கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

இனி என்று அந்தத் தகவல்?

‘இன்று ஒரு தகவல்’ மூலம் முதலில் சென்னை வானொலியிலும், பின்பு தொலைக்காட்சியிலும் தினமும் குட்டிக் குட்டி கதைகள் சொல்லி நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருந்த தென்கச்சி. கோ. சுவாமிநாதன் அவர்கள் 16.09.2009ல் காலமானார்.

"தத்துவம்ங்கறதுல ரெண்டு வகை உண்டு. ஒன்னு தத்துவம், இன்னொன்னு மகா தத்துவம். தத்துவம்ன்னா என்னன்னு தெரியுமா? கேக்கறவங்களுக்கு புரியக் கூடாது, மகா தத்துவம்ன்னா சொல்றவங்களுக்கும் புரியக் கூடாது. அந்த வகைல பார்த்தால் இன்று ஒரு தகவலும் மகா தத்துவம்தான்!" இப்படி அவரே நகைச்சுவையாக தன்னடக்கத்தோடு சொன்னதுண்டு. ஆனால் உண்மையில் பெரிய பெரிய கருத்துக்களை எல்லாம் அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகள் மூலம் விளக்கிச் சொல்லும் திறமை வாய்ந்தவர் தென்கச்சியார்.

‘தெம்புக்கு படிங்க’, ‘சிந்தனை விருந்து’, ‘அய்யாசாமியின் அனுபவங்கள்’, ‘தகவல் கேளுங்கள்’, ‘சிரிப்போம் சிந்திப்போம்’, ‘மனசுக்குள் வெளிச்சம்’ போன்ற புத்தகங்களை எழுதியிருக்கிறார் எளிமைக்குச் சொந்தமான தென்கச்சியார்.

அஞ்சாத அண்ணா

இது அண்ணாவின் நூறாவது ஆண்டு நிறைவு. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள். இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ந்தேதியை துக்க நாள் என்றார் பெரியார். தன் தலைவர் இப்படி சொல்லிவிட்டாரே என்று அஞ்சாமல் தன் மனதில் பட்டதைத் துணிவோடு இந்திய விடுதலை நாள் மகிழ்ச்சியான நாளே என்று அறிக்கை வெளியிட்டார் அண்ணா.

"நானோ அந்த அறிக்கையின் விளைவாகவே உங்களில் பலரால் சந்தேகத்துக்கும் நிந்தனைக்கும் ஆளாகக் கூடிய நிலையில் உள்ளவன். ஆனால் கூறுவது உள்ளத்திலிருந்து வருபவை. இது கட்சிக் கட்டுப்பாட்டையும் தலைவரின் அறிக்கையையும் மீறுவதாகும் என்று கருதப்பட்டு என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முன் வருமானாலும், என் வாழ்வில் பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்ற கொள்கையைக் கொண்டவன் நான் என்பதை மக்களுக்குக் கூற எனக்கிருக்கும் ஒரே நாளான ஆகஸ்ட் 15 ந் தேதியின் முக்கியத்துவத்துகாக வேண்டி கட்சியின் கடுமையான நடவடிக்கைக்கும் சம்மதிக்க வேண்டியவனாகிறேன்."

(திராவிட நாடு இதழ், ஆகஸ்ட் 15 தினக் கட்டுரை – 10-08-47)
(நன்றி : குடிமக்கள் முரசு)

நேர்மை உறங்குகிறது

உந்துனர் அறக்கட்டளை அறங்காவலரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அ.கி. வேங்கட சுப்ரமணியன் தனது எழுபதாவது வயதில் மாரடைப்பால் காலமானார். அவர் அரசாங்கப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஓய்வு காணாத வகையில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு நீதி காண போராடியவர். தேர்தல்கள் செம்மையாக நடைபெறவும், ஜனநாயக முறையில் வாக்காளர் தங்கள் வாக்குகளை அளிக்கவும் தனது மக்கள் மையங்கள், ‘குடிமக்கள் முரசு’ இதழ் மூலமாக அயராது செயல்பட்டார்.

அரசியலிலும் ஆளுமையிலும் அன்றாட வாழ்க்கையில் தூய்மை, நேர்மை, தொண்டு மனப்பான்மை, அரசையும் அதிகார வர்க்கத்ததையும் தட்டிக் கேட்கும் துணிவு ஆகிய உயர் பண்புகளின் உறைவிடமாக திகழ்ந்தார் ஏ. கே வி. அவரது நினைவிற்கு அஞ்சலிகள்.

இப்படி ஒரு ஆசிரியர்

வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த அந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும் குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து அவைகளைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்த வகுப்புக்குச் சென்றார். பாடம் நடந்து முடிந்ததும் அந்தக் குப்பைகளை மேஜை மீது வைத்து "இந்தக் குப்பைகளை நான்தான் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடம் ஒரு ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. இனிமேலும் அப்படிச் செய்யாதீர்கள்" என்றார்.

அதே ஆசிரியர், ஒரு இஸ்லாமிய மாணவன் தினம் ஒரு அழுக்குக் குல்லாயை அணிந்து வருவதைப் பார்த்து "நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாய். இனி துவைத்து சுத்தமாக அணிந்து வர வேண்டும்" என்று பலமுறை சொல்லியும் கேளாததால் அவன் தலையிலிருந்த குல்லாயைத் தானே எடுத்து துவைத்துக் கொண்டு கொடுத்தார். அந்த மாணவன் வெட்கிக் குனிந்து சுத்தமான குல்லாயுடன் வரத் தொடங்கினான்.

கல்வியை மட்டுமின்றி சுகாதாரத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தந்த இந்த ஆசிரியர் தில்லியில் ஜாமிலியா பல்கலைக் கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஜாகிர் ஹூசைன் அவர்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவராகஇருந்த சிறந்த கல்வியாளர்.

(நன்றி : குடிமக்கள் முரசு)

இனிமையான முதுமை

அக்டோபர் முதல் தேதி உலக முதியோர் தினம். முதியோர் மருத்துவச் சேவைக்காக தேசிய விருதைப் பெற்ற டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்கள் முதுமையில் ஆரோக்கியமாக இருப்பதற்காகக் கூறும் சில வழிகள் :

முதுமையின் விரோதி தனிமை. எப்பாடு பட்டாவது அதைத் தவிர்க்க வேண்டும். அவரவருக்கு நாட்டமான பொழுதுபோக்கில் ஈடுபட வேண்டும். புத்தகம் படிப்பது, ஆன்மிகம், தோட்டக்கலை, கணிப்பொறி பயிற்சி பெறுவது போன்றவற்றில் ஈடுபடலாம். தன்னுடைய தேவைகளை தாமே செய்யப் பழகிக் கொள்ளவும் வேண்டும். மனத்தளவில் பந்த பாசங்களைக் குறைத்துக் கொண்டு பற்றற்ற வாழ்வு வாழ வேண்டும்.

மன அமைதி, சகிப்புத்தன்மை இவை கிட்ட தியானம், பிராணாயாமம் போன்றவற்றில் ஈடுபடலாம். சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை மவுனம் கடைப்பிடித்தல் மன அமைதி பெற ஒரு சிறந்த வழிமுறையாகும். வாரம் ஒரு முறை விரதம் இருக்கவேண்டும். குறைந்த கலோரிச் சத்துள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும். கோதுமை,ராகி, பால், கீரை, பச்சைக் காய்கறிகள் இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குடும்பத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை தவிர்த்து கூடிய வரை உதவியாக இருக்க வேண்டும். வாரிசுகளுக்கு பயன் தரும் வகையில், தேவையில்லாத வழக்குகளைத் தவிர்க்க உயில் எழுதுவது அவசியம். கால முறைப்படி தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நடுத்தர வயதிலிருந்தே முதுமைக் காலத்திற்காக சேமிப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியம். அவசியமான உறவுகளை வெட்டி விடாமல், நல்ல நண்பர்களை மறக்காமல் தொடர்புடன் இருப்பது சமயத்தில் கரம் கொடுக்கும். சக்திகேற்ற உழைப்பும், உழைப்புக்கேற்ற ஓய்வும் வேண்டும். முடிந்த அளவு சுற்றுலா சென்று வருதல் வேண்டும்.

(நன்றி : " 60 வயதுக்குப் பிறகு" – டாக்டர் வி.எஸ். நடராஜன் அவர்கள்)

*****

டாக்டர் சொன்னார்: "உங்களுக்கு ஒரு குறைவும் இல்லை! எண்பது வயது வரை வாழ்வீர்கள்"

அவர்: "இப்போது என் வயது எண்பது, டாக்டர்"

டாக்டர் : "பார்த்தீர்களா? அதான் நான் சொன்னேனே!"

About The Author

2 Comments

  1. P.Balakrishnan

    தென்கச்சியாருடன் மேடைகளில் பேசியுள்ளேன்; மேடைகளில் பேசவும் அழைத்துள்ளேன்.பேசுவதற்கு முக்கால்மணி நேரம் கொடுத்தால் ஒன்றரை மணி நேரம் ஆனால் கூட நேரம் போவது நமக்குத் தெரியாது. அவரே நினைவு படுத்தினால் தான் உண்டு.

  2. R.V.Raji

    ஜ.ப.ர!
    –> தென்கச்சி. கோ. சுவாமிநாதன் அவர்களின் மறைவை யாராலும் நிச்சயமாக மறக்க முடியாது. தினமும் “இன்று ஒரு தகவலில்” குறைந்த நேரத்தில் கருத்துக்களை தெளிவான விளக்கங்களுடன் தருவார். அவர் நகைச்சுவையோடு கூறும் விதம் அருமையாய் இருக்கும்.
    –>டாக்டர் ஜாகிர் ஹூசைனை போல ஊருக்கு ஒரு ஆசிரியர் இருந்தாலே போதும் நமது நாட்டை வளமாக்க.

Comments are closed.