கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

பாஸ்மார்க் வயதில் டாஸ்மாக்

அக்டோபர் 2- காந்திஜியின் பிறந்த தினம்.

தொலைக்காட்சியை நடிக நடிகையரின் நேர்முகமும், நாயாட நரியாட போன்ற சிறப்பு நடன(?) நிகழ்சிகளும். குடும்பக் கலகங்களுக்குக் காரணம் மாமியாரா மருமகளா என்ற கருத்துபூர்வமான வெட்டி மன்றங்களும் ஆக்ரமித்துக் கொண்டிருக்க அமைதியாக நகரின் ஒரு மூலையில் காந்திய பூர்வமான ஒரு நிகழ்ச்சியை நலிந்தவர்களுக்குக் குரல் கொடுக்கும் நந்தினி அறக்கட்டளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. பங்கு கொண்டவர்கள் கல்லூரி மாணவர்கள் பலரும் பார்வை இழந்தவர்கள்; உடல் குறைபாடுடையவர்கள். தலைப்போ சமூக அக்கறையுள்ள ஒரு தலைப்பு "மாணவர்களிடையே வளர்ந்து வரும் மது மற்ற போதைப் பழக்கங்களுக்குக் காரணமும் அதைத் தடுக்க வழிகளும்".

கிராமங்களில் குழந்தைகள் விடாமல் அழும்போதோ அல்லது இருமலால் அவதிப்படும்போதோ சாராயத்தை ஊற்றி அடக்கிவிடுவது வழக்கமாக் இருக்கிறது என்பது மாணவர்கள் தெரிவித்த கருத்துக்களில் ஒன்று. பாஸ்மார்க் வாங்க வேண்டிய வயதில் டாஸ்மாக் செல்வதற்கு பெற்றோர்களும் சக நண்பர்களும் முக்கியக் காரணம் எனவும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு அண்மையிலேயே மதுபானக் கடைகள் இருப்பதுவும் குடிப் பழக்கத்தைத் தூண்டுகிறது என்றுசுட்டிக் காட்டினார்கள். ஒருபுறம் சில மாணவர்கள், மாணவிகள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாவது கவலையை அளித்தாலும் மறுபுறம் அதைப்பற்றி அக்கறை கொண்ட மாணவர்களின் பொறுப்பான பேச்சு நம்பிக்கையையும் நிம்மதியையும் அளித்தது

******

சத்துள்ள கவிதைகள் சொன்ன சர்வக்ஞர்

அண்மையில் கன்னட பேரறிஞர், கவிஞர் சர்வக்ஞருடைய உருவச்சிலையை சென்னையில் தமிழக முதல்வர் சென்னையில் திறந்து வைத்தார்.

அவர் பற்றிய சில குறிப்புகள்:

அவர் எழுதிய கவிதைகள் தாழிசையமைப்பில் மூன்று அடிகளாய் அமைந்தவை. அதற்கு திரிபதி என்று பெயர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களைப் பற்றியும் தமது கவிதைகளில் சர்வக்ஞர் எடுத்துக் கூறியுள்ளார். அவர் ஒவ்வொரு கவிதையும் சர்வக்ஞ என்ற முத்தாய்புப் பெறும். சிறந்த கருத்துக்கள், தேர்ந்த உவமைகள், நல்ல எடுத்துக்காட்டுக்கள், அனுபவ உண்மைகள் அவர் கவிதைகளில் மிளிர்கின்றன காவியச்சுவை நிறைந்தவை அவை. அவர் பதினாறாம் நூற்றண்டில் வாழ்ந்தவர் என்று கருதப்படுகிறது.

ஒரு சோறு பதமாக ஒரு கவிதை…

"கொட்டித்து தனகே பச்சிட்டித்து பரரிங்கே
கொட்டித்து கெட்டதென பேட- முந்தக்கே
கட்டித்து ஹூது புத்தி சர்வக்ஞ"

பிறருக்கு தந்து பின்பு தான் அனுபவிக்கும் பண்பு மிக உயர்ந்தது. அதில் கிடைக்கும் இன்பம் இணையற்றது என்பார் திருவள்ளுவர். ஈந்துவக்கும் இன்பம் என்று வள்ளுவர் இதைக் குறிப்பிடுவார். சர்வக்ஞர் பிறருக்குத் தருவது என்பது தனக்காக சொத்து சேர்த்து வைப்பது போல என்கிறார் . ஆனால் யாருக்கும் தெரியாமல் சொத்து சேர்த்து வைப்பது பிறர் அபகரித்துக் கொண்டு போவதற்காகவே ஆகும். மற்றவர்களுக்குக் கொடுத்து நான் வறியவனானேன் என்று கூறுதல் கூடாது. அது எதிர் காலத்திற்கு கட்டி வைத்த சேமிப்பாகும்.

"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப் புழி" என்ற திருக்குறளும் இதே கருத்தைக் கூறுகிறது.

சர்வக்ஞரின் கவிதைகள் வாழ்க்கை நெறிகளும், அன்பின் சிறப்பும், ஆன்மீக ஞானமும் பொதிந்தவை– பல தமிழ் நெறி நூல்கள் கவிதைகள் இவற்றின் கருத்துக்களோடு இணைந்தவை

(நன்றி : பேராசிரியர் முனைவர் டி. பி. சித்தலிங்கயா அவர்களின் மெய்யுணர்வு மலர்கள்)

******

பொதிகை தொலைக்காட்சி தீபாவளி பட்டிமன்ற நிகழ்ச்சியில் திரு. இறையன்பு சொன்னவற்றில் ஒன்றிரண்டு:

ஜீரணம் (Digestion) பற்றி எழுதச்சொன்னார் ஆசிரியர்.

ஒரு மாணவன் சுருக்கமாக எழுதினான். "ஜீரணம் என்பது வலது கையில் துவங்கி இடது கையில் முடிவது"

தன் மகனுக்கு கராத்தே கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

நண்பர் கேட்டார். "எதற்கு அவனுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்கிறீர்கள்?"

அப்பா சொன்னார். "அவனை ஐந்து பேர் வந்து தாக்கினால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்" என்றார்.

"அப்போ ஆறு பேராக வந்து தாக்கினால் என்ன செய்வான்?

"அதற்குத்தான் அவனுக்கு மாலை வேளையில் வேகமாக ஓட பயிற்சி தருகிறேனே!".

******

யாருடன் விருந்து?

உலக சமாதானத்திற்காக நோபல் பரிசு பெறும் ஒபாமாவை அண்மையில் அமெரிக்காவில் ஆர்லிங்டன் வேக்ஃபீல்ட் உயர்நிலைபள்ளி மாணவன், "நீங்கள் ஒரு விருந்து சாப்பிட விரும்பினால் யாருடன் சேர்ந்து உண்ண விரும்புவீர்கள்? அவர் உயிரோடு இருப்பவராயினும் அல்லது இல்லாதவராயினும் சரி" என்று கேட்டான்.

ஒபாமா சொன்னார்.  "மகாத்மா காந்தியுடன்தான். ஏனெனில் அவர்தான் எளிமையான உணவு அருந்துபவர், அதிகம் சாப்பிட மாட்டார்"

உலக சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, ஆங் சன் சூ கீ, நெல்சன் மண்டேலா ஆகியோருமே தங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது காந்திஜியே என்று நெகிழ்வுடன் கூறியிருக்கிறார்கள்

வெல்டன் வெங்கி!

வெங்கி என்று அன்புடன் அழைக்கப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் வேதியல் துறையில் ரிபோசெம் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெறுவதற்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் – வாழ்த்துக்கள். இவருடன் வேறு சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்களும் கூட்டாக இந்தப் பரிசைப் பெறுகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பயனாக ஆன்டி பயாடிக்ஸ் என்னும் நோய் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கும் பணிகளை முன்பை விட வேகமாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும் என்பது சிந்தைக்கினிய செய்தி

******

அறம் வாழ்க

ஆசைகளில்லாத சித்தம்
அதிலென்றும் காயங்கள் நேராது
மாசேதும் இல்லாத புத்தி
மற்றோரைக் காயப்படுத்தாது
நேசத்திலே நெய்த நெஞ்சம்
நீதிக்கு மேலேதும் அறியாது
ஓசைகள் தீர்ந்திடும் மாலையில்
ஒளிமேவும் அழகுக்கு நிகரேது?

கவிஞர் ரமணன் – எந்த வானமும் உயரமில்லை

(நன்றி : திரு திவாகரின் வலைப்பூக்கள்)

About The Author

4 Comments

  1. DeviRajan

    இளைய சமுதாயச் சீர்கேட்டிற்கு அரசியலும், அரசியல்வாதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மதுபானக்கடை எங்கு இருந்தால் என்ன அவர்களுக்குத் தேவை அதிலிருந்து வரும் பணம் மட்டுமே…மாணவர்களின் பொறுப்பும் சமுதாய அக்கறையும் மட்டுமே ஒரு நல்ல தரமான சமுதாயத்தை உருவாக்க முடியும்…

  2. P.Balakrishnan

    பூரண மதுவிலக்கை அரசு கடைப்பிடித்தால் இன்னும் பத்து ஆண்டுகளில் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

  3. maleek

    ஆமாம்… வெளிநாட்டுக்காரர்களுக்கெல்லாம் காந்தி உந்து சக்தியாகத்தான்
    இருப்பார்!

  4. Dr. S. Subramanian

    There is an old saw which says, A prophet is without honor in his own country”. This applies to Gandhi too, especially now that nobody seems to care about him or his principles. I am glad the saying is not falsified. Hats off to Obama for honoring Gandhi. By the way DeepAvaLi was celebrated in the White House this year.”

Comments are closed.