பல நீதி மன்றங்கள் கண்ட மின்னணு வாக்கு இயந்திரம் (மி. வா. இ)
தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு சாதகமாக இந்த இயந்திரங்களில் செய்யப்பட்ட மாற்றங்களே அவர்கள் வெற்றிக்குக் காரணம் என்றும் மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறைக்கே திரும்ப வேண்டுமென்றும் தோல்வியுற்ற கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த சந்தேகங்களும் விவாதங்களும். மி. வா. இ துவங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்து வந்திருக்கின்றன என்று இந்த இயந்திரத்தை வடிவமைப்பதிலும், அதை உபயோகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்த சுஜாதா அவர்கள், தன்னுடைய ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரை ஒன்றில் (ஜனவரி 2003 விகடன் பதிப்பு) குறிப்பிடுகிறார். அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளவை:
முதன் முதலில் கேரளாவில் கொச்சியின் அருகில் உள்ள பரூர் என்னும் கிராமத்தில்தான் மி.வா.இ தன் பயணத்தை தொடங்கியது. அப்போதிலிருந்தே இதன் நீதிமன்றப் பயணமும் துவங்கி விட்டது. அப்போது இதைப் பயன்படுத்துவதை நிறுத்த இடதுசாரி வேட்பாளர் ரிட் மனுவைப் போட, அதை நீதிமன்றத்தில் இயக்கிக் காண்பித்திருக்கிறார் சுஜாதா. அந்த ரிட் தள்ளுபடி செய்யப்பட்டு இயந்திரம் உபயோகப்படுத்தப்பட்டது. ரிட் போட்ட இடது சாரி வேட்பாளரே தேர்தலில் வென்றார்! ஆனால், தோற்றுப் போன காங்கிரஸ் வேட்பாளர் (ஜோஸ்) கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்.
அதில் தீர்ப்பு சொன்ன நீதிபதி கொச்சுதோமன், "இந்த இயந்திரங்கள் மிகுந்த சிரத்தையுடன் நம் நாட்டுக்கேற்ப வடிவமைக்கப்பட்டவை. இவற்றை நாடெங்கிலும் பயன்படுத்தும் நாள் வந்தே தீரும்" என்று அப்போதே சொல்லியிருந்தார்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்றபோது, நீதிபதிகள் "இயந்திரங்களில் பழுதில்லை. ஆனால் தேர்தல் சட்டத்தை மாற்றி இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என்றால்தான் உபயோகிக்கலாம்" என்று தீர்ப்பளித்தனர்.
இதன் பின்பு, சுஜாதா ராஜீவ் காந்தி மூலம் சில அருமையான மாற்றங்களை இயந்திரத்தில் அமல்படுத்த தில்லி ஐ. ஐ.டி சான்றிதழ் கொடுத்தது. – சாதகமான சான்றிதழ்.
இதன் பின் அரசுகள் மாறியும் கவிழ்ந்தும் போக (ராஜீவ் காந்தியின் மரணம்) சட்டத்தை மாற்ற எவரும் முன்வரவில்லை. தேர்தல் கமிஷன் இயந்திரங்களை ஆர்டர் செய்ய, அதன்படி சுஜாதா ஒன்றரை லட்சம் இயந்திரங்களை ஜப்பானிலிருந்து வாங்கி வந்தாலும் அவை உபயோகிக்கப்படாமல் (சட்டம் மாற்றப்படாததால்!) தூங்கிக் கொண்டிருந்தன. பிறகு எம்.எஸ்.கில் அவர்கள் இதற்குப் புத்துயிர் கொடுத்து எல்லா மாநிலங்களிலும் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்தபோது, இதற்கு எதிராக மீண்டும் எழுந்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வாறாக, பலமுறை நீதிமன்றம் ஏறி இறங்கி வந்த இந்த இயந்திரத்தின் கோர்ட் பயணம் இப்போதும் தொடர்கிறது.
இதன் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களள எழுப்பும் மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சுஜாதா அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது, "இந்த இயந்திரத்தின் உள்ளே இருக்கும் மைக்ரோ கம்ப்யூட்டர் ஜப்பானிய ஹிட்டாச்சி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டிற்கான ஆணைத்தொடர் கட்டளைகள் (control programme) வடிவமைக்கும் போதே தீர்மானிக்கப்பட்டவை. ஒரு முறை எழுதியதை ஈசன் வந்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று எந்த பாகுபாடும் தெரியாது. இந்த நம்பருக்கு இத்தனை ஓட்டு என்று போடப் போட கூட்டிக்கொண்டே செல்லும். இறுதியில் இன்னின்னவருக்கு இத்தனை ஓட்டு என்பதைத் துல்லியமாகச் சொல்லும். வேட்பாளரின் கட்சியெல்லாம் அதற்கு முக்கியமில்லை. சீரியல் நம்பர்தான் முக்கியம். இதன் செயல்பாட்டை எந்தக் கட்சியும் தனக்கு சாதகமாக மாற்ற முடியாது."
இந்த மெஷினை ஒரு தட்டு தட்டினாலே வேறு ஒருவருக்கு வாக்கு போய்விடும் என்று கோர்ட்டில் சொல்லும் போது சிரிப்புத்தான் வருகிறது. ஒவ்வொரு முறையும் இயந்திரம் செயல்படும்போது யாருக்காவது ஓட்டுப் போட்டுத்தான் ஆக வேண்டும். அப்புறம்தான் அடுத்த முறை செயல்படுத்த முடியும். மேலும் இந்த மெஷின் பொய் சொல்லாது! லஞ்சம் வாங்காது!
அமெரிக்க தேர்தல் முறைகளை விட வேகமாக தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதிகள் படைத்த இந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை பற்றிய விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இதனை வடிவமைத்த சுஜாதா அவர்கள், "இந்த இயந்திரத்தில் எவருக்கும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வாக்களிப்பது சாத்தியமல்ல" என்று தீர்மானமாகக் கூறினாலும் மக்களின் சந்தேகங்களும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இது மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மட்டுமல்ல – எந்த வித புது மாற்றத்திற்கும் பொருந்தும்.
தமிழ் மக்கல் திருந்துவதில்லை