கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக மேலாளராக ஆசையா?

நீங்கள் நிர்வாக இயலில் பல பெரும் பட்டங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக இராமல் ஒரு சிறந்த மேலாளராக மிளிர வேண்டுமா?

இதோ சில பயனுள்ள குறிப்புகள் :

நீங்களே பின்பற்றி நடக்காத சில அலுவலக விதிகளை மற்றவர்கள் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கக் கூடாது.

உங்களிடம் பணிபுரியும் சக நிர்வாகிகள், ஊழியர்கள் சொல்வதை கவனமாக காது கொடுத்துக் கேட்டு அவற்றை நிறைவேற்றுவதற்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும்.

அளித்த வாக்குறுதிகளை, அவை எவ்வளவு சிறியவையாக இருந்தாலும் நிறைவேற்றுதல் அவசியம்.

மற்றவர்களின் கருத்துக்கள், யோசனைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் அழைப்புகளுக்கு, விசாரணைகளுக்கு, தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.

மிக அவசரமானவை, அவசரமற்றவை, முக்கியமானவை, முக்கியத்துவம் குறைந்தவை என தரம் பிரித்து அதற்கேற்ப பதிலளித்து செயல்படும் திறன் வளர வேண்டும்.

எல்லா விஷயங்களிலும் தானே வல்லுனன், எல்லாம் தெரிந்தவன் என்ற மனப்பான்மை கூடாது.

மற்றவர்களிடம் வாங்கிய பொருட்களை சொன்ன காலத்திற்குள் திருப்பிக் கொடுத்தால் மற்றவர்களின் மதிப்பீட்டில் உயரலாம்.

மற்றவர்களின் பெயருக்குக் கெடுதல் தரும் வதந்திகளை நம்பவும் கூடாது; பரப்பவும் கூடாது.

அலுவலகத்தில் இருக்கும்போதோ, சக நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கு செல்லும்போதோ மற்றும் விருந்துகளுக்குப் போகும்போதோ கண்ணியமாக அதற்கேற்றவாறு உடையணிந்து செல்லத் தெரிந்து கொள்வது முக்கியம்.

தனக்கு வரும் அழைப்பிதழ்களுக்கு தேதிகளைக் குறித்துக் கொண்டு அவற்றுக்கு நேரில் சென்றோ அல்லது எழுத்து மூலமாகவோ வாழ்த்துக்கள் அளிக்கத் தவறக்கூடாது.

மேலதிகாரிகளிடம் உரையாடுகையில் உரிய மதிப்புக் கொடுக்க வேண்டுமே தவிர தன்னைத் தாழ்த்திக் கொண்டு அனாவசியமாகக் குழையாமல் நடந்து கொள்ள வேண்டும். வெறும் ‘ஆமாம் சாமி’யாக இருந்தால் மற்றவர்களிடம் உங்கள் மதிப்பு தாழ்ந்து போகும்.

மற்றவர்களிடம் தன் சக நிர்வாகிகளை, ஊழியர்களை அறிமுகப்படுத்தும் போது கவுரவமான முறையில் அறிமுகப்படுத்தினால் அவர்கள் மன நிறைவடைவார்கள்.

பணிபுரிபவர்களின் நல்ல செயல்பாடுகளை மனமாரப் பாராட்டுதலும், அதைப் போலவே தனக்கு வரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அடக்கமாக ஏற்றுக் கொள்ளுதலும் உயரிய பண்புகள்.

நேரம் தவறாமை, நேர்மை, கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகிய உங்களுடைய பண்புகள் பணிபுரிபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்.

சுருங்கச் சொன்னால், மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பதும், அவர்களிடம் மனித நேயத்துடன் நடந்துகொள்வதும்தான் உயரிய நிர்வாக மேலாளரின் பண்புகள்!

சுய நலத்துடனும், அதிகார மமதையுடனும் நடந்து கொள்ளும் மேலாளர்கள் அனைவரும் உடன் இருந்தாலும் தான் தனித்துவிடப்பட்டது போல் உணர்வார்கள்.

(நன்றி: Letitia Baldridge’s complete guide to Executive manners)

About The Author

2 Comments

  1. R.V. Raji

    ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எங்களிடையே பகிர்ந்துகொண்டதற்கு நன்றி… ஜ.ப.ர!
    இக்கருத்துக்கள் நிர்வாக மேலாளராக விரும்புவோருக்கும், பணிபுரிவோருக்கும் மற்றும் அனைத்து தொழிலுக்கும் பெரிதும் உதவும்.
    நன்றி!….பாராட்டுக்கள்!!…

  2. R.V. Raji

    ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எங்களிடையே பகிர்ந்துகொண்டதற்கு நன்றி… ஜ.ப.ர!
    இக்கருத்துக்கள் நிர்வாக மேலாளராக விரும்புவோருக்கும், பணிபுரிவோருக்கும் மற்றும் அனைத்து தொழிலுக்கும் பெரிதும் உதவும்.
    நன்றி!….பாராட்டுக்கள்!!…

Comments are closed.