துரோணர் என்ன செய்தார்?
அரவிந்தகோஷ் அரசியல்வாதியாக அலிப்பூர் சிறைக்குள் சென்று ஆன்மிகவாதியாக வெளியே வந்தார். ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு. வெடிகுண்டு வழக்கு. இன்று ஸ்ரீஅரவிந்தராக உலகமெங்கும் வழிபடப்படும் அவர் தமது அலிப்பூர் சிறை அனுபவங்களை “Tales of Prison life” என்ற நூலில் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தைப் படிப்பதே ஓர் அனுபவம்தான். அவ்வளவு சிரமமான சூழ்நிலையை வருணிக்கையிலும் கூட, அவரது எழுத்தில் மெல்லிய நகைச்சுவை இழையோடுவதை வியப்போடு காண்கிறோம்.
அரசாங்க வழக்கறிஞர் நார்ட்டனின் சட்ட ஞானத்தை இப்படி வருணிக்கிறார்:- “கோடைகாலத்தில் குளிர்காலத்தைக் காண்பது போல.”
ஷேக்ஸ்பியரின் சரித்திர நாடகங்களுக்கு ஆதாரங்களைத் திரட்டித் தந்தவர்கள் ப்ளூடார்ச்சும் ஹாலின்ஷெட்டும். இந்த வழக்கு நாடகத்தின் நாடகாசிரியர் நார்ட்டன் என்றால் “ஆதாரங்களை”த் திரட்டித் தருபவர்கள் போலீஸார். ஆனால், ஒரு வித்தியாசம் ஷேக்ஸ்பியர் கிடைத்த தகவல்கள் அத்தனையையும் பயன்படுத்த மாட்டார். நார்ட்டனோ, அத்தனை தகவலையும், சின்னதோ பெரிசோ, முக்கியமோ முக்கியமில்லையோ, உண்மையோ பொய்யோ, சம்பந்தம் இருக்கிறதோ சம்பந்தம் இல்லையோ, அத்தனையையும் தம் வாதத்தில் திணித்து விடுவார்.
நார்ட்டன் துரை இந்த நாடகத்தின் கதாசிரியர், இயக்குநர் என்றால் இதன் புரவலர் ஜட்ஜ் பிர்லி. நீண்ட உடலில் சின்னத்தலை. கிளியோபாட்ராவின் உடம்பில் மட்டைத் தேங்காயைச் செருகினாற் போல் இருக்கும். கடவுள் அவ்வளவு உயரமான ஆசாமிக்கு அதற்கு ஏற்றாற் போல் புத்திசாலித்தனத்தைத் தந்திருக்க வேண்டாமோ? அசட்டையாக, கவனக்குறைவாக, இருந்து விட்டார். பார்ப்பதற்கு பள்ளிக்கூடப் பையன் வாத்தியாரின் உயர நாற்காலியில் உட்கார்ந்த மாதிரி இருக்கும். யாராவது பேசிக் கொண்டிருந்தால், அத்தனை பேரையும் எழுந்து நிற்க வைத்து விடுவார். சில சமயம் வக்கீலை “ சிட் டவுன்” என்று அதட்டி உட்கார வைப்பதும் உண்டு.
ஒரு சுவையான கோர்ட் சம்பவம்.
தேவதாஸ் கரன் என்பவர் சாட்சி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னது:-“மிட்னாபுர் சந்திப்பில் சுரேந்திர பாபு தம் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது குரு பக்தியைப் பற்றிச் சொன்னார். அப்போது அரவிந்தபாபு குறுக்கிட்டு, ‘துரோணர் என்ன செய்தார்?’ என்று கேட்டார்.”
இப்படி கரன் சொல்லிக் கொண்டிருக்கும்போது நார்ட்டனுக்கு குஷி வந்து விட்டது. துரோணர் என்பவர் வெடிகுண்டுப் போராளி, அரசியல் கொலையாளி என்று நினைத்திருப்பார் போல. குரு தக்ஷ¢ணையாக மாணவர்கள் சுரேந்திரபாபுவுக்கு வெடிகுண்டுகள் கொடுக்க வேண்டும் என்று அரவிந்தர் சொன்னதாகப் புரிந்து கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. “துரோணர் என்ன செய்தார்?” என்று திருப்பித் திருப்பிக் கேட்டு சாட்சியைத் துளைத்தெடுத்துவிட்டார். சாட்சிக்கு இந்த அர்த்தமற்ற கேள்வியே புரியவில்லை. தொல்லை தாங்காமல் என்னென்னவோ கதைகள் சொல்லிக் கொண்டு வந்தார். எதுவும் நார்ட்டனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே கேள்வியையே கேட்க, “துரோணர் நிறைய அற்புதங்களைச் செய்தார்” என்று சொல்லி வைத்தார். அரவிந்தரை மாட்டுவது போல் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஆத்திரத்தில் ஆக்ரோஷமாக சாட்சியை மடக்க ஆரம்பித்தார்.
அருகில் இருந்த மற்றொரு வக்கீல், “சாட்சிக்கே துரோணர் என்ன செய்தார் என்று தெரியாது போலிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட சாட்சிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விட்டது. “யாரைப் பார்த்து இப்படிச் சொல்கிறீர்கள்? மகாபாரதத்தைத் தலைகீழ்ப் பாடமாகப் படித்திருக்கிறேனாக்கும்” என்று மார் தட்டிக் கொண்டார். பின்னர் சொன்னார், “துரோணர் ஒன்றும் செய்யவில்லை. அர்ஜுனன்தான் துரோணரைக் கொன்றான்” என்று சொல்லிக் கதையை முடித்தார். நார்ட்டனுக்கு சப்பென்று போய்விட்டது. “இந்தத் தப்பான குற்றச்சாட்டு காரணமாக, துரோணர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் குற்றவாளியாக நிறுத்தப்படாமல் தப்பித்தார்.” என்று சொல்லிச் சிரிக்க வைக்கிறார் அரவிந்தர்.
“