எழுதியது யார்?
அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகர்களுக்கு,
அன்புடன் ஜபர எழுதுவது.
நிலாச்சாரல் தவறாமல் படிக்கும் நீங்கள் தமிழ் இலக்கியத்தின் பால், நல்ல தமிழ் எழுத்துக்களின் பால் கொண்டுள்ள ஈடுபாடும் ஆர்வமும் நாம் அறிவோம் (என்ன திமிர்!). உங்களுக்கென ஒரு சின்ன க்விஸ்.
கீழே தமிழ் கூறும் நல்லுலகில் பிரபலமான சிவசங்கரி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன். வைரமுத்து, மாலன் ஆகிய எழுத்தாளர்களின் எழுத்துக்களிலிருந்து சில பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அவற்றை எழுதியது யாரென சரியாகச் சொல்லவேண்டும். உங்களுக்கு இது ஒரு ஜுஜுபி தான்!.
சரியாகச் சொல்லிவிட்டால் உங்களுக்கு ‘தமிழ் இலக்கிய எம்டன்’ என்ற விருது விரைவில் சென்னையில் ஒரு பெரிய மண்டபத்தில் நமீதா, நயன்தாரா இவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு கூடிய விழாவில் (ஆசையைப் பார்!) காத்திருக்கிறது.
இதோ உங்களுக்கான க்விஸ்..
1) "அந்த இளம் உள்ளம் ஏகாந்தத்தை நாடித் தவித்தது. அவன் கற்பனையில் ஒரு தவலோகமே விரிந்தது….
….ஹிமவானின் சிகரத்தில், பனிச் செதில்கள் பாளம் பாளமாய், அடுக்கடுக்காய் மின்னிப் பளபளக்கும் அந்தப் பாழ்வெளியில், மேகம் திரண்டு ஒழுகுவதுபோன்ற—ஹிமவானின் புத்திரி கோதிவிடும் வெண் கூந்தல் கற்றைபோல் விழும் — நீரருவியில், அதன் அடிமடியில் ஓங்காரமாய் ஜபிக்கும் பிரணவ மந்திர உச்சாடனம் போன்ற நீர்வீழ்ச்சியின் இரைச்சலில், சிவனின் புகழ்பாடும் எண்ணிறந்த பறவை இனங்களின் இன்னிசையில்…. எதிலுமே மனம் லயிக்காமல், பற்றாமல், உலகத்தின் அர்த்தத்தையே தேர்ந்த பெருமிதத்தில், தௌ¢வில் மின்னிப் புரளும் விழிகளை மூடி, இயற்கையின் கம்பீரத்துடன் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறாரே அந்த ரிஷிக் கிழவர்…. அவர்தான் லோக குரு’ — அருளானந்த சுவாமிகள் விட்ட கவிதாநயம் மிகுந்த சரடு சோமுவைப் பின்னிப் பிடித்துக் கொண்டது.’
2) இரட்டைப் பேட்டு ஜரிகை போட்டு பக்கப் பதிய மடி வைத்துக் கட்டி சற்றே தூக்கிப் போட்ட கொண்டையில் தடிமனாய் மல்லிகை வேணி வைத்து குங்குமம், சாந்து, விபூதி என்று வரிசையாய் பொட்டு இட்டு பச்சைக் கல் மூக்குத்தியும், புன்சிரிப்புமாய் மாமாவை பயபக்தியுடன் நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கச்சேரிக்குக் கிளம்பும் எம்.எஸ்.மாமியைக் காணுவது ஒரு பரவசமான காட்சி.
3) வாழ வந்தேன்; வாழச் சொல்லுகிறேன்.. மனிதருக்குள்ளிருக்கும் விலங்கைத் தோண்டியெடுத்து தூர எறியத் துடிக்கிறேன். வீடு என்ற கல்லறைக்குள் வாழும் மனிதர்களே! வெளியே வாருங்கள் என்று அழுது அழுது அழைக்கிறேன். பிழையா பெண்ணே! இது பிழையா?
4) சுதந்தரத்துக்கு முந்தைய தலைமுறையினர் காந்தியை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. அவர்களில் சிலர் அவரைத் தெய்வமாகப் பார்த்தார்கள்; "வாழ்விக்க வந்த எம்மான்" என்று நன்றியோடு பார்த்தார்கள். மனிதர்களால் தொடமுடியாத சிகரங்களைத் தொட்ட மாமனிதன் என்ற வியப்போடு பார்த்தார்கள். மகாத்மா என்ற மரியாதையுடன் பார்த்தார்கள். அவரது நேர்மையும், தேச பக்தியும், சுயநல மறுப்பும் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை. அவை தன்னை அரசியலில் இருத்திக் கொள்ளச் செய்யப்பட்ட தந்திரங்கள் அல்ல.
5) எழுத்து ஒரு தவம், வேதவாக்கு; நான் எழுதியதை ஒரு அட்சரம் கூட மாற்றக்கூடாது என்ற ஜல்லியடியெல்லாம் எனக்கு எப்போதும் கிடையாது. சில எழுத்தாளர்கள் ஒரு வரியை எடுத்தாலும் ‘கையை ஒடிப்பேன்’ என்பார்கள். தனிப்பட்டு வெளியிடப்படும் நாவலில் அல்லது சிறுகதைத் தொகுப்பில் இந்தப் பிடிவாதம் செல்லுபடியாகலாம். பத்திரிகையில் எழுதும்போது ஆசிரியர் நம்மைவிட தம் வாசகர்களை அதிகம் அறிந்தவர் என்பதை அறிய வேண்டும். டி.எஸ்.ஈலியட்டின் ‘வேஸ்ட் லாண்ட்’ என்ற நவீன ஆங்கில இலக்கியக் காவியம் பல இடங்களில் எஸ்ரா பவுண்டினால் பலமுறை திருத்தப்பட்டது, சுருக்கப்பட்டது பலருக்குத் தெரியாது.
6) ஏன் மிருகம் என்று மனிதனின் சில உணர்ச்சிகளுக்குப் பெயர் தரப்படுகிறது. மிருகமாகுதல் மட்டம் என்கிற விதமாய்ப் பேசப்படுகிறது? ஆசைப்பட்ட பொருளை அடைவதுதான் மிருகத்தின் நோக்கமே ஒழிய செய்முறைகள் பற்றி அதற்கு யோசனையே இல்லை. எதிர் கருத்து அறியும் சிந்தனை இல்லை. முயலுக்கு வலிக்குமே என்று வேட்டை நாய் நினைப்பதே இல்லை. தான், தன் பசி இதுதான் மிருகம். மனிதனை இயற்கை கொஞ்சம் உயர தூக்க இது தவறென அவனுக்குப் புரிந்தது. செயல்படுத்துவதில் சிக்கல் வந்தது. நல்லதுக்கும் கெட்டதுக்கும் அலைக்கழிய நேரிட்டது.
கண்டுபிடிச்சீங்களா..? விடையைக் கீழே காண்க.
எழுதியவர் இவர் :
1) ஜெயகாந்தன் – துறவு சிறுகதை
2) சிவசங்கரி – சில அனுபவங்கள், சில மனிதர்கள்
3) வைரமுத்து – சிகரங்களை நோக்கி
4) மாலன் – ஜனகனமன (புதினம்)
5) சுஜாதா – கற்றதும் பெற்றதும்
6) பாலகுமாரன் – தொப்புள் கொடி (புதினம்)”