இந்தியாவில் செயலாற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை வில்லியம் எல்.சைமன் என்ற அமெரிக்கர் ‘Think of India’ என்ற தமது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இந்தப் புத்தகத்தின் இணை ஆசிரியர் வினய் ராய் என்ற இந்தியர்.
1) இந்தியப் பொது நேரத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியப் பொது நேரம் என்பது குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாள் பிந்தி. அல்லது அப்படி ஒன்று இல்லாமலேயும் இருக்கலாம்!
2) பொறுமையுடன் இருங்கள்!
எந்த வணிக அல்லது முக்கிய சந்திப்புகள் என்றாலும், முதலில் நல்லெண்ணப் பரிமாற்றங்கள், சில சம்பவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்ட பின்தான் ஆரம்பிக்கும்! இந்தியர்களைப் பொறுத்தவரை தனி நபர் உறவுகள் முக்கியமானவை.
3) பெண்கள் அறிமுகமாகும்போது..
எவ்வளவு முன்னேறிய வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணியாக இருந்தாலும், நீங்களாக கைகளை நீட்டாதீர்கள். அவர்களாகக் கை நீட்டினால் மட்டுமே பதவிசாக, மென்மையாகக் குலுக்குங்கள். மற்றபடி இரு கரம் கூப்பி நமஸ்தேதான்!
4) பணமே பெரிதல்ல!
இந்தியர்கள் நம்முடன் வர்த்தகத் தொடர்புகள் கொள்ளும்போது பணத்தை மட்டுமே பெரிதாகக் கருதுவதில்லை. நம்பிக்கை, நேர்மை, நாணயம் இவற்றுக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள்.
5) பழகத் தெரிந்து கொள்ளுங்கள்!
அதிரடி, அட்டகாசப் பேச்சுகளுக்கு இந்தியர்கள் மயங்குவதில்லை. புன்னகையும், கனிவான பேச்சுமே முக்கியமானவை. ‘ஜி’ போட்டு இருபாலரையும் அழைப்பது சாலச் சிறந்தது.
6) அன்பளிப்புகள் தரும்போது..
இரண்டு கைகளாலும் கொடுங்கள். பரிசுப் பொருள்களைச் சுற்றியிருக்கும் தாள்கள், வெள்ளை நிறமாகவோ, கருப்பு நிறமாகவோ இருக்கக்கூடாது. இவை அமங்கலமாகக் கருதப்படுகின்றன.
7) பட்டத்தைச் சொல்லி அழையுங்கள்
"டாக்டர், ப்ரொஃபஸர்" இது போன்று அழையுங்கள். அப்படி எதுவும் இல்லாவிட்டால், "மிஸ்டர், மிஸ்" என்று அழையுங்கள்.
8) இந்தியர்களின் ‘ஆமாம்’!
இந்தியர்கள் ‘ஆமாம்’ என்று தலையசைப்பது அமெரிக்கர்களுக்கு ‘வேண்டாம்’ என்பது போல் இருக்கும். இந்தியர்கள் தலையசைத்தால் அதன் பொருள் "ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்!"