கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

அப்படி என்ன அதிசயம் 108 என்ற எண்ணில்?

"உன்கிட்ட ஏற்கனவே படிச்சுப் படிச்சு 108 தடவை சொல்லியாச்சு"

"பிள்ளையாரப்பா, நினைச்ச காரியம் மட்டும் நடந்தா உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்"

இப்படி 108 என்ற வார்த்தை அடிக்கடி நம்மிடம் புழங்குகிறது. மற்ற எண்களுக்கு இல்லாத விசேஷம் அப்படி என்ன இருக்கிறது 108ல்?

இந்து மதத்தில் மந்திரங்களை ஜபிக்க பயன்படுத்தப்படும் ஜபமாலையில் உள்ள மணிகளின் (துளசி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டவை) எண்ணிக்கையும் 108.

108 என்ற எண் இந்து மதம், பவுத்தம், ஜைன, சீக்கிய மதங்களில் தர்மம் மற்றும் யோகாவோடு சம்பந்தப்பட்ட புனிதமான எண்ணாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் கிருஷ்ணன் 108 கோபியரோடு பிருந்தாவனத்தில் நடனமாடியாதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அவரது துவாரகை நகரில் 16108 கோபியரை மணந்து கொண்டாராம். இதனால் கிருஷ்ண பக்தர்கள் எண் 108ஐ புனிதமானதாகக் கருதுகிறார்கள்.

சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் 108 நிலைகளில் அமைந்திருக்கிறது.

108ல் உள்ள எண்களைக் கூட்டினால் வரும் தொகை ஒன்பது. மொத்தம் ஒன்பது தத்துவங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 108ஐ இரண்டால் பெருக்கினாலும் அல்லது இரண்டால் வகுத்தாலும் வரும் கூட்டுத் தொகையும் ஒன்பது.

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளும் ஒன்பது கிரகங்களும் இருக்கின்றன. 12ஐயும் 9ஐயும் பெருக்கினால் கிடைக்கும் எண் 108. 27 நட்சதிரங்கள் நாலு பாதங்களகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் பெருக்கல் தொகையும் 27 X 4 = 108.

திபெத்திய புத்த மதத்தில் மொத்த வகையான பாவங்கள் 108.

ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மணி 108 முறை அடிக்கப்படுகிறது, பழைய ஆண்டை வழி அனுப்பவும், புத்தாண்டை வரவேற்கவும்.

ஜென் குருமார்கள் ஜுஜு என்ற ஜபமாலையைத் தங்கள் கழுத்தில் அணிகிறார்கள். அதிலுள்ள மணிகளின் எண்ணிக்கை 108. ஹிந்துக்கள், பவுத்தர்கள், வைஷ்ணவர்கள் மற்றும் ஜைனர்கள் போற்றும் புனிதத் தலமான முக்திநாத்தில் 108 நீரூற்றுகள் இருக்கின்றன.

எகலிங்கர் கோவில் வளாகத்திற்குள் சுவர்களைச் சுற்றி 108 கோவில்கள் உள்ளன. மகாவிஷ்ணுவிற்கு 108 புண்ணிய ஸ்தலங்கள் இருக்கின்றன. பல பவுத்தக் கோவில்களில் 108 படிகள் இருக்கின்றன.

சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 108 மடங்கு. பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப்போல 108 மடங்கு.

சஹஸ்ரநாம அஷ்டோத்ரம் கடவுளின் 1008 பெயர்களை 108 ஸ்லோகங்களில் கூறுகிறது. சிவபெருமான் தண்டி என்ற ரிஷிக்கு 10,000 நாமங்கள் கொடுத்தாராம். இதனை அந்த ரிஷி உபமன்யுவிற்குக் கொடுக்க, பின்னர் அது சுருக்கப்பட்டு பத்தில் ஒரு பங்காகச் சுருக்கப்பட்டு கிருஷ்ணரிடம் கொடுக்கப்பட்டதாம்.

சக்கரங்கள் என்பவை சக்தி பீடங்களைக் குறிக்கின்றன. 108 சக்திரேகைகள் குவிந்து இருதய சக்கரம் உருவாகிறது. இதில் ஒன்றான சூஷ்ம சக்கரம்தான் ஒருவன் தன்னைத் தானே உணர்வதற்கான பாதையாகக் கருதப்படுகிறது.

108 என்ற எண் தெய்வீகத்தின் முழு முதலாகக் கருதப்படுகிறது.

About The Author

4 Comments

  1. Jo

    புதிய தகவல்களுக்கு நன்றி சார். 108 அரசாங்கத்தோட அவசர ஆம்புலன்ஸ் சர்வீஸ் எண்ணும் கூட. எந்த வழித்தடத்தில் விபத்து நடந்தாலும் இந்த எண்ணுக்கு அழைக்கலாம்.

  2. DeviRajan

    மிகச் சுவாரஸ்யமான, அருமையான தகவல்கள்….

  3. adithan

    10000 நாமங்கள் பத்தில் ஒன்றாக…. புரியவில்லை. மற்றவை சுவையானவை.

  4. P.Balakrishnan

    நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா-என்றுஆண்டாளும்,பேராயிரம் கொண்ட பீடுடையான் என்று திருமங்கையாழ்வாரும், நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் என்று நம்மாழ்வாரும் போற்றுவர்.ஆயிரம் நாமம் சொல்லிப்
    பல்லாண்டு பாடுவார் பெரியாழ்வார்.

Comments are closed.