கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

விளக்கிடு கல்யாணம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கிடு!

திருமணம், புதுமனை புகுவிழா, மணிவிழா, பவளவிழா, ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்களைப் பார்த்திருக்கிறோம். மஞ்சள் நீராட்டு, வளைகாப்பு, சீமந்தம் அழைப்புகளையும் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் வித்தியாசமான அழைப்பிதழையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

சென்னை சிட்லபாக்கத்திலிருந்து நண்பர் காந்திமதி நாதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனுப்பியிருந்தார்கள். அவரது மகள் ரக்ஷனா என்கிற முகில் சுகாவின் விளக்கிடு கல்யாண அழைப்பிதழ். அப்படி என்றால் என்ன என்று நாம் மண்டையைப் பிய்த்துக் கொள்ளத் தேவையின்றி அந்த அழைப்பிதழிலேயே அதற்கான விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளக்கம் இதோ :

“விளக்கிடு கல்யாணம் என்பது கார்கார்த்தார் குலப் பெண் குழந்தைகளுக்கு உரிய ஒரு சிறப்பு சடங்கு. கார்கார்த்தார் குல வழக்கில் 5, 7அல்லது 9 வயதில் பெண் குழந்தைகளுக்கு தைப் பொங்கல் நன்னாளிலோ அல்லது ஒரு சுபமுகூர்த்த நாளிலோ சூரிய பகவான் சாட்சியாக தாய்வழிப் பாட்டனார் ஒன்பது தங்க மணியும் பத்து பவளமும் கோர்த்த நவதாலியை உற்றார் உறவினர் ஆசியோடு கழுத்தில் அணிவிப்பார். பின்னர் அகல் விளக்கு மற்றும் கைவிளக்கு இரண்டினையும் ஏற்றி வழிபாடு செய்யும் உன்னத நிகழ்வு விளக்கிடு கல்யாண வைபவம் எனப்படுகிறது.

சிவ சக்தி வடிவமான நவதாலி, அம்மையும் அப்பனுமாக இருந்து அப்பெண் பெரியவள் ஆகி திருமணம் ஆகும் வரை கற்புக்குக் காவலாக மற்ற எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாத்து அவளை குலமகளாக விளங்கச் செய்து என்றென்றும் காக்கும் என்பது ஐதீகம்.

நவதாலியை திருமணம் நடைபெறும் நாள் வரை ஒரு பெண் அணிந்திருந்து கணவனால் திருமாங்கல்யம் பூட்டப்பட்ட பின் நவதாலியில் இருந்து பவள மணி மூன்றையும் தங்கமணி இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் கோர்த்து திருமாங்கல்யத்தோடு கட்டுவது வழக்கம்.

”கணவனது உயிரையும், உடைமைகளையும், குடும்பத்தையும் என்றும் என்னுடன் உடனிருக்க அருள் புரிய வேண்டும்” என்று கட்டி விட வேண்டும். இதனை ‘குதச்சுப் பிரித்துக் கட்டுதல்’ என்பர்.

பவளம் என்பது சிவபெருமானின் அருள் வடிவைக் குறிக்கும். தங்கமணிகள் ஒன்பதும் நவசக்தி நாயகியாகிய பராசக்தியின் அருள் வடிவம். கைவிளக்கு சக்தியின் வடிவாகும். அகல் விளக்கு சிவனின் வடிவாகும்.

வீட்டில் உள்ள அஞ்ஞானம், பேதைமை, வறுமை, நோய் மன சஞ்சலங்கள் ஆகிய இருளை அகற்றி நல்வழி காட்டியருள வேண்டி இந்த விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

தமது அழைப்பிதழில் காந்திமதி நாதன் குடும்பத்தினர் இன்னுமொரு புதுமையைச் செய்துள்ளனர். “நலிந்த பிரிவினரின் வாழ்க்கையில் விளக்கேற்றுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்து, சேவை பல செவ்வனே செய்து வரும் ‘சேவாலயா’ பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

******

யாருக்கு நமது (பொன்னான) வாக்கு?

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பணியாற்றும் “சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்”என்ற சமுதாய அமைப்பு, அண்மையில் வெளியிட்டிருக்கும் பிரசுரத்தில், தற்போதைய சூழ்நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு கேள்விகள் வடிவில் சில வழிமுறைகளை அளித்திருக்கிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் ஊழல் செய்யாதவரா?

லஞ்சம் வாங்காதவரா?

சொத்து சேர்ப்பதே குறியாக இல்லாதவரா?

ஜாதி மத வித்தியாசம் பார்க்காதவரா?

வெற்றி பெற்றால் எளிதில் மக்கள் அவரைச் சந்திக்க முடியுமா?

தொகுதியிலே தங்கி மக்களுக்கு பணியாற்றுவாரா?

பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமுதாயப் பணி செய்யும் குணமுள்ளவரா?

தொகுதி மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவரா? அவற்றைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டங்கள் வைத்திருப்பவரா?

நாட்டின் சட்ட திட்டங்கள், அரசு நிர்வாகம், பொருளாதாரம் போன்ற விபரங்களை நன்கு புரிந்து கொள்ளும் திறமை உள்ளவரா?

நாட்டின் முன்னேறத்தில் ஆர்வம் கொண்டவரா?

சமூக அளவிலும், பொருளாதாரத்திலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவரா?

ஆண், பெண் சமத்துவத்தை ஆதரிப்பவரா?

தனி மனித ஒழுக்கமும் நல்ல குணங்களும் கொண்டவரா?

மக்களுக்காக சுறு சுறுப்பாக பணியாற்றக் கூடிய திறன் உள்ளவரா?

என்ற கேள்விகளை எழுப்புங்கள்.

பெரும்பாலான கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் தயக்கமின்றி அவருக்கு வாக்களியுங்கள்!

அண்ணா சொன்னார்:

“ தேர்தலின்போது மயக்க மொழிகள் பேசப்படும். அறிந்து நீக்கிடவும், தெரிந்து தெளிவு பெறவும் அறிவாற்றல் வேண்டும். தேர்தலின்போது பிரச்சினைகள் குழப்பப்படும். உண்மையைக் கண்டறியும் திறன் வேண்டும்” – (1965ல் அண்ணா எழுதிய ‘குடியாட்சிக் கோமான்’ என்ற கட்டுரையிலிருந்து”

About The Author

2 Comments

  1. maleek

    விழித்துக்கொண்டே காணும் கனவுக்குப்பெயர் நம்பிக்கை” என்றான் எமெர்சன்.இப்போது இல்லாவிட்டாலும்,எப்போதாவது இந்த நம்பிக்கைகள் நம் நாட்டை ஆளட்டும்.”

  2. P.Balakrishnan

    தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பிரிவினரிடமும் வெவ்வேறு விதமான சடங்குகள் காணப் படுகின்றன. அவற்றைத் தொகுத்தளித்தால் சுவையாக இருக்கும்.! _ அரிமா இளங்கண்ணன்

Comments are closed.