பாட்டுக்கு ஊதுகுழல்;
பசி தீர்க்கத் தாழி வெண்ணை;
வேட்கை யுற்ற கோபியற்கு
விளையாட்டுப் பிள்ளை யிவன்
பின்னலைப் பின்னின் றிழுப்பான்;
பின்னொருநாள் மிக வெட்கம்
அன்னவர் நீ ராடுகையில்
ஆடைகளை எடுத் தொளித்தான்
இன்னபல தொல்லைதந்த
இடைக் குலத்துச் சிறுவன்தான்
பன்னரிய மா மறைநூல்
பார்த்தனுக்குப் போர்க் களத்தில்
சொன்னதுவும்; உருக்கி விட்ட
சொக்கப்பொன் ஒளிர் மேனி
மின்னிடையாள் வான் குளத்தில்
மிதக்கும் முழு நிலவுப்பூ
காதலிளம் ராதை தந்த
கனிமுத்தத் தித்திப்பின்
போதையிலே அமு தூறிப்
புல்லாங் குழல் இசைக்க
பாம்பும் கொடும் புலியும்
பரவசத்தில் மெய்ம் மறக்கும்;
காம்பில் பால் சுரந்தொழுகக்
காராம் பசு நிற்கும்.
மண்உண்ட வாய் இனிக்கும்;
மறை மொழிந்த வாயினிக்கும்;
பண்ஊதும் இதழ் இனிக்கும்;
பவளச்செவ் விதழ் இனிக்கும்,
நினைவெல்லாம் தித்திக்கும்
நீலோத் பல வண்ணன் -அருட்
சினைப் பெருக்கு புவன மஹா
சுந்தர னெம் கண்ணபிரான்.
பாம்புத் தலைமீது நடம்
பயிலு கின்ற பாலகனே!
மாம்பழ வாய் அதரத்தின்
மதுரசுகம் எமக் கருள்வாய்.
கோதை தேன் பருகியதும்
கோபியர்கள் சுகித்ததுவும்
போதும் இனி எமக்குத்தா!
பொறாமை கொண்டு விட்டோம்!!
கோவிந்தன் குழல் கொண்டு ஊதிய போது காட்டில் பறவைகள், விலங்குகள் நின்ற விதத்தை பெரியாழ்வார் படம்பிடித்துக் காட்டுவார். தித்திருக்குமோ கண்ணனின் செம்பவழத் திருவாய் என்று சங்கிடம் நாச்சியார் கேட்பாள். நாலாயிரத்தின் சாற்றை நல்ல கற்பனை வளத்தோடு வழங்கியுள்ளார், பாராட்டுகள்! -அரிமா இளங்கண்ணன்,
தித்திருக்குமோ என்பதைத் தித்தித்திருக்குமோ என்று திருத்தி வாசிக்கவும். நன்றி. – அரிமா இளங்கண்ணன்