கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஜெய் ஹோ – இந்தியா!

செழுமையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 45வது இடமும், சீனாவுக்கு 75வது இடமும் கிடைத்துள்ளன. லிகேட்டம் பிராஸ்பரிடிட்டி இன்டெக்ஸ் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவை விட சீனா ராணுவ ரீதியில் பலம் வாய்ந்த நாடாக இருக்கலாம். ஆனால் செழுமையான நாடுகளின் வரிசையில் இந்தியா, சீனாவை விட முன்னணியில் உள்ளது.

இது குறித்து லிகேட்டம் கழகத்தின் மூத்த துணைத் தலைவர் வில்லியம் இன்போடன் கூறுகையில், "மிகச் சிறந்த சமூகக் கட்டமைப்பு மற்றும் அருமையான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பேணுவதில் இந்தியா மிகச் சிறப்பாக உள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதியில் சீனா பல மடங்கு உயரத்தில் இருந்தாலும் கூட, அங்கு ஜனநாயகம் இல்லாமை, பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என எதுவுமே இல்லாததால், சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னணி பெற்றுள்ளது" என்றார்

உலகின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தைக் கொண்டுள்ள 104 நாடுகளின் வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றைத் தொகுத்து இந்த தரவரிசைப் பட்டியலை லிகேட்டம் வெளியிட்டுள்ளது. இது அதன் மூன்றாவது சர்வே ஆகும். பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம், மக்களின் மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது.

(நன்றி: தினமலர் செய்திக் குறிப்பு)

தட்டு சுட்டதடா!

ஏசுநாதர் பிறந்த ஜெருசலேமில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் செய்த ஒரு அகழ்வாராய்ச்சியில் சுட்ட மண்ணிலான ஒரு தட்டில் ஹீப்ரு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் சாப்பிட்ட, பின்பு கை கழுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட தட்டு என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டிருக்கிறது.

அனுபவ அறிவும் படிச்ச அறிவும்!

மாக்ஸ் என்பவர் ஒரு சிறிய ஊரில் ஒரு சாண்ட்விச் கடை வைத்திருந்தார். தரமாகவும் நேர்த்தியாகவும் சரக்கு கொடுத்து வந்தார். அளவில் பெரியதாகவும், அது போக இலவசமாக ஊறுகாய், வறுவல், சில சமயங்களில் குளிர்பானமும் கொடுத்து வந்தார். அவர் கடையில் எப்பவும் சொல்லி முடியாத கூட்டம். இந்தத் தருணத்தில் நகரத்தில் படித்துக் கொண்டிருந்த அவர் மகன் வந்து சேர்ந்தான்.

“அச்சச்சோ! என்ன செய்கிறீர்கள் அப்பா! உலக நடப்பே உங்களுக்குத் தெரியவில்லை! பொருளாதார நிலை ரொம்ப மோசமாகிக் கொண்டிருக்கிறது! அவரவருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிறது. செலவழிப்பதற்குக் காசில்லாமல் தவிக்கிறார்கள்! இப்படிப் போனால் நீங்கள் ஒரு நாள் போண்டியாக வேண்டியதுதான்!” என்று அறிவுறுத்தி விட்டுப் போய் விட்டான்.

தந்தை யோசித்தார். இலவசங்கள் கொடுப்பதை நிறுத்தினார். அளவைக் குறைத்தார். தரத்திலும் சமரசம் செய்து கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் குறைந்தார்கள். கடை நஷ்டத்தில் ஓடியது. மகனுக்கு எழுதினார்: ”மகனே! நீ சொன்னது சரிதான். தேசத்தின் பொருளாதாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது. அதன் விளைவு நம் கடையிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது!”

(தத்வாலோகா என்ற ஆங்கிலப் பத்திரிகையில் படித்தது)

அந்த நாள் ஞாபகம்!

லால் பஹதூர் சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரி சிறந்த கவிஞர். இவர் இயற்றிய பக்திப் பாடல்களை டைரக்டர் சித்ரகுப்தா இசை அமைத்து, லதா மங்கேஷ்கர் பாட, ஏ.வி.எம்மின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் கொலம்பியா இசைத்தட்டாக வெளியிட்டது. ஏ.வி.எம்மின் மகள் மீனா வீரப்பன், தட்டில் வெற்றிலை பாக்கு பழங்களுடன், ஒரு பட்டுப் புடவையை வைத்து திருமதி சாஸ்திரியை சந்தித்துக் கொடுத்து விட்டு வந்தார். மீனா வீரப்பன், தாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்ததும் அவருக்காக திருமதி சாஸ்திரியின் உதவியாளர் பட்டுப் புடவையுடன் காத்திருந்தார். “நான் பிரதமரின் மனைவியாக இருப்பதால், இதைப் பெற்றுக் கொள்வது முறையாகாது. உடனே மறுத்திருந்தால், உங்கள் மனம் கஷ்டப்படும். அது மரியாதையும் ஆகாது” என்று செய்தி அனுப்பிருந்தார் அவர். (ஹூம், அந்த நாளைப் பற்றி இப்போது நினைத்து என்ன பயன்!)

விஜயா ஸ்டூடியோ நாகிரெட்டியார் வீட்டுத் திருமணம். எல்லாம் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தும் கடைசி நேரத்தில் ஒரு குழப்பம் வந்து விட்டது. முதல் பந்தியில் எல்லாரும் சாப்பிட்டு எழுந்து விட்டார்கள். அடுத்த பந்திக்கு விருந்தினர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், இலை எடுக்க யாரும் வரவில்லை. எல்லாரும் திருதிரு என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது செய்தார் நாகிரெட்டியார் அந்தக் காரியத்தை. வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டார். பரபர என்று எடுக்க ஆரம்பித்து விட்டார் இலைகளை! பின் என்ன? பலரும் கூட சேர்ந்து கொள்ள, நிமிஷமாய் வேலை முடிந்து விட்டது!

(எம்.சரவணின் முயற்சி திருவினையாக்கும் என்ற புத்தகத்திலிருந்து இந்த இரண்டு செய்திகளும்)

நம்பிக்கை!

வின்ஸ்டன் சர்ச்சில் தன் 82 வயதைத் தனது இல்லமான ஹைட் பார்க் கேட்டில் கொண்டாடிக் கொண்டிருந்தார். அவரைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் சொன்னான், “நான் உங்களை நூறாவது பிறந்த நாளில் புகைப்படம் எடுப்பேனென்று நம்புகிறேன்!”

சர்ச்சில் சொன்னார் புன்னகையோடு, “நீ நல்ல ஆரோக்கியத்துடன் தானே காணப்படுகிறாய்.? பின் உனக்கேன் சந்தேகம்?"

About The Author