கும்" யமுனாவின் விளக்கத்தையும் கங்காவின் விசாரிப்பையும் கவனித்துக் கொண்டிருந்தார் ரகு. அவளின் அக்கறையும் விசாரிப்பும் மிகத் தேவையாய் இருந்தன.
கங்கா தன்னிடம் தொலைபேசியில் பேசக் கூடும் என எதிர்பார்த்து ஏமாந்தார் ரகு. ஆனால் விரிவாய் ஆறுதல் மடல் அனுப்பியிருந்தாள் அவரின் தோழி. பேசுவதில் அவளுக்கிருந்த தயக்கம் தனக்குமிருப்பதை ரகு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. இரும்புத் திரை உடைந்துவிட்டாலும் இன்னும் ஒரு பனித்திரை மிச்சமிருப்பது இருவருக்குமே புலப்பட்டது. இருப்பினும் அவர்களின் இணைய நட்பு இறுகிக் கொண்டே வந்தது.
"இன்னொரு முறை சொல்லு" என்று விக்ரமின் கழுத்தில் கையைச் சுற்றி ஊஞ்சல் போல ஆடிக் கொண்டு கொஞ்சிய யமுனாவிடம், "உன் அழிச்சாட்டியம் தாளலை. கல்யாணத்துக்கு இன்னும் பத்தே நாள்தான். அதுவரைக்கும் பொறுத்துக்க முடியாதா? ஒரு முறையென்ன… ஆயிரம் முறை சொல்லலாம். நம்மளை யாரும் எதுவும் கேக்க முடியாது" என்றான் கரங்களால் அவளின் இடையைச் சுற்றி வளைத்துக் கொண்டே.
கீழே இருந்து மங்கை குரல் கொடுத்தார், "விக்ரம், நீங்க இன்னும் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பலையா?" ‘அம்மாவுக்கு இவள் இங்கிருப்பது தெரிந்திருக்க வேண்டும்’
"இதோ கிளம்பிட்டேம்மா" என்று பதில் சொல்லிக் கொண்டே அவள் கரங்களைப் பிரித்தெடுத்தான்.
சிணுங்கிய யமுனாவின் கன்னத்தில் மெதுவாய் முத்தமொன்றைப் பதித்துவிட்டு, "இப்போதைக்கு இது போதும். யாரும் பார்க்கறதுக்கு முன்னால ரூம்லருந்து கிளம்பு நீ. கேவலப்படுத்தறியே" என்றான் விளையாட்டாய் அவள் தலையில் தட்டி.
யமுனா அவன் அறையிலிருந்து மெல்ல நழுவி, விஜியின் அறையை அடைந்த போது உள்ளே மெல்லிய குரலில் ஷங்கர் சொல்வது காதில் விழுந்தது, "உன்னைத் தனியா பிடிச்சு ஒரு வார்த்தை பேசறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடறது. எப்போப் பாத்தாலும் கூட்டம்"
குறும்பாய்ப் புன்னகைத்துக் கொண்டே படபடவென்று கதவைத் தட்டிவிட்டு மாடிப்படிகளில் இறங்கி மறைந்தாள்.
கிச்சனிலிருந்த மங்கையிடம், "பாருங்க அத்தை, எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? உங்க பையன் பட்டுப் புடவை ஏதாவது கட்டிக்கிறாரா?" என்று புகார் செய்தாள்.
மூக்குக் கண்ணாடி வழியே கண்களைத் தழைத்துப் பார்த்த அவர், "எங்கிட்டயேவா?" என்றார் செல்லமாய்க் கையை ஓங்கி.
"ஐயோ மாமியார் கொடுமை இப்பவே ஆரம்பிச்சிடுச்சு. என்னை அடிக்க வராங்க" என்று வெளியில் ஓடினாள் யமுனா. சோஃபாவில் சேலைகளை அடுக்கிக் கொண்டிருந்த மாயா, "அப்பா… நான் தப்பிச்சேன்" என கேலிப் பெருமூச்சு விட்டாள்.
பார்த்துக் கொண்டிருந்த மற்றவரெல்லோரும் அந்த விளையாட்டை ரசித்துச் சிரிக்க, "உங்கம்மாவை டீல்ல விட்றதா முடிவு பண்ணிட்டீங்களா? ஏர்போர்ட்டுக்குக் கிளம்புங்க" என யமுனாவையும் கிளம்பி வந்த விக்ரமையும் விரட்டினார் அவனின் தந்தை.
"ஏண்டா, எங்க யாரையும் வரவேண்டாங்கறே?" என்றார் மங்கை.
"சும்மாதாம்மா… எதுக்கு அலைச்சல்னுதான்"
"ரெண்டு பேரும் ஏதாவது ரகசிய ப்ளான் வச்சிருப்பாங்க" வாணி எடுத்துக் கொடுத்தார்.
"யமுனாவை அவங்கம்மாவோட விட்டுட்டு நேரே இங்கே வந்து சேரு. ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப ஊர் சுத்தாதீங்கடா. கண்ணு பட்ரும்" மங்கை அருகில் வந்து முணுமுணுத்தார்.
காரில் செல்லும் போது, "இதோ பாரு, ஏர்ப்போர்ட்டுக்கு உங்கப்பா வந்தார்னா, நாம உங்கம்மாவுக்கு ஹாய் சொல்லிட்டுக் கிளம்பிடறோம். ஓகே?"
அவனை விநோதமாய்ப் பார்த்தாள் யமுனா. "அப்பாவா? ஏர்ப்போர்ட்டுக்கா? அவருக்கு அம்மா வர்றதே தெரியாது. தெரிஞ்சாலும் அவர் வந்து ரிசீவ் பண்றாராமா? எந்த உலகத்தில இருக்கே நீ? நனவுலகத்துக்கு வா மாமூ?" என்று அவன் இடுப்பைக் கிள்ளினாள்.
அவர்கள் போனபோது ஏர்ப்போர்ட்டில் கூட்டம் மிகுதியாயிருந்தது. கங்காவின் விமானம் தரையிறங்கிவிட்டதாக அறிவிப்புத் திரை சொன்னது. விக்ரம் கூட்டத்தைப் பார்வையால் துளாவினான். முழங்கையால் யமுனாவை இடித்து, "அங்கே பார், யார் வந்திருக்காங்கன்னு" என்றான்.
அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்வையை ஓட விட்டவள் ஆச்சர்யமானாள். "அப்பாவா? உனக்கெப்படித் தெரியும் அவர் வருவாருன்னு?" உச்சகட்ட வியப்பில் விழிகள் விரித்தாள்.
அவன் பதில் சொல்வதற்குள் கங்கா பெட்டியை இழுத்துக் கொண்டு வருவது தெரிந்தது. இறங்கிய பின் உடை மாற்றி, தலை வாரியிருக்க வேண்டும். கலைந்து போய் வந்த மற்ற பயணிகளிடமிருந்து பளிச்சென வேறுபட்டுத் தெரிந்தாள்.
யமுனா அவளை நோக்கிப் பாய்ந்து, கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டாள். "ஹாய்மா… மிஸ்ட் யூ. அப்பா கூட வந்திருக்கார், பாருங்க" முந்திக் கொண்டு சொன்னாள்.
விக்ரம் காரை எடுத்துவரப் போக மூவரும் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
"இப்போ எங்கேம்மா போறோம்? ஒரே கன்ஃப்யூஷன். கல்யாணத்துக்கு முன்னாலே மாப்பிள்ளை வீட்ல பொண்ணு இருக்கக் கூடாதாம். டார்ச்சர் பண்றாங்க" யமுனாதான் கேட்டாள்.
"கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணிருக்கேன், யமுனா" ரகுவைப் பார்க்காமல் சொன்னாள் கங்கா.
விக்ரம் காரை அருகில் நிறுத்திவிட்டு, "ஆன்டி, அப்பா ஃபோன் பண்ணினார். என்னையும் யமுனாவையும் ஜுவல்லரி ஷாப் போய் மோதிரம் அளவு கொடுக்கச் சொன்னார். நீங்க அங்கிள் கூடப் போறீங்களா? ஒண்ணும் பிரச்சினையில்லையே?" அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனை அர்த்தமுடன் பார்த்தாள் கங்கா.
"அங்கிள், உங்களுக்கொண்ணும் சிரமம்¢ல்லையே" என்று ரகுவையும் பார்த்து சம்பிரதாயமாய்க் கேட்டுவைத்தான்.
"நோ… நோ… இட்ஸ் மை ப்ளஷர்" அவசரமாய்த் தடுமாறிச் சொன்னார் ரகு
"கமான், யமுனா" என அவளை இழுத்துக் கொண்டு நடந்தவனிடம்,
"இங்கே என்ன நடக்குது? நம்பவே முடியலை" என்றாள் யமுனா திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே மெல்லிய குரலில்.
விக்ரம் பதில் சொல்லாமல் காரைக் கிளப்பினான்.
விக்ரமும் யமுனாவும் அகன்றதும், "ஹாய்… நைஸ் டு மீட் யூ" என்று கை நீட்டினார் ரகு
புன்னகையோடு கை குலுக்கினாள் கங்கா.
காரில் ஏறி அமர்ந்ததும், "கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணிருக்கறதா சொல்லவே இல்லையே"
"நீங்க கேக்கவே இல்லையே"
"நமக்குள்ள என்ன ஃபார்மாலிடி? நீ வீட்டுக்குத்தான் வருவேன்னுதான் நான் கேக்கலை. கமான்… வீட்டுக்குப் போகலாம்" என்றார் ரகு நேரிடையாய்.
"இந்த ஃப்ரண்ட்ஷிப் நல்லா இருக்கு. இதைக் கெடுத்துக்க வேண்டாமே" என்றாள் கங்கா தயக்கத்தோடு.
தன்னிஷ்டத்துக்கு அவளை இழுக்கப் பார்த்துத்தான் ஒரு முறை சூடுபட்டாயிற்று என நினைத்துக் கொண்டு "ஓகே… நான் உன்னை வற்புறுத்த விரும்பலை" என்று ரகு சொன்ன போது கங்காவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கலாம் அவர்!
பின், இப்படியே மனதை மறைத்து மறைத்துத்தான் ஒரு முறை அவரை இழந்தது எனத் தோன்றவும், சட்டென்று "வீட்டுக்கே போகலாம்" என்றாள் அவரிடம் திரும்பி.
"தட்ஸ் மை கேர்ள்" என்றார் ரகு சந்தோஷமாய்.
ரகுவின் அலைபேசி ஒலித்தது. யமுனா, "அப்பா, நான் ஜுவல்லரிலருந்து எங்கேப்பா போகணும்? அம்மாவோட கெஸ்ட் ஹவுஸ் எங்கே இருக்கு?" என்றாள்.
"நீ நேரா வீட்டுக்கு வா, யமுனா"
"அம்மா?"
"அம்மாவும் இங்கேதான் இருக்காங்க"
யமுனா நம்ப முடியாமல், "எங்கம்மா… உங்க… வீட்லயாப்பா?" என்று நிறுத்தி நிதானமாய்க் கேட்டாள்.
"உங்க அம்மாவும், உங்க அப்பாவும் நம்ம வீட்ல. இன்னொரு முறை முயற்சி செய்து பார்ப்போமா யமுனா?" என்ற ரகுவை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.
மறுமுனையில் யமுனா, "ய்யேஏஏஏஎ… எங்கப்பாவும் அம்மாவும் சேர்ந்துட்டாங்க…" என்று குதிப்பது கேட்டது.
(முற்றும்)
“
அருமயான முடிவு. Super story madam. I like your stories very much because you complete with positive end and we get good energy.
கணவன் மனைவி பிரியலாம்,அப்பா அம்மா பிரிய கூடாது என்பதர்கு எ கா
கதை.
hai nila ,
i cannt open last eppisode
pls send me eppisode no 33
nice end, i like ur stories very much
ur way of writting is nice
keep it up…
all the best for ur next story
all are waiting ur next sweet story…..
pls dont delay…
கங்கா கதாபாத்திரம்