ஒரு கிழிஞ்ச பொத்தானும், புரிஞ்ச தத்துவமும்
அலுவலகம் போகும் அவசரம். அவனுக்குப் பிடித்த அந்தச் சட்டைக்குள் உடம்பைத் திணித்துக் கொண்டு பொத்தான்களைப் போடுகையில், சரியாகத் தொப்பைக்கு நேராக இருக்க வேண்டிய பொத்தானைக் காணோம். அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ‘ஆறுவது சினம்’ என்ற மனநிலையில் இல்லாத அவன் தன் மனைவியை “இந்த சட்டையைத்தான் இன்று போடுவேன் என்று தெரியாதா உனக்கு? பொத்தான்களைக் கூட சரிபார்க்காமல் என்ன கழட்டுகிறாய். இப்போது பொத்தானுக்கு எங்கே போவது?” என்று முகம் சிவக்க திட்டினான். அலட்டிக் கொள்ளாத அவன் மனைவி, அவன் அருகில் வந்து செல்லமாக (அந்தக் கால மனைவி!) “என் ராஜாவுக்கு ஏன் இத்தனை கோபம்? இதோ பார் இந்தச் சட்டையின் கீழே உள்புறத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பட்டன் இருக்கிறதே! எந்தச் சட்டையிலும் இது இருக்கும். இதோ ஒரு நிமிஷத்தில் அதைத் தைத்து விடுகிறேன் என்று ஊசி நூலால் கோர்த்து அதைத் தைத்து தன் பல்லால் நூலை சரி செய்து சிரித்த முகத்துடன்… (இதற்குப் பிறகு அவள் என்ன செய்தாள் என்பது இதற்குப் புறம்பான விஷயம்!). அவனும் முகத்தைத் துடைத்துக் கொண்டு அசடு வழியச் சிரித்தான். கதை இவ்ளோதான்!
இந்தக் கதையினால் அறியப்படும் நீதி என்னவெனில், நமது பல பிரச்சினைகளுக்கு அல்லது நாம் பிரச்சி
னை என்று நினைப்பவைகளுக்கு — அந்த எக்ஸ்ட்ரா பொத்தான் போல — நம்மிடமேதான் தீர்வு இருக்கிறது. ஆனால் பதற்றத்தினாலும், அவசரத்தினாலும் விடைகளை எங்கெங்கோ வெளியில் தேடி அலைகிறோம். சரிதானே!
(ஒரு சின்ன பி.கு : இதில் ‘அவன்’ என்று வரும் என்ற இடங்களில் “ நான்” என்று திருத்திக் கொள்ளவும். ஹி-ஹி-ஹி)
நல்ல காலம் வந்தாச்சு!
நாட்டிலுள்ள அவலங்கள், அலங்கோலங்கள், குறைபாடுகள் இவற்றைப் பட்டியலிட்டுப் புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்குப் பஞ்சமில்லை. “நமக்கேன் வம்பு?” என்னும் அச்சம், “நமக்கென்ன ஆச்சு?” என்னும் அலட்சியம், இவை இரண்டுமே இன்று இந்திய சமுதாயத்தைப் பீடித்திருக்கிற நோய்கள். அச்சத்தையும் அலட்சியத்தையும் களைவதற்கான முயற்சியை வலியுறுத்துவது மட்டுமன்றி, அந்த முயற்சிகளுக்கு வழிகாட்டுவதற்குமான ஒரு கட்டுரைத் தொகுதி அண்மையில் வந்திருக்கிறது.
அண்மையில் அமரராகிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அ.கி.வேங்கட சுப்ரமணியன் எழுதி கிழக்குப் பதிப்பகம் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் வெளியிட்டுள்ள “மக்களாகிய நாம்” என்ற நூல்தான் அது..
இந்த நூல் நமது தேசிய அவலங்களைக் களைவதற்கு உள்ள ஒரே வழியைத் தெளிவுபடுத்திக் காட்டுகிறது. “வாக்களிக்கும் மக்களிடமிருந்து வலுவான கோரிக்கை வந்தால் அது அரசியல் சக்திகளால் புறக்கணிக்கப்பட மாட்டாது. எனவே, நாம் விரும்பும் சீர்திருத்தங்களை வாக்களிக்கும் மக்களிடம் எடுத்துக் கூறி, அதற்காக ஒரு வாக்கு வங்கியை உருவாக்குவதே நாட்டைப் பற்றிக் கவலைப்படும் குடிமக்களின் கடமையாகும்.”
இந்தப் புத்தகத்தில் நாம் படித்த ஒரு ’திடுக்கிடும்’ தகவல்:
அவர் ஒரு தேசபக்தர். விடுதலைப் போராட்ட வீரர் ஒருவருக்குப் பிறந்த நாள் விழா எடுக்க விரும்பினார். சென்னைக் கடற்கரையில் கூட்டம் நடத்த அனுமதி கோரினார். அனுமதி அளித்த காவல் துறை சில நிபந்தனைகள் விதித்தது. அவற்றுள் சில:
1.ஒரு மணி நேரமே கூட்டம் நடைபெற வேண்டும்.
2.கூட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது.
3.கூட்டத்தில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கை நூறுக்கு மேல் போகக் கூடாது.
இதில் என்ன இருக்கிறது? பிரிட்டிஷ் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தானே என்கிறீர்களா? மன்னிக்க வேண்டும், நண்பரே! இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டது சுதந்திர இந்தியாவில். 2006ம் ஆண்டில் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் விதித்த ஆணைதான் இது. விழா கொண்டாட நினைத்தது திலகருக்கு. (150வது பிறந்த தின விழா!)
வேறு சில தகவல் துளிகள் :
விவசாயிகள் நிலை:
தமிழகத்தில் தற்போதுள்ள மக்கள் தொகை சுமார் 6.6 கோடி. இதிலே ஏறத்தாழ கால் பங்கு மக்கள் பசியால் வாடுகிறார்கள். அதாவது 1.65 கோடி. அதிலே கிராமப்புறத்திலே உள்ளவர்கள் 1.18 கோடி. தமிழக விவசாயிகளில் 90% பேர் குறுநில விவசாயிகள். அவர்கள் பயிரிடும் நிலங்களில் 80% ஒரு போகம் மட்டுமே விளைச்சல். இதில் சுமார் பாதி நிலங்களே பாசன வசதி பெற்றவை. மொத்தத் தொழிலாளர்களில் 60% பேர் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆண்டு முழுதும் நிலையான வருமானமும் வேலை வாய்ப்பும் கிடையாது. இவை இரண்டும் கிடைத்தால்தான் இவர்கள் பசி ஆறும். இந்த நிலையிலே இவர்களுக்கு என்ன வழி?
காந்திஜி சொன்ன வழி : அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதும், எளிதில் செய்யக்கூடியதும், அதே நேரத்தில் அவர்களுக்குப் பிழைக்கும் வழியாக உள்ளதுமான கதர்.
மது விலக்கு:
2007-2008ல் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த வரி ரூ.8,816.67 கோடி. இதில் ஏழை எளிய மக்களிடமிருந்து வருவது 6000 கோடி! தமிழகக் ’குடி’மகனின் சராசரி வயது 15.
கல்வி:
தமிழ்நாட்டில் சுமார் 13-14 லட்சம் குழந்தைகள் முதல் வகுப்பில் சேருகின்றனர். ஏறத்தாழ 7-8 லட்சம் குழந்தைகள் இடையில் விடுபட்டுப் போகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு தரமான தொடக்கக் கல்வி கிடைக்காததுதான். சென்னை மாநகராட்சிக்கு 2007-2008 ல் தொடக்கக் கல்வி வரியின் மூலம் கிடைத்த தொகை ரூ 62.01கோடி. ஆனால் தொடக்கக் கல்விக்காக செலவிடப்பட்ட தொகை 70 லட்சம்!
பல செய்திகள் மனதை சங்கடப்படுத்துகின்றன. மாற்றாக, ‘நல்ல காலம் வந்தாச்சு!’ என்ற தலைப்பில் ஒரு நிறைவான செய்தியும் கிடைக்கிறது. செயல்வழிக் கற்றல் முறையின் கீழ் திருவான்மியூரில் ஒரு நகராட்சிப் பள்ளி சிறந்த முன்னேற்றம் கண்டிருப்பது. .
இருட்டைச் சபித்துக் கொண்டிராமல் விளக்கை ஏற்றி வைக்கத் தன்னார்வ அமைப்புகள் பலவும் இப்போதெல்லாம் நிறையவே முன் வருகின்றன. “நல்ல காலம் வந்தாச்சு!” என்று ஆசிரியர் கூறுவது உண்மை என்றே தோன்றுகிறது.
….புரியுதுசார்.அந்தக்கால கணவன்மார்கள் கொடுத்துவைத்தவர்கள்.
மாலீக்: அந்தக்கால மனைவிகளும் தான்! கொடுத்து வாங்கும் மகிழ்ச்சியே தனி தான். இப்போது எல்லாருமே சுயநலவாதிகளாகிவிட்டோம்.
அல்லோ…. தன்கையே தனக்குதவி.