கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சொல்லிப் போனார் காந்தி; செய்து காட்டினார் “அண்ணா”!

தாம் கனவு கண்ட கிராமத்தைப் பற்றி நிறையவே காந்திஜி சொல்லியிருக்கிறார். அப்படி ஒரு கிராமம் நடைமுறையில் சாத்தியமா என்பதுதான் கேள்வி. சாத்தியமே என்று நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கிறார் அண்ணா ஹஜாரே என்ற 70 வயது சமூக ஊழியர். காந்திஜி மற்றும் விவேகானந்தரின் கோட்பாடுகளால் உத்வேகம் பெற்றவர். விரக்தியின் விளிம்பில் தற்கொலையின் எல்லை வரைக்கும் போனவர். விவேகானந்தரின் நூல் ஒன்றைப் படித்துப் புத்தெழுச்சி பெற்றவர். அவர் மாற்றிக் காட்டிய கிராமத்தின் பெயர் ராளேகண் சித்தி. மஹாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது.

25 வருஷத்துக்கு முந்தியிருந்த ராளேகண் சித்தி இதுதான். மொத்தப் பரப்பளவு 2200 ஏக்கரில் 1700 ஏக்கர் சாகுபடி நிலம். 500 ஏக்கர் தரிசு. ஆண்டுக்கு 400 – 500மி.மீ. அளவே மழை பெய்யும் வறண்ட பூமி. 125 – 150 ஏக்கரே பயிர் செய்ய உகந்தது, அதுவும் ஒரு போகமே! மழைத் தண்ணீர் தேக்கப்படாமல் வழிந்தோடும். தண்ணீர் வெளியூரிலிருந்து இறக்குமதி. 60-65% மக்களுக்கு உணவு தானியங்கள் வெளியூரிலிருந்து இறக்குமதி. 20% மக்களுக்கே ஆண்டு முழுதும் வயிறு நிறையச் சாப்பாடு. பஞ்சம் பிழைக்க மக்கள் வெளியூருக்குக் குடி பெயர்ந்து கொண்டிருந்தார்கள். சாராயம் காய்ச்சுவதுதான் ஜீவாதாரமான குடிசைத் தொழில்! முன்பு 4ம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். 1982ல் முதல் முறையாக ஒரு பெண் பத்தாம் வகுப்பை எட்டியதுதான் கிராமத்தின் அதிகபட்சப் படிப்பு.

அதே கிராமம்.. அதே நிலம்.. அதே மக்கள். இன்று எப்படி இருக்கிறது? வள்ளல் எவரும் வந்து நிதி உதவி தரவில்லை. அரசாங்க இலவசங்களைக் கூட மறுத்து விட்டனர் இந்தக் கிராம மக்கள். இன்று இந்தக் கிராமம் அடைந்துள்ள மாற்றத்தின் மூலதனம், “அரசின் திட்டங்களை விரயமின்றி நூற்றுக்கு நூறு பயன்படுத்தியது; மக்கள் ஒத்துழைப்பு; வங்கிக் கடன் ஆகியவையே.”

ஓடி வழிந்த மழை நீரைக் குளங்கள் கட்டித் தேக்கியதால் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்தது. 150 ஏக்கர் பாசனத்துக்கே உன்னைப் பிடி.. என்னைப் பிடி என்றிருந்த நிலை போய் இன்று 1500 ஏக்கர் நிலத்தில் மகசூல். பருவத்துக்கும் மாற்றுப் பருவத்துக்கும் வேண்டிய அளவு தண்ணீர் வளம் கிராமத்தில் இருக்கிறது.

விளைச்சல் 85% அதிகமாகி வெளியூரிலிருந்து தானியம் வாங்க வேண்டிய அவசியம் நீங்கி விட்டது. ஆண்டுக்கு 200 டிரக் வெங்காயம் வெளியூர் செல்கிறது. முன்னர் தினம் 100-125 லிட்டர் பால் வெளியூருக்கு விற்கப்பட்டது. இப்போது விற்கப்படும் பால் அளவு 3000 லிட்டர். பால் உற்பத்தி கிராமத்துக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஈட்டித் தருகிறது.

70%க்கும் மேலான மக்கள் செங்கல் வீடு கட்டிக்கொண்டு வசிக்கின்றனர். 60-65% மக்கள் இரு சக்கர வாகனம் வைத்துள்ளனர். கிராமத்தில் 8-10 டெம்போக்கள், 7-8 டிரக்குகள், 4-5 டிராக்டர்கள் உள்ளன. கிராமத்தின் சராசரி தனி நபர் வருமானம் 200-250 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் ஆகியிருக்கிறது.

பன்னிரண்டாவது வரை பள்ளி இருக்கிறது. படித்து முடித்த இந்த கிராமப் பெண்களே இங்கு ஆசிரியைகள். கிராம சமூக நிதியில் இன்றைய இருப்பு 50 லட்சம் ரூபாய். 17 மகளிர் சுய உதவிக் குழுக்களின் சேமிப்பு 13 லட்சம் ரூபாய். சுய ஆர்வலர்களின் உழைப்பாலும் அவர்கள் நன்கொடையாலும் பள்ளிக் கட்டிடம் எழும்பியுள்ளது. ஆறு மாத இலவச உடலுழைப்பு மற்றும் அரசு மானியம் 5 லட்சம் ரூபாய் கொண்டு ஒரு மாணவர் விடுதியும், அரசு உதவியோ, நன்கொடையோ எதுவுமின்றி 28 லட்ச ரூபாய் செலவில் இன்னொரு மாணவர் விடுதியும் கட்டப்பட்டுள்ளன.

கிராமத்தில் மது விலக்கு முழு அளவில் அமல்படுத்தப் பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையை முதலில் பூர்த்தி செய்து விட்டு, அவர்கள் பிழைப்புக்கு வழி செய்து விட்டு, முதலில் பிரசாரம், பின்னர் கிராமக் கட்டுப்பாடு என்று செயல்பட்டதால், மது விலக்கு வெற்றி அடைந்தது.

புகையிலைப் பொருட்கள் பயிரிடுவதற்கும், பயன்படுத்துவதற்கும் கிராமத்தில் “தடா”. போகி அன்று ஸிம்பாலிக்காக பீடி, சிகரெட், புகையிலை போன்றவற்றைக் கொளுத்துகிறார்கள்.

தீவிரப் பிரசாரத்தினால் கிராமத்தில் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் குழந்தை ஆணோ, பெண்ணோ, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது சகஜமாகி விட்டது.

கிராமத்துப் பள்ளியில், மற்ற கிராமங்களில் படித்துத் தோல்வியுற்ற மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பள்ளி தேர்ச்சி விகிதம் 10ம் வகுப்பில் 97%.12ம் வகுப்பில் 93%. பண்பாட்டில் மேன்மை, மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள்.. இவை சிறப்பு அம்சங்கள்.

கிராம சுகாதரம் அக்கறையுடன் கவனிக்கப்படுகிறது. குடிநீர், சமையலுக்கு குழாய்கள் மூலம் சுத்த நீர், தூய ஆடை, தினம் குளியல், மலம் கழித்த பிறகு சோப்புப் போட்டுக் கையை அலம்புதல், சத்தான உணவு உண்ணுதல் போன்ற தனி நபர் ஆரோக்கியப் பழக்கங்கள் இன்று இயல்பாகி விட்டன.

கிராமத்தில் இன்னொரு சிறப்பு அம்சம் 20-30 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்வது. பணக்காரர்கள் செலவில் ஏழைகளுக்குத் திருமணம். சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள் அனைவரும் தலித்துக்கள் உட்பட அனைத்து ஜாதியினரும்!

கிராமக் கூட்டுறவு வங்கி அமைத்துச் செயல்படுவதன் மூலம், கிராம மக்கள் பணம் கிராம மக்கள் நலனுக்கே போகிறது. கந்து வட்டிக்காரர்கள் தொல்லை இல்லவே இல்லை.

இன்னொரு மிக முக்கிய விஷயம். கிராமத்தில் தானிய வங்கி ஒன்று இயங்குகிறது. உபரி உற்பத்தி விவசாயிகள் தானிய வங்கிக்கு 25, 50 அல்லது 100 கிலோ தானியத்தை அவரவர் உசிதப்படி இலவசமாக வழங்குகிறார்கள். உணவுத் தட்டுப்பாடு கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஆனால் நிபந்தனை எ‎ன்னவென்றால் அடுத்த ஆண்டு விளைச்சலில் குவிண்டாலுக்கு 25 கிலோ சேர்த்துத் திருப்பித் தர வேண்டும்.

மூட நம்பிக்கை ஒழிப்பு, மாதர் முன்னேற்றம் இப்படிப் பல துறைகளில் சாதனை படைத்துள்ளது ராளேகண் சித்தி.

அக்டோபர் 2ம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் கிராமப் புத்தெழுச்சி நாளாகக் கொண்டாடுகிறார்கள் கிராம மக்கள். இந்த நாளில் கிராமத்தில், அந்த ஆண்டு பிறந்த அத்தனை குழந்தைகளுக்கும் புத்தாடை, புதிய வெளியூர் மருமகள்களுக்கு வரவேற்பு, அன்பளிப்பு, கிராமத்தின் முதியோர்கள் கிராமத் தந்தை, அன்னை என்று கெளரவிக்கப்படல், இன்னும் பல வகை சாதனைகளுக்குப் பரிசுகள், இரவு கிராமம் முழுதுக்கும் கூட்டு விருந்து.
இப்படி ஒரு கிராமம். நம்ப முடிகிறதா?

தமது லட்சியக் கிராமத்தைப் பற்றிச் சொன்ன காந்திஜி சொன்னது: “மேலே சொன்னதில் அடிப்படையில் நடக்க முடியாதது ஒன்றுமே இல்லை. வேண்டுமானால், அப்படி ஒரு கிராமத்தை உருவாக்குவது ஓர் ஆயுட்கால வேலையாக இருக்கலாம். உண்மை ஜனநாயகத்தையும் கிராம வாழ்க்கையையும் நேசிக்கிற ஒருவர், இதைத் தன் ஆயுட்கால லட்சியமாகக் கொண்டு உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்”

காந்தி சொன்னார்; “அண்ணா” ஹஜாரே செய்து காட்டினார்!

(நன்றி: “எனது கிராமம், எனது மண்” நூல். ஆசிரியர்: அண்ணா ஹஜாரே. தமிழில்: டாக்டர் ஜீவானந்தம். விகடன் பிரசுரம்.)

About The Author

1 Comment

  1. balaji

    மிகவும் அற்புதமான கட்டுரை.சுமார் 8 வருடம் முன்பு ஆங்கிலத்தில் இரு ந்த கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து அனைவருக்கும் இன்னும் விளக்கமாக கொடுத்தேன். இப்போது இ ந்த கட்டுரையை படித்ததும் மனதிற்க்கு மிகவும்
    ச ந்தோஷமாக உள்ளது.இ ந்த ரலேகான் சித்தி போல் எல்லா கிராமஙகளும் முயர்சி எடுத்தால் நமது இ ந்தியா எங்கோ
    போய்விடும்

    ஐ ப ர அவர்களுக்கு எனது மனமார் ந்த நன்றி

Comments are closed.