புரிய வைத்த பூ
————–
ஆங்கிலக் கவிதை ஒன்றைப் படித்த தாக்கம்!
வயதாகிப் போனாலே ஒரு சுயபச்சாதாபம் வந்துவிடுகிறது. எல்லோரும் இருந்தாலும் யாருமே இல்லாததுபோல ஒரு வெறுமை. எவருக்கும் பயன்படாமல், ஒரு சுமையாகவே இருப்பதுபோல் ஒரு மன உளைச்சல். மனசெல்லாம் எதிர்மறை எண்ணங்களின், தாழ்மை உணர்ச்சிகளின் குவியல். இந்த எண்ணங்களோடுதான் சோர்வுடன் அந்தப் பூங்காவில் ஒரு மர நிழலில் வந்து அமர்ந்தேன். வழக்கமாக என்னோடு அவ்வப்போது பேச வரும் என்னைப் போன்ற நாலைந்து பெரிசுகளையும் காணோம்.
எனக்கு மனப்பாடமாகிவிட்ட ஒரு சுலோகத்தை சற்றே உரத்த குரலில் முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் சற்று தூரத்தில் குதித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனைப் பார்த்தேன். அநேகமாக பன்னிரண்டு வயதிருக்கும். எந்தக் கவலையுமில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தான். தொள தொளவென ஒரு பழைய டீ ஷர்ட். முழங்கால் வரையிலான ஒரு அரைக்கால்(?) பேண்ட், வாரப்படாத தலை! ஆனால் அவன் உற்சாகத்துக்குக் குறைவே இல்லை.
அவனை என்னுடைய பாட்டுக் குரல் ஈர்த்திருக்க வேண்டும். அவன் கையில் ஒரு வாசமிழந்த, வண்ணம் எதுவுமில்லாத இதழ்கள் உதிர்ந்த ஒரு சருகான பூ. அதைப் பூவென்று சொல்வது ஒரு உயர்வு நவிற்சி அணி. அந்த வாடிய மலரை முகர்ந்து முகர்ந்து பார்த்து “எத்தனை வாசனை!” என்று சந்தோஷத்துடன் உரக்க சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பூவில் அவனுக்கு அப்படி என்னதான் இருந்ததோ?
அருகில் வந்து மெதுவாக அமர்ந்த அவன், “நீங்கள் என்ன பாடிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஆவலுடன் கேட்டான்.
“இது கடவுளின் மீது ஒரு பாடல்” என்றவுடன், “அப்படியா! உங்களுக்கு இந்தப் பூவைப் பரிசாகத் தருகிறேன். மிகவும் வாசனை நிறைந்த பூ” என்றான்.
“வேண்டாம், நீயே வைத்துக்கொள்” என்றாலும் கேட்காமல் அந்த மலர் சருகை என் கையில் வைக்க முயன்றான். கையில் வைக்க இயலாமல் எங்கோ வெட்டவெளியில், அந்தரத்தில் துழாவினான். அப்போதுதான் கவனித்தேன், அவனுக்குப் பார்வை இல்லை என்பதை.
அவன் கரத்தைப் பற்றி அந்த பூவைப் பெற்றுக்கொண்டு “ரொம்ப நன்றி!” என்றேன்.
“பூவை முகர்ந்து பாருங்கள், ரசியுங்கள்!” என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான் அந்த விழியிழந்த சிறுவன்.
அந்த மலர் சருகை கையில் வைத்துக்கொண்டு யோசித்துப் பார்க்கிறேன். ”எப்படி அந்தச் சிறுவனுக்கு என்னைத் தேடி வரத் தோன்றியது? நான் எதற்கும் பயனற்றவன் என்ற சுயஇரக்கத்தில் நான் உருகிக் கொண்டிருப்பதை அவன் தன் மனக்கண்ணால் தெரிந்து கொண்டுதான் வந்தானா? மலர் மூலம் எனக்கு ஞானம் உணர்த்த வந்தானா?” புரியவே இல்லை! ஆனால் ஒன்று மட்டும் எனக்கு இப்போது தெளிவாகி விட்டது. பிரச்சினைகள் வெளியில் இல்லை. என்னுடைய சுயபச்சாதாபத்திற்கும், தாழ்வு உணர்ச்சிக்கும் நானேதான் காரணம்; வேறெவரும் இல்லை.
இதோ இந்த வாடிய மலர் கூட அந்தச் சிறுவனுக்கு மகிழ்ச்சி அளித்தது போல நானும் – என் இளமை இதழ்கள் உதிர்ந்தாலும் – மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும்! எனக்கு குறையொன்றுமில்லை! நான் என்றும் வாடாதவன்!
அந்த வாடிய மலரை முகர்ந்து பார்க்கிறேன். ஒரு புதிய வாசனை தெரிகிறது! அந்த சிறுவனைத் தேடுகிறேன். அதோ அங்கு கீழே விழுந்த இன்னொரு வாடிய மலரை கையில் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஓடுகிறான். நிச்சயம் இன்னும் எவருக்கோ அந்த பூவைக் கொடுக்கத்தானோ?
நாரதர் டெக்னிக் நன்மையில் முடியும்!
————————————
ஒரு முறை, “யார் அழகு?” என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி விட்டது. தீர்வு சொல்லும்படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ நிஜமாகவே சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார்!
ஸ்ரீதேவியாகிய லட்சுமிதான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கி விடுவாள். மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு தன் வீட்டை விட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர், யோசிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் விதமாக, “எங்கே… சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள்” என்றார்.
ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர், "ஸ்ரீதேவி வரும்போது அழகு; மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல… இரு தேவிகளுக்குமே பூரிப்பு!
அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல… நாரதர்தான்!
(சுவாமி சுகபோதானந்தா அவர்களின் உரை தொகுப்புகளிலிருந்து)
எனக்கு ஏன் ஜுலை மாத இதழ்கள் அனுப்பவில்லை? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்