கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

வெளியில் வருமா கறுப்புப் பணம்?

தேர்தல் என்றாலே வாக்குறுதிகளுக்குப் பஞ்சமில்லை. வானத்தை வில்லாக வளைப்போம்; பூமியைக் கயிறாகத் திரிப்போம் என்று வாக்குறுதிகளை அள்ளி விட்டு தேர்தல் முடிந்த கையோடு காற்றில் வீசுபவர்கள் இந்த அரசியல்வாதிகள் என்பது தெரிந்த விஷயம்.

இந்த முறை பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், பிரதமர் பதவிக்கான வேட்பாளருமான அத்வானியின் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்விஸ் மற்றும் பல வங்கிகளில் ரகசியமாகப் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவோம்" என்ற அதிரடி வாக்குறுதி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இந்தியர்கள் பதுக்கியுள்ள மொத்தக் கறுப்புப் பணத்தின் அளவு 72 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாய் இருக்கிறது. இந்த அளவு பணம் நமது நாட்டின் மொத்த பட்ஜெட்டை விட பற்பல மடங்கு அதிகமானது. இந்தியாவின் எல்லா வங்கிகளிலும் இருக்கும் மொத்த பண மதிப்பைவிட மூன்று பங்கு அதிகமானது.

இந்தப் பணத்தின் மூலம் நமது அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேற்றி, உள்நாட்டு, அயல்நாட்டுக் கடன்களையும் முழுவதுமாக அடைக்க முடியும். பாலாறும் தேனாறும் ஓடும் என்றெல்லாம் கேள்விப்படும்போது அந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்க வைக்கிறது.

உண்மையிலேயே இவ்வளவு பணம் அயல்நாட்டு வங்கிகளில் இருக்கிறதா, இந்த அளவுக்கு நம் நாட்டிலிருந்து பணம் சென்றது எப்படி, அவற்றைத் திருப்பிக் கொண்டுவர வழிகள் என்ன என்று பிரபல சார்ட்டட் அக்கவுன்டன்டும், பொருளாதார அரசியல் கட்டுரைகள் வரைவோரும், இத்தகு ஆராய்ச்சிகளில் வல்லுனருமான எஸ்.குருமூர்த்தி அவர்களிடம் அறியக் கேட்டோம். அயல்நாடுகளில் இருக்கும் கறுப்புப் பணம் பற்றி ஆராய அத்வானி அமைத்த கமிட்டியில் குருமூர்த்தியும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

குருமூர்த்தியின் கருத்துக்கள் இதோ :

பணத்தை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்வது; அங்குள்ள வங்கிகளில் பதுக்கி வைப்பது; தங்கள் நாட்டில் அந்தப் பணத்திற்கான வரியைக் கொடுக்காமல் தப்பிப்பது போன்ற வழக்கங்கள் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இதற்கு ஸ்விட்சர்லாந்து ஒரு விடுதிபோல் (Tax Haven) அமைந்துவிட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது கூட இந்த நாடு நடுநிலை நாடாகக் கருதப்பட்டதே தவிர, யாரும் இந்தப் பணத்தை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யவில்லை.

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் வைக்கும் பணத்திற்கு அந்த வங்கிகள் அரசாங்கத்திற்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த விவரமும் கொடுக்கத் தேவையில்லை என்பதாக சட்டம் இருக்கிறது. வங்கியில் பணம் வைத்திருப்பவர்களின் பெயர், அவர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு, அவர்களின் நாடு போன்ற விவரங்கள் எதுவுமே வங்கியிலிருந்து வெளியே செல்ல முடியாது. அப்படி அங்குள்ள அதிகாரிகள் யாராவது வெளியிட்டால் அவர்களுக்கு சிறை தண்டனை உண்டு என்பது போன்ற சட்டங்கள் தந்த சலுகைகளால் உலகின் பல்வேறு பாகங்களிலுள்ள பலரும் தாங்கள் சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதித்த பணத்தை சேமித்து வைப்பதற்கான சொர்க்க பூமியாக இருந்தன இந்த வங்கிகள். இப்போது இது போன்று கறுப்புப் பணத்தை சேகரிக்க வசதியாக 70 வங்கிகள் இருக்கின்றன.

இந்த வங்கிகளில் போட்ட பணத்திலிருந்து வரும் வட்டிக்கும், ஈட்டும் லாபத்திற்கும் வரி கட்டத் தேவையில்லை. இது போல ரகசியமாக பணத்தை சேமித்து வைப்பதை வளர்ந்த மேற்கத்திய நாடுகள் ஆதரித்தனர். ஆனால், இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. வங்கிகளிடமிருந்து எந்தத் தகவலும் பெற முடியாத நிலையில் இதை எவ்வாறு அணுகுவது என்பதே கேள்விக்குறியாயிற்று.

இந்த சமயத்தில் யாராவது முறைகேடான வழிகளில் பணம் சம்பாதித்து, அதை ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்தால் அந்த விவரங்களை கோர்ட்டுக்கு மட்டும் ரகசியமாக அளிப்போம் என்று ஸ்விஸ் வங்கிகள் கூறின. இந்த சட்டங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு வசதியாக இருந்தன. ஆனால், 2001ம் ஆண்டுக்குப் பிறகு நிலைமை சற்றே மாறத் துவங்கியது. இது போன்ற வங்கிகளில் பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமல்ல – தீவிரவாதிகளும்தான் என்ற சுடுகின்ற உண்மை மேற்கத்திய நாட்டினரைச் சிந்திக்க வைத்தது.

அமெரிக்காவிலுள்ள ரேமன்ட் பேக்கர் என்ற நிதி நிபுணர் தன்னுடைய ஆய்வில் இந்த விதிவிலக்கு வங்கிகளில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து எப்படி 11.5 த்ரில்லியன் டாலர்கள் சேர்ந்திருக்கின்றன என்றும், அவை வருஷத்திற்கு ஒரு த்ரில்லியன் டாலர் வீதம்அதிகரிப்பதாகவும் கூறுகிறார். வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து 500 பில்லியன் டாலர்கள் (25 லட்சம் கோடி ரூபாய்கள்!) இந்த வங்கிகளில் சேர்ந்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார். இதனால் நம் போன்ற வளரும் நாடுகளிலிருந்து பணம், வளர்ந்த நாடுகளுக்கு எவ்வாறு கசிந்து செல்கிறது என்பது தெரிந்தது. மேற்கத்திய நாடுகள் தீவிரவாதிகளின் பணம் இந்த வங்கிகளில் போய்ச் சேரக்கூடாது என்று நினைத்தனவே தவிர, வளரும் நாடுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.

2008ல் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்பட்ட பின்னர்தான் இந்த நாடுகளுக்குக் கலக்கம் ஏற்பட்டது. இந்த வங்கிகளில் யார் பணம் வைத்திருக்கிறார்கள், இதை வைத்து எப்படி பங்கு மார்க்கெட்டில் சூதாடுகிறார்கள் என்ற கவலை தோன்றியது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களைப் பெற வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது.

இந்த சமயத்தில் ஜெர்மனி நாட்டில் இதுபோன்ற விதிவிலக்கு உள்ள சிறிய வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 1500 பேர்களின் விவரங்கள் வெளியில் கசிந்தன. இதில் 600 பேர் ஜெர்மனி நாட்டவர்கள். பாக்கி உள்ளவர்களின் பெயர்களை மற்ற நாடுகள் கேட்டால் அளிக்கத் தயார் என்று ஜெர்மன் அரசு அறிவித்தது. இந்த பாக்கி உள்ளவர்களில் இந்தியர்களும் அடக்கம். இது பற்றி அத்வானி ஃபிப்ரவரி மாத இறுதியில் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதற்கு ஏப்ரலில் ப.சிதம்பரம் இது பற்றி பரிசீலித்து வருவதாக பதிலனுப்பினார்.

சென்ற அக்டோபர் மாதம் ஓ.யி.சி.டி என்ற 17வளர்ந்த நாடுகளுக்கிடையேயான பொருளாதார கூட்டுறவுக் கூட்டமைப்பில் கலந்து கொண்ட ஜெர்மனியும், ஃப்ரான்சும் வங்கிக் கணக்குகளை ரகசியமாக வைத்திருந்து பகிர்ந்து கொள்ளாத ஸ்விட்சர்லாந்தை கண்டிக்க வேண்டும்; அமைப்பிலிருந்து தடை (ப்ளாக் லிஸ்ட்) செய்யவேண்டும் என்று வற்புறுத்தின. மற்ற நாடுகளுக்கிடையே இருக்கும் பரஸ்பர ஒப்பந்தம் போல ஸ்விட்சர்லாந்து வங்கிகளும் மற்ற நாடுகள் கேட்கும்போது தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்றன.

மீண்டும் ஃபிப்ரவரியில் 20 நாடுகள் கலந்து கொண்ட ஜி-20 மாநாட்டில் ஜெர்மனியும், ஃபிரான்சும் தாங்கள் எழுப்பிய அதே கோஷத்தை எழுப்பின. ஆரம்பத்தில் இங்கிலாந்துக்கு சம்மதமில்லாவிட்டாலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பவே அவர்களும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தார்கள். அமெரிக்காவும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. இந்தியா மட்டும் ஏனோ மவுனமாக இருந்தது! எப்படி மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமோ, அதே போலத் தனி மனிதனது நிதி ரகசியங்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்று சொல்லிய மேற்கத்திய நாடுகளே இப்படி இறங்கி வந்தது பெரிய மாற்றம்.

‘இப்போது கறுப்புப் பணத்தைப் பற்றி பேசுபவர்கள், இதுநாள் வரை அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ என்று கேட்பது முட்டாள்தனம். இதுநாள் வரை நாம் என்ன முயற்சியெடுத்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது. இப்போதுதான் மேற்கத்திய நாடுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள பணத்தின் கணக்குகளை இந்த வங்கிகள் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்துவதால், நமக்கும் இந்தப் பணத்தை வெளிக்கொண்டு வர ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது!

கடந்த ஏப்ரல் 15ம் தேதி, இந்திய ஸ்விட்சர்லாந்து நாடுகளின் கூட்டு ஒற்றுமையின் அறுபதாண்டு நிறைவு விழாவின் போது நடந்த நிகழ்ச்சியில் ஸ்விட்சர்லாந்து தூதுவரே இந்தியாவிலிருந்து ஏராளமான கறுப்புப் பணம் ஸ்விஸ் வங்கிகளுக்கு மாறுவதைக் கூறியிருக்கிறார். ஏராளமான பணம் கசிந்து செல்கிறது என்று சொல்லலாமே தவிர, எத்தனை என்று குறிப்பாக சொல்ல முடியாது. ரேமன்ட் பேக்கர் தனது ஆராய்ச்சியில் 2002லிருந்து 2008 வரையான ஆறாண்டுகளில் 6.82 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இந்த வங்கிகளுக்குச் சென்றிருப்பதாகக் கூறுகிறார்.

இந்தப் பணத்தை வெளிக்கொண்டு வர ஐந்தாண்டுகள் அல்லது பத்தாண்டுகள் ஆகலாம் என்று சொல்கிறார்கள். அறுபது வருஷங்கள் சும்மாவே இருந்து விட்டோம். இப்போது ஆரம்பித்தால்தான் இன்னும் சில ஆண்டுகளிலாவது முடியும்! இதற்கு எல்லா நாடுகளும் சேர்ந்து ஸ்விஸ் மற்றும் இது போன்ற ரகசியக் கணக்குகள் வைத்திருக்கும் வங்கிகளுடன் கடுமையாகப் போரிடவேண்டும். இப்போது மேற்கத்திய நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில், இந்தியா மேலும் தன் பங்கையும் செலுத்தினால் நல்ல தீர்வு வரும்.

ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் கணக்குகளைப் பற்றி பேசுகிறோமே! முதலில் நம் நாட்டில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர முடியாதா? ஸ்விஸ் வங்கியில் போட்டிருக்கும் பணம் என்பது முதலுக்கே மோசம் என்பது மாதிரி. அசலும் சேர்ந்து நம் பணம் அங்கே போய் விடுகிறது. இங்கேயிருக்கும் கறுப்புப் பணத்திற்கு வரி கட்டப்படவில்லை என்பதைத் தவிர, மொத்தப் பணமும் இங்குதான் இருக்கிறது. முதல் எங்கும் போவதில்லை.

சுமார் அரை மணி நேரம் குருமூர்த்தியிடம் பேசியபிறகு காலம் காலமாக பல லட்சம் கோடிக்கணக்கான பணம் – நமது பணம் – ஸ்விஸ் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது என்ற செய்தியைத் தெரிந்து கொண்டாலும் அதை வெளிக்கொண்டு வரும் நாள் அருகில் இல்லை.. இன்னும் எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் எனப் புரிகிறது! இப்போதுதான் பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கிறது! இது வெறும் தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இல்லாமல் என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று காத்திருப்போம்.

About The Author

2 Comments

  1. maleek

    72 லட்௯சம் கோடியா? ஸ்….இப்பவே கண்ணகட்டுதே!

Comments are closed.