புத்தகங்களை நேசிப்போம்
“ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.” – ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)
“தனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டபோது, “புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக இருந்து விட்டு வருவேன்” என்றார் நேருஜி.
“என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று” என்றார் பெட் ராண்ட் ரஸ்ஸல்.
“மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது?” என்று வினவப்பட்டபோது சிறிதும் யோசிக்காமல் “புத்தகங்கள்” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
பெண் விடுதலைக்கு ஒற்றை வரித் தீர்வாக, “கரண்டிகளைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுத்தால் போதும்” என்றாராம் தந்தை பெரியார்.
“என் மௌனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது” என்று தன் பேச முடியாத மௌனத்தை வர்ணித்தார் ஹெலென் கெல்லர்.
“வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம், சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்” என்று கோரி ஏழு நாள் உண்ணாவிரதம் இருந்தார் 29 ஆண்டுகள் சிறையிலிருந்த நெல்ஸன் மண்டேலா.
“பிறந்தநாளுக்கு என்ன வேண்டும்?” என்று நாடு கேட்ட போது, “புத்தகங்கள்தான் வேண்டும்” என்று தயக்கமின்றி லெனின் கூற, குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம் உலகில் மிகப்பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் புத்தகங்கள்!
”குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று தூக்கி எறியபட்ட போது பேரறிஞர் இங்கர்ஸால் சென்ற இடம் நூலகம்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் நூறு டாலருக்கு புத்தகங்கள் வாங்குவாராம் சார்லி சாப்ளின்!
“ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச்சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்” என்பாராம் வின்ஸ்டன் சர்ச்சில்.
”ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது, ”ஒரு நூலகம் கட்டுவேன்” என்றார் காந்திஜி.
“விமானத்தில் பம்பாய்க்கு செல்லாமல், காரில் மூன்று நாட்கள் மெனக்கெட்டு பயணம் செய்வது ஏன்?” என்று கேட்ட போது “பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது” என்றார் அறிஞர் அண்ணா.
“துப்பாக்கிகளை விட வலிமையான ஆயுதங்கள் எவை?” என்று கேட்டபோது ”புத்தகங்கள்தான்“ என்றார் மார்டின் லூதர் கிங்.
”எங்கே தங்க விரும்புகிறீர்கள்?” என்று லண்டன் தோழர்கள் கேட்டு, சில முகவரிகளைக் கொடுத்தபோது “எது நூலகத்திற்கு அருகில் இருக்கிறதோ அங்கேதான்” என்றார் அம்பேத்கார்..
தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன் வரை வாசித்துக் கொண்டிருந்தார் பகத்சிங்.
நாமும் புத்தகங்களை நேசிப்போம்!
(நன்றி : புத்தகம் பேசுது, ஏப்ரல் இதழ் தலையங்கம்)
“