கண்ணில் தெரியுதொரு தோற்றம் (33)

விக்ரமின் ஆலோசனையை செயல்படுத்தலாமாவென இரண்டு வாரங்கள் யோசித்து, துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஒரு மாலை நேரம் தனது அபார்ட்மென்டில் மின்னஞ்சலடிக்க அமர்ந்துவிட்டாலும் ரகுவை எப்படி விளிப்பதென்று தெரியாத குழப்பம். டியர் ரகு என்பது கொஞ்சம் ஓவராய் இருக்கும். வெறுமனே ரகு என விளித்தால் மரியாதையாக இருக்காது. வெகு நேரத் தயக்கத்துக்குப் பின் ஒற்றை வரி மின்னஞ்சலைத் தட்டிவிட்டாள்.

ஹாய்!

அஞ்சலி எப்படி இருக்கிறாள்?

கங்கா.

அனுப்பிவிட்டு மறுநாள் காலை பதிலை எதிர்பார்த்து ஏமாந்தவள் அடுத்த நாள் மதியம் வரை பத்து நிமிடங்களுக்கொரு முறை மின்னஞ்சல் பெட்டியை சோதித்து வெறுப்படைந்தாள். தான் அவர் பின் அலைவதாய் ரகு நினைத்திருக்கக் கூடும் என்று அவமானமாய் இருந்தது. சின்னப் பையன் பேச்சைக் கேட்டு முட்டாள்தனம் செய்துவிட்டதாய்த் தன்னைச் சாடிக்கொண்டாள்.

பணிச் சுமையினால் நாலைந்து நாட்களுக்குப் பின் தன் பர்சனல் மெயில் பாக்ஸைத் திறந்த ரகுவுக்கு கங்காவிடமிருந்து வந்த மின்னஞ்சல் ஆச்சரியமளித்தது. உடனே பதிலெழுதினார்.

ஹாய் கங்கா,

என்ன ஆச்சரியம்!
அஞ்சலியின் உடல் நிலையில் பெரிதாய் மாற்றமில்லை. சில நேரம் அடுத்தவர்களைச் சார்ந்திருப்பதில் மிகவும் விரக்தியடைந்து விடுகிறாள். அவளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன்.
அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ரகு.

மடலின் இறுதியிலிருந்த கேள்வியிலிருந்து அவர் உரையாடலைத் தொடர விரும்புகிறார் என்பதை உணர்ந்த கங்கா பூரிப்படைந்தாள். ஆனால் அவர் நாலைந்து நாள் கழித்துப் பதிலளிக்கையில் தான் மட்டும் உடனே எழுதினால் உணர்ச்சிவசப்படுவதாய்த் தோன்றும் என வேண்டுமென்றே ஒரு வாரம் பொறுத்து எழுதினாள்.

ஹாய் ரகு,

அஞ்சலியின் உடல் நிலை தேற பிரார்த்திக்கிறேன்.

அமெரிக்க வாழ்க்கை பரவாயில்லை. பிஸினஸ் எப்படிப் போகிறது?

கங்கா.

ரகுவிடமிருந்து அடுத்த நாளே பதில் வந்தது

ஹாய் கங்கா,

பிஸினஸ் நன்றாகப் போகிறது. சென்ற வருடம் 20% வளர்ச்சி. ஆஃபீஸில் அடிக்கடி நீ ஏன் வருவதில்லை எனக் கேட்கிறார்கள். அடுத்து எப்போது இந்தியா வருவாய்?

ரகு.

கங்காவும் அன்று மாலையே பதிலனுப்பினாள்.

ஹாய் ரகு,

யமுனாவும் கேட்டாள். ஆனால் இந்தியா வர எனக்கு வலுவான காரணம் எதுவுமில்லை. இனி யமுனாவின் திருமணத்துக்குத்தான் என நினைக்கிறேன்.

பணி நிமித்தமாய் நீங்கள் அமெரிக்கா வரும் வாய்ப்புண்டா?

கங்கா.

எழுதியபின் சற்று அதிகமாய் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறோமோ என்ற சந்தேகம் எழுந்தது கங்காவுக்கு.

அடுத்த அரைமணி நேரத்தில் அவ்வளவு நீள மின்னஞ்சலை ரகுவிடமிருந்து கங்கா எதிர்பார்த்திருக்கவில்லை.

டியர் கங்கா,

எத்தனையோ நாள் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால் செயல் படுத்தவில்லை. அதனை செயல்படுத்தத்தான் இந்த மடல். என் கனவுகளுக்காய் உன் வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டேன் என்கிற உறுத்தல் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ‘என்னை அப்படியே ஏற்றுக் கொள்ளாவிட்டால் நீங்கள் என்னை இன்னொருத்தராக மாற்ற முயற்சிக்கிறீர்கள்’ என்று நீ திருமணமான புதிதில் அடிக்கடி குறைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நான் உன்னை அஞ்சலியாக மாற்ற முயற்சித்திருக்கிறேன் என இப்போதுதான் புரிகிறது. அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! உன் மனதை மிகவும் ரணப்படுத்தி இருக்கிறேன் என இப்போது உணர்கிறேன். எதை மாற்றமுடியும் எதை மாற்ற முடியாதென்று என்னால் பகுத்தறிய இயலாமல் போய்விட்டது. இப்போது அஞ்சலிதான் எனக்கு மனதைப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருக்கிறாள். வெறும் வெளித் தோற்றத்தை மட்டும் விரும்பியிருந்தால் அஞ்சலியை என்றோ விட்டுவிட்டு நான் போயிருக்க வேண்டுமே! ஆனால் இயலவில்லையே! அவள் இழை இழையாய் நைந்து தொங்கினாலும் பத்திரமாய்க் கைக்குள் பொத்தி வைத்துக் கொள்ள வேண்டும் போலல்லவா இருக்கிறது!

தன் பெயர் கூட மறந்துவிட்ட நிலையில் என் பெயரை உச்சரித்தாளென்றால் என்னை எவ்வளவு நேசித்திருப்பாளென்ற நன்றி உணர்ச்சி நெஞ்செல்லாம் நிறைந்திருக்கிறது. எனினும், இப்படி உள்ளன்போடு, எதிர்பார்ப்பில்லாமல் நேசிப்பதற்கான வாய்ப்பை நாமிருவரும் ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோமோ என்கிற குறையும் என்னைத் துளைத்துக் கொண்டேதானிருக்கிறது.

முடிந்தவை முடிந்தவைதான். இனி இவற்றைப் பேசி பயனில்லைதான். ஆனால் குற்ற உணர்வை சுமந்து திரிவதில் சிரமங்களிருப்பதால் உன்னிடம் இறக்கி வைக்கிறேன்.

இந்த மடல் மூலம் பழைய காயங்களைக் கிளறிவிட்டிருந்தால் அதற்கும் சேர்த்து மொத்தமாய் மன்னிப்பாயா, கங்கா?

அன்புடன்,
ரகு.

அந்த மடலைப் படித்துவிட்டு விசித்து விசித்து அழுதாள் கங்கா. இருபது வருட ரணத்தில் யாரோ மயிலிறகால் மருந்திடுவது போல் இதமாய் இருக்க, இறுக்கமாய்க் கட்டி வைத்திருந்த உண்ர்ச்சிகள் வெடித்துச் சிதறி கண்ணீராய்ப் பொழிந்தன. அந்த இதமான உணர்வை மனமெல்லாம் போர்த்திக் கொண்டு இரு தினங்கள் மிதந்தாள் கங்கா. மூன்றாம் நாள் இப்படி எழுதினாள்

அன்புள்ள ரகு,

உங்கள் மடல் என்னை நெகிழ வைத்துவிட்டது. நீங்கள் சொன்னது சரிதான். வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம்தான். அது நம்மை மட்டுமல்ல, யமுனாவையும் வெகுவாய்ப் பாதித்தது துரதிர்ஷ்டமே.

எனக்குள்ளும் குற்ற உணர்வு இருக்கிறது. மாற்ற முடிபவைகளைக் கூட மாற்றத் தேவையில்லை என்று அதிகப்படியான விறைப்புடன் இருந்துவிட்டேன். இன்றைக்கு அந்நிய மண்ணில் யாருக்காகவோ எதற்காகவோ வேஷம் போடுகிறபோது நமக்காக சிறு சிறு மாற்றங்களைச் செய்ய மறுத்ததற்காய் சிறுமையடைகிறேன்.

மன்னிப்பு பரஸ்பரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இப்போதாவது நம் நிலை உணர்ந்ததற்காய் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இந்த நட்பாவது நீடிக்கும் என நம்புகிறேன்

அன்புடன்,
கங்கா

இதற்குப் பின் இருவருக்குமிடையிலிருந்த இரும்புத் திரை உடைந்து சிதறினாற்போல, ஒருவரை ஒருவர் முதல் முறை சந்திப்பது போல உணர்ந்தார்கள். அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதிலிருந்து கோபதாபங்களைக் கொட்டிக் கொள்வது வரை பல மாதங்களாய் அஞ்சலில் தொடர்ந்தது அவர்களின் நட்பு.

About The Author

3 Comments

  1. ஸ்ரீ

    அழகான தொடக்கம் நிலா!

    ஆமாம்… ரகுவிற்கும், கங்காவிற்குமான இனிமையான நட்பு – ஒரு அழகான தொடக்கம். முற்றுப்புள்ளியின் அருகில் மற்றொரு புள்ளியைச் சேர்த்து, தொடரும் போட்டு விட்டீர்கள்! அழகாகச் செல்கிறது கதை. உணர்வுகளைப் புரிய வைக்கிறது! வாழ்த்துகள் நிலா!

  2. Sivagami

    I have read this story already as a Novel, but still it seems to be a fresh one when I read this every week. Nice story!

Comments are closed.