சொன்னது நீதானா?
கவியரசர் கண்ணதாசன் ஒரு கல்லூரியில் கவி அரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார். அவர் கவிதை வாசிக்க எழுந்ததுமே, பெருத்த உற்சாக ஆரவாரம் எழுந்தது. ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல், வாசித்து முடிந்து வெகுநேரம் வரை கரவொலிகள். அவை ஓய்ந்ததும் கண்ணதாசன் கூறினார், "இதுவரை நான் வாசித்தது என் கவிதையே அல்ல. நான் எழுதிய கவிதையை என் மாணவருக்குக் கொடுத்து விட்டேன். அவரது கவிதையை வாங்கி நான் வாசிக்கும்போது நீங்கள் வரிக்கு வரி கை தட்டினீர்கள். ஆகவே சொல்பவன் யாரென்றுதான் இந்த உலகம் பார்கிறதே தவிர சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை என்பதுதான் உண்மை" என்று.
(நன்றி: மாறுபட்டு சிந்தியுங்கள் – ஜக்கி வாசுதேவ்)
கட்டணமும் கட்டளையும்
அந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார். வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும் பரிசோதித்தார். மருந்தை எழுதித் தரச்சொன்ன தலைவர், ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார். பிறகு சொன்னார், "இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல. ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் முதல் நோயாளியின் கட்டணம் இது" என்றார். அவர் பேரறிஞர் அண்ணா.
சட்டத்தை மாத்து
அவர் முதலமைச்சராய் இருந்தபோது தலைமைச் செயலகத்தில் லிஃப்ட்டில் பயணம் செய்தார். லிஃப்டை இயக்கும் பையன் அரசு வேலைக்கு பத்தாவது வரையாவது படித்திருக்க வேண்டுமென்று சட்டம் வந்திருப்பதால் எட்டாவது வரை படித்த தன்னை வேலைக்கு வர வேண்டாமென்று சொன்னதாய் முறையிட்டு வருந்தினான். "அவனை விட குறைவாப் படிச்ச நான் முதலமைச்சரா இருக்கலாம், எட்டாவது படிச்ச பையன் லிஃப்ட் பொத்தானை அமுக்கக் கூடாதாண்ணேன்! சட்டத்தை மாத்துங்கண்ணேன்!" சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர்.
வாக்குறுதி
சாந்தி நிகேதனில் ஒரு சிறுமி, காந்தியிடம் ஆட்டோகிராஃப் கேட்க, ‘நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற உயிரைக் கொடுக்கவும் தயங்காதே. அது தவறான வாக்குறுதிஎன்றாலும்!’ என்று எழுதிக் கையெழுத்து இட்டாராம். தாகூர் அந்தத் தாளின் பின்புறம், ‘நீ கொடுத்த வாக்குறுதி தவறு எனில் திரும்பப் பெறத் தயங்காதே’ என்று எழுதிக் கையெழுத்து இட்டாராம். எது சரி?
குறையொன்றுமில்லை
நாற்காலியில் அமரும்போது குட்டையான உங்கள் கால் தரையைத் தொடவில்லையே என்ற மனக்குறை உங்களுக்கு உண்டா என்று ஒருவர் லெனினைக் கேட்டார். அதற்கு லெனின் சொன்ன பதில் என்ன தெரியுமா? கால்கள் தரையைத் தொடாவிட்டால் என்ன? என்னால் எனது கைகளால் வானத்தைத் தொட்டு வர முடியும் என்றார்.
சிறந்த நகரம் எது?
ஜன நாயகம் தோன்றியது 2000 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க நாட்டு அரசுகளில் என்று கூறப்படுகிறது. இத்தகைய பல்வேறு நகர அரசுகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்தவர் சோலன் என்ற அரசியல் அறிஞர். அவரிடம் ஒருவர் கேட்டார், "நீங்கள் பல்வேறு நகர அரசுகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்வதற்கு சிறந்த நகரம் என்று எத்தகைய நகரத்தைக் கருதுகிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார், "எந்த நகரத்தில் தீமையால் பாதிக்கப்படாதவர்கள் அந்தத் தீமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணையாக, தீச்செயலை புரிந்தவர்களுக்கு எதிராக
குரல் கொடுத்து அவர்களைத் தண்டிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார்களோ அந்த நகரம்
தான் வாழ்வதற்கு சிறந்த நகரம்" (நன்றி – களத்தில் இறங்க வேண்டிய நேரம் – அ. கி வெ)
"தீவிரமாக செயலாற்றுவோம் என்ற உறுதியும் தெளிவான சிந்தனையும் கொண்ட குடிமக்களால் உலகை மாற்ற முடியும் என்பதைக் குறித்து எந்த சந்தேகமும் கொள்ளாதீர்கள். அதுதான் உலகில் மாற்றங்களைக் கொண்டு வந்த்துள்ளது." (மார்கரெட் மீட் – சமூக மானுடவியல் வல்லுனர்)
நன்றி – வலைப்பதிவுகள்
மீண்டும் சுடுவோமா?
“
கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது என்னை மிகவும் வியக்கவைத்தது. நன்றி.
மன்னை பாசந்தி
அருமையான தகவல் தொகுப்பு! சிந்திக்கவைக்கும் வாழ்வியல் கூறுகள்! பிரமாதம்.
அருமையான தகவல் தொகுப்பு…
படத்துடன் (ஓவியம்) பதிவிட்டிருந்தால் சுவை கூடும்