“மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்” என்ற தொகுப்பில் அவரின் ஐந்து நகரக் கதைகள் என்ற பகுதியிலிருந்து இரண்டு கதைகள் இதோ – நன்றியுடன்:
ஒரு பெர்லின் கதை
ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.
கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?
டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.
ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!
டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?
ஒரு ஜினிவா கதை
(பலநாட்டு ராஜ தந்திரிகளும் கூடி உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்களைப் பற்றிய பேச்சு)
ஒரு ராஜதந்திரி: ஆபத்தாவது விபத்தாவது – இரண்டும் ஒன்றுதான்!
கிளெமான்ஸோ: இல்லை ஐயா, விபத்து வேறு, ஆபத்து வேறு. பிரஸிடெண்ட் வில்ஸன் ஒரு கிணற்றி விழுந்து விட்டார் என்றால் அது விபத்து. அதிலிருந்து அவர் தப்பிக் கரை சேர்ந்து விட்டார் என்றால் அது ஆபத்து.
யார் காது யாரிடம்?
அந்த கிராமத்துப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு எழுத்தாளனாக வேண்டுமென ஆசை. சிறுவர் பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பி வந்தான். சில கதைகள் பள்ளி முகவரிக்கே திரும்பி வந்தன. அவன் வகுப்பு ஆசிரியராக இருந்த கே.ஜி.கே அவர்களுக்கு மிகவும் கோபம். “நீ கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டே. இனிமேல் எங்கே உருப்படப் போறே” என்று காதைப் பிடித்துத் திருகி “ஒழுங்காப் படி“ என்று திட்டி அனுப்பினாராம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியர் கே.ஜி.கே, தினம் வானொலியில் கேட்கும் ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சியைப் பாராட்டி, “இந்த நிகழ்ச்சியை நான் தினம் காது கொடுத்துக் கேட்கிறேன். இந்தத் தகவல் தரும் பெரியவரைத் தரிசிக்க வேண்டும்” என்று வானொலி இயக்குனருக்குக் கடிதம் எழுதினார். அதைப் படித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் “அன்று என் காது உங்களிடம், இன்று உங்கள் காது என்னிடம்” என்று ஆசிரியருக்குப் பதில் எழுதினாராம்.
ஓஹோ!
(சில சில்லறை விஷயங்கள்)
சொன்னால் நம்புங்கோ!
1740வது ஆண்டில் சில பிரெஞ்சுப் பயணிகள் வட அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது செவ்விந்தியர்கள் சிலர் ஆளுக்கொரு கோலை கையில் வைத்துக் கொண்டு தரையில் கிடந்த மரப் பந்தை அடித்து வெகு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். பந்தை அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ‘ஹோ கி’ என்று உரக்க உற்சாகத்துடன் கத்துவதையும் பார்த்தார்கள். செவ்விந்திய மொழியில் இதற்கு “பலமாக அடி” என்று பொருள். இதுவே பின்பு மருவி ஹாக்கியாகிவிட்டது.
பழங்காலத்தில் தமிழர்கள் “தால பத்திரம்” என்ற பெயருடைய சிறிய பனை ஓலைச் சுருளை மணமகளின் கழுத்தில் அணிவித்தனர். அதுவே தாலியென ஆனதாம்.
முதன் முதலாக ஜப்பான் நாட்டில் Pantlu(பேண்ட்லூ) என்ற சர்க்கஸ் கோமாளிதான் இந்த வகை ஆடையை அணிந்து வந்தார். அவரது பெயரால் அந்த உடை இப்போது Pant என்று அழைக்கப்படுகிறது.
இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏன் பிடிக்கும்?
சிறிய தவறு செய்து விட்ட ஒருவன் புதிதாக சிறையில் அடைக்கப்பட்டான். சிறை அவனுக்குப் புதிது. அதிசயமாக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்தான்.
ஒரு வாரம் கழித்து அவன் அறையிலிருந்தவர்கள் அவனைக் கேட்டார்கள், "உனக்கு யாரை மிகவும் பிடித்திருக்கிறது?"
“எனக்கு அந்தக் கோடி அறையில் இருக்கும் முதியவரைத்தான் பிடித்திருக்கிறது” என்றான்.
“ஏன்?”
“அவர், ‘உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் தம்பி ஞாபகம் வருகிறது’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்”
“அப்படியென்றால் அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இரு”
“ஏன்?’
“அவர் தன் தம்பியைக் கொன்று விட்டுத்தான் சிறைக்கு வந்திருக்கிறார்”
(ஏழாவது அறிவு – மூன்றாம் பாகம் – திரு. இறையன்பு)
“
சுவையானவற்றைத் தொகுத்துத் தந்தமைக்கு நன்றி
சொ.ஞானசம்பந்தன்