கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

கோபத்தைக் களைவது எப்படி ?

"என் நண்பனிடம் நான் கோபமுற்றேன். அவனிடம் பேசினேன், கோபம் போய்விட்டது!" ஆனால் "என் பகைவனிடம் கோபமுற்றேன். அவனிடம் பேசாததால், என் கோபம் விஷ மரமானது!" — வில்லியம் பிளேக்.

(மின்னஞ்சலில் இதை அனுப்பிய திரு சீனி, ராஜ்குமார் அவர்களுக்கு ஜபரவின் நன்றி!)

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று கோபத்தின் முழு காரணகர்த்தாவாக தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்.

பிறர் மீது கோபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை. குற்ற உணர்வு, பச்சாதாபம், இந்தக் கோபம் தேவைதானா என்கிற மறுபரிசீலனை….. என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம். இது ஒருபுறமிருக்க, இதன் விளைவாக, நாம் யாரிடம் கோபத்தைக் காட்டினோமோ அவருக்கு பதிலுக்கு நம்மீது கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது யார் மீதாவது வெளிப்பட்டே தீரும். அது இயற்கை. இல்லையென்றால் நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.

ஆக, இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன. பின் என்ன செய்வது? இந்த கேள்விக்குப் பதிலை ஒரு சிறு கதை மூலம் காண்போம்.

ஒரு துறவிக்கு படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரிடம் ஒரு சிறு படகும் இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார். பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடிதான்!

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்றுதான் அவர் முன்னால் இருந்தது. "அவர் தன் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால் அந்த நிலையே அவருக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

அந்தப் படகு அவருக்கு ஞானகுருவாகத் தெரிந்தது. இப்போதெல்லாம் யாராவது அவரை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் அவர் புன்னகையுடன் "இது காலிப் படகு" என்று அவருக்குள் கூறிக் கொண்டு அமைதியாக நகர்ந்து போக ஆரம்பித்துவிட்டார்.

கோபமே அவசியமில்லை, கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவதுதான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்சினைகளால் சரியான மனநிலையில் இல்லாமல் இருந்தால், அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக் கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். மனம் வீணாகப் புண்படும். கடுகடுப்புக்கு முகமும், கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும். இந்தச் சிறிய தினசரி அனுபவம் நமக்கு ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம். அடுத்தவரது சொற்களோ, செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத்தான் எதிர்கொள்வோம். ஆனால் உண்மையில் கோபமும், கோபமின்மையும் நம் மனப்பான்மையையும், மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும். நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும். உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத்தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே!

எனவே, யாராவது வந்து நம்மை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது" என்று நமக்குள் கூறிக் கொண்டு அமைதியாக நகர்ந்து விட முயலுவது நல்லது.ஒரு ஆள் ஜென் துறவியிடம் வந்தார்.

"சுவாமி, எனக்கு அடிக்கடி கோபம் வருகிறது. அந்த நேரத்தில் என்ன செய்கிறேன் என்பதே தெரிவதில்லை. சில நேரம் வீட்டுக் கண்ணாடிப் பொருட்களையும் கூட உடைத்துப் போட்டு இருக்கிறேன். வீட்டிலிருப்பவர்களிடமும் வெகு கடுமையாக நடந்து கொள்கிறேன். சில நேரம் தவறு என்னுடையதாகவும், சில நேரம் மற்றவர்களுடையதாகவும் இருக்கிறது. இந்த மாதிரியான என் நிலையினால் பல நண்பர்களை இழந்தும், கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்டும் இருக்கிறேன். இதற்குத் தாங்கள்தான் ஏதாவது வழி சொல்லவேண்டும்".

துறவி ஒரு மரப்பலகையும், கூடவே ஒரு பை நிறைய ஆணிகளையும் கொடுத்துச் சொன்னார். "எப்போதெல்லாம் உங்களுக்குக் கோபம் வருகிறதோ.. அப்போதெல்லாம் இந்தப் பலகையில் ஒரு ஆணி அடித்து வையுங்கள். பிறகு செய்தது தவறென்றோ அல்லது இன்னும் தன்மையாகப் பேசி இருக்கலாம் என்றோ நினைப்பீராயின் அந்த நேரத்தில் அடிக்கப்பட்ட ஆணியைப் பிடுங்கி எடுங்கள். ஒரு மாதம் கழித்து என்னிடம் வாருங்கள்".

ஒரு மாதம் கழித்து அந்த மனிதர் வந்தார். பலகையில் நிறைய ஆணி அறையப்பட்ட தடங்களும், சில ஆணிகளும் மிச்சமிருந்தன.

"சுவாமி, இப்போது கோபம் மட்டுப்பட்டு இருக்கிறது. பாருங்கள்! எத்தனை தடவை தவறுணர்ந்து ஆணிகளைப் பிடுங்கி இருக்கிறேன்."

ஜென் ஆசிரியர் சொன்னார். "அதெல்லாம் சரி! நான் உன்னிடம் பலகையைத் தரும்போது எப்படி இருந்ததோ அப்படியே தா. இதில் பார் எத்தனை காயங்களும் ஓட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன!!".

About The Author

8 Comments

  1. Devika

    மிகவும் அருமை. கோபம் ஒரு மனிதனை எந்த அளவு பாதிக்கும் என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள். சில மனிதர்கள் இன்னும் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்” அப்படினு சொல்லி அவர்களை ஊக்கபடுத்தவும், தங்களை தாங்களே சமாதனம் செய்தும் கொள்கிறார்கள். இது முட்டாள்தனம்.”

  2. arockia

    அருமையான கட்டுரை. நன்றி.
    வாழ்த்துகள்.

  3. Yocks

    காலிப்படகு கதை அருமை.
    கோபம் வரும்போதெல்லாம் எனக்கும்
    இந்த கதை நிணைவிற்கு வரவேண்டும்.
    கோபம் வரும்பொழுது இந்த காலிப்படகு கதை என்
    நிணைவிற்கு வரவில்லையே என்று காலிபடகு
    கதையின் மேல் எனக்கு கோபம் வராதிருக்கவேண்டும்.
    அப்படியும் மீறி எனக்கு கோபம் வந்தாலும், இந்த காலிபடகு
    தான் என்னை காப்பாற்றவேண்டும். நன்றி.

  4. N.Ganeshan

    இந்தக் கட்டுரையின் பெரும்பகுதி நான் எழுதிய ஒன்றிலிருந்து பெரும்பகுதி எடுக்கப்பட்டது. முழுக்கட்டுரையையும் இந்த லிங் உபயோகப்படுத்தி படிக்கலாம்.

    http://enganeshan.blogspot.com/2007/12/blog-post_25.html

  5. viji.m

    எனக்கு கோபம் வரும் பொது இந்த காலி படகு நாயபகம் எனக்கு வர வேன்டும். இது உன்மை.

  6. batmanathan

    சினம்தான் எல்லா கேட்டிற்கும் காரணம். சினத்தை கட்டுப்படுத்திவிட்டால் எல்லா நற்குணங்களும் நம்மை நாடிவந்து ஒட்டிக்கொள்ளும்.

Comments are closed.