சருகுகளாய் உறவுகள்
உறவுகள் என்பவை எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் முறிய வேண்டியவை. முறியாமல் தடுக்க முடியாதவை. இது குரூரமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை. எண்பது தொண்ணூறுக்கு மேல் வயதானவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் உறவுகளை விட்டு விலகிக் கொண்டே இருந்திருப்பதைச் சொல்வார்கள். பின்னுக்குச் சென்று கொண்டே இருப்பவையே உறவுகள், நட்புகள். ஒரு தவிர்க்க முடியாத தன்மையை கடைசியில் சென்றடைகிறோம்.
"உறவுகள் பல வகையில் முறிகின்றன. பல வகைகளில் தேய்ந்தழிகின்றன. பல வகைகளில் காணாமல் போகின்றன. உறவுகள் முறிவதற்கான காரணங்களை நாம் பல வகைகளில் கற்பனை செய்து கொள்கிறோம் – நம் தவறு, பிறர் தவறு, சூழல், என்றெல்லாம். உண்மையில் அப்படி அல்ல. உறவுகள் காலத்தில் ஓடும் நீரில் மிதக்கும் சருகுகள் போலச் செல்கின்றன. சருகுகள் விலகுவதும் நெருங்குவதும் அவற்றின் கையில் இல்லை."
(மூலம்: பின் தூறல் – கடிதங்கள்)
ஒழுக்கமும் பண்பாடும்
பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
இரண்டும் வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான். அவை கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாசாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் அதே சொல்லை பண்பாடு என்று மொழியாக்கம் செய்தார்.
ஆனால் நடைமுறையில் நுட்பமான ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு கலாசாரத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையுமே குறிக்கும் சொல்லாக உள்ளது கலாசாரம். ஆயுதக் கலாசாரம், வெடிகுண்டுக் கலாசாரம் என்றெல்லாம் சொல்கிறோமே, கல்ச்சர் என்பது இருள் ஒளி இரண்டும் கலந்ததே என்ற புரிதல் இச்சொல்லுக்குப் பின்னால் உள்ளது. கலாசாரம் என்ற சொல்லுக்கு சரியான சொற்பொருள், கலை+ ஆசாரம் என்பது. ஆனால் நடைமுறையில் அந்த தளம் இல்லாமலாகிவிட்டிருக்கிறது.
பண்பாடு என்பது பண்படுதலை மட்டுமே குறிக்கிறது. எதிர்மறைப் பண்புகளுக்கு இடமில்லை. எந்த ஒரு சமூகமும் அதன் வளர்ச்சிப் போக்கில் பண்படவே செய்கிறது என்ற ஒரு இலட்சியவாத அணுகுமுறை இச்சொல்லின் பின்னால் உள்ளது. ஆகவே எங்கெல்லாம் மேம்படுதல், நுண்மையாதல் என்ற பொருள் உள்ளதோ, அங்கே பண்பாடு என்ற சொல்லைக் கையாளலாம்.
ஆங்கிலத்தில் கல்ச்சர் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. முக்கியமாக இரண்டு. அமெரிக்கன் கல்சர் (American culture) என்பது வேறு. கல்சர்ட் பெர்ஸன் (cultured person) என்பது வேறு. நமக்கு இரு சொற்கள் உள்ளன. அமெரிக்கக் கலாசாரம் என்றும், பண்பாடுள்ளவர் என்றும் சொல்கிறோம்.
தமிழ்க் கலாச்சாரம் என்றால் தமிழ்நாட்டின் கறுப்பும் வெளுப்பும் கலந்த வாழ்க்கை முறையைச் சொல்கிறது. தமிழ்ப் பண்பாடு என்றால் தமிழ் மரபு நம் கைகள் வரை கொண்டுவந்து சேர்த்துள்ள மேன்மைகளை மட்டுமே குறிக்கிறது.
(அன்பர் ராஜ்குமாரின் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பதில்)
வறுமைக்கு வறுமை வைப்போமா?
ஐ.நா. சபை 1992ல் அக்டோபர் 17ஐ வறுமை ஒழிப்பு நாளாக ஏற்றுக் கொண்டுள்ளது. 1987ம் ஆண்டு, அக்டோபர் 17ம்தேதி அன்று ஒரு லட்சம் பேர் பாரிஸ் நகரில் வறுமை, பசிக்கொடுமை, வன்முறை, அச்சம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களைப் போற்றுவதற்காகக் கூடினார்கள். அப்போது கீழ்க்கண்ட ஒரு வாசகம் கல்லில் பொறிக்கப்பட்டது:
"எங்கெல்லாம் சிலர் பழகிக் கொள்ளத்தக்க வகையில் கடுமையான வறுமையில் வாடுகிறார்களோ அங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறது. ஒன்றாகச் சேர்ந்து மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது, ஆழ்ந்த உணர்வோடு செய்ய வேண்டிய நமது கடமை"
"வறுமைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வேண்டுகோள்", 2009ம் ஆண்டின் சர்வதேச வறுமை ஒழிப்பு நாளின் தலைப்பாகும்.
"வறுமையை ஒழிக்கும் நமது பணி மனித உரிமைகள் மற்றும் மானுட மரியாதை ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார். 2015ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதாக ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஏழை நாடுகள் பல இத்திட்டத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ள கருத்து இந்த இலக்கை எட்டும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டுமே என்ற கவலையை ஏற்படுத்துகிறது.
வானில் பிறந்த வாரிசு!
நடுவானில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவச விமான பயணச் சலுகையை ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் லியூ சியா யா. வயது 31. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், பினாங்கில் இருந்து போர்னியா நகருக்கு கடந்த புதன்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் பறந்தபோது நடுவானில் அவருக்கு பிரசவ வலி வந்தது. விமானத்தைப் பாதி வழியில் கோலாலம்பூருக்கு திருப்பினார் பைலட். விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது, லியூவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த டாக்டர், பணிப்பெண்கள் உதவியுடன் பிரசவம் பார்க்க, விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நடுவானில் பிறந்த குழந்தைக்கு பரிசளிக்க விரும்பிய ஏர் ஏசியா நிறுவனம், வாழ்நாள் முழுவதும் குழந்தையும், தாயும் தங்கள் நிறுவன விமானங்களில் இலவச பயணம் செய்ய அனுமதி அளித்திருக்கிறது.
(இணையதளத்தில் கண்ட செய்தி).
கடலுக்கடியில் ஒரு கருத்தரங்கம்
புவி வெப்பமயமாவதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தைக் கடலுக்கடியில், 20 அடி கீழே, மாலத்தீவு அதிபர் முகமது நசீத் நடத்தி இருக்கிறார். இதில், அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். தண்ணீருக்கு அடியில் கருத்துக்களை எப்படி பகிர்ந்து கொள்வது, நீச்சலடிப்பது என்பது குறித்த சிறப்புப் பயிற்சிகளை அமைச்சர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதிபர் நசீதுக்குக் கடலுக்குள் மூழ்கும் பயிற்சி இருந்தாலும், அவரின் அமைச்சர்கள் இதற்கென வாரக் கணக்கில் பயிற்சி எடுத்துக் கொண்டார்களாம். உலக நாடுகள் கார்பனை அதிகம் வெளியிடுவதால், புவி வேகமாக வெப்பமயமாகி வருவதாகச் சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், கடல்நீர் மட்டம் அதிகரித்து, கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதில் அதிக அபாயத்தில் இருப்பது, மாலத் தீவில் உள்ள சிறிய தீவுகள்தான் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆகவே, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடியாக புதுமையான இந்த கூட்டத்தை அதிபர் முகமது நசீத் அக்டோபர் 17 ம் தேதி நடத்தி இருக்கிறார்.
("தண்ணி"யோடு கூட்டம் நடப்பதைப் பார்த்திருக்கோமில்ல! இது என்ன தண்ணிக்கடியில் கூட்டம் என்று அதிசயிக்கிறார் த(ண்)ணிகாசலம்!!)
ரசித்த ஒரு குறும்படம்
மறை பொருள்
அந்த அழகான இளம் பெண் குளித்து விட்டு வெளியே வருகிறாள். கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசிக்கிறாள். கண்ணுக்கு மையெழுதி, உதட்டுச் சாயம் பூசி, பவுடர் போட்டுத் தன் அழகை தானே ரசிக்கிறாள். பின் தன் உடைகளை ஒவ்வொன்றாக தன் மீது அணிந்து பார்த்து, தேர்வு செய்து அணிந்து கொள்கிறாள். தன் ஆடைக்கேற்ற வளையல்களை அணிந்து கொள்கிறாள். கடைசியாக தன் அழகை ரசித்து விட்டு, ஒரு பர்தாவை எடுத்து மாட்டிக்கொண்டு முகத்தையும் மூடிக்கொண்டு புறப்படுகிறாள். ஆறு நிமிஷங்களே ஓடும் இந்த வசனமில்லாத குறும்படம் மனதில் குறுகுறுக்கிறது. பொன் சுதா இயக்கும் முதல் குறும்படமாம் இந்த ‘மறை பொருள்’.
“