தவளையின் பிரார்த்தனை
மும்பையில் பிறந்து வளர்ந்த பாதிரியாரான டோனி. டி. மெல்லோ தனது ஆன்மீகப் பிரசங்கங்களில் சொன்ன சின்னச் சின்ன கதைகள், நிகழ்ச்சிகள், நற்செய்திகள், நகைச்சுவை துணுக்குகள் "The prayer of the frog" என்ற தலைப்பில் இரண்டு பாகங்களுடைய ஆங்கில நூலாக வெளிவந்திருக்கின்றன. அவர் சொன்ன பல யதார்த்தமான கதைகள் அவருடைய சொந்தக் கற்பனை இல்லையென்றாலும், அவர் சொல்லுகின்ற பாணி மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். (நன்றி : அவற்றின் தமிழாக்கமான ‘தவளையின் பிரார்த்தனை’ என்ற நூல்)
பாதிரியார் புரூனோ இரவுப் பிரார்த்தனையில் அமர்ந்திருந்தபோது ஒரு பெரிய தவளை கத்திக் கொண்டிருந்தது. தன் பிரார்த்தனைக்கு இடையூறாக இருந்த தவளையின் இரைச்சலைக் குறைக்க அவர் எவ்வளவோ முயன்றும் முடியாததால் அவர் ஜன்னல் வழியே கோபமாக கத்தினார்.
"ஏ, தவளையே கத்துவதை நிறுத்து! நான் பிரார்த்தனையில் இருக்கிறேன்."
அவரின் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து தவளைகள் அவர் பிரார்த்தனை செய்வதற்கு வசதியாக கத்துவதை நிறுத்திக் கொண்டன.
அப்போது அவர் ஆழ்மனத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. "உன் தோத்திரப் பாடல்களில் மகிழ்ச்சி அடைவதைப் போலவே அந்தத் தவளைகளின் கத்தலிலும் கடவுள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாமல்லவா?"
"ஒரு தவளையின் காட்டுக் கத்தல் கடவுளுக்கு எவ்வாறு மகிழ்ச்சியைக் கொடுக்கும்?" என்று உள் மனதிடம் எரிச்சலுடன் பாதிரியார் கேட்டார்.
அப்போது அந்தக் குரல் மீண்டும் ஆழ்மனதிலிருந்து சொன்னது. "கடவுள் ஒலியை எதற்காகக் கண்டுபிடித்தார்?
புரூனோ எதற்காக என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோது அவருக்கு ஒன்று புரிந்தது.
"தவளைகளே பாடுங்கள்" என்றார். தவளைகள் கத்தத் தொடங்கின.
அந்தத் தவளைகளின் கத்தல், இரவின் அமைதியில் அவருக்கு சுருதி லயத்தோடு கூடிய ஒரு தேவகானமாக புலப்பட்டது. பிரார்த்தனையின் உணமையான அர்த்தத்தை முதல் முறையாக புரூனோ புரிந்து கொண்டார்.
பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்த தலைவர் கூறினார். "நீங்கள் பல பிரார்த்தனைகளை செய்திப்பீர்கள்! பல பிரார்த்தனைகளைக் கேட்டிருப்பீர்கள். இன்றிரவு நீங்கள் பிரார்த்தனை ஒன்றைப் பார்க்கப் போகிறீர்கள்."
திரை விலகியது. மேடையில் பாலே நடனம் ஆரம்பமானது.
காலணி தைக்கும் தொழிலாளி, ரபியிடம் சொன்னான். "சில சமயம் நான் அவசரமாக காலைப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வேலைக்குச் சென்று விடுகிறேன். அப்போதெல்லாம் மிகுந்த வருத்தம் ஏற்படும். ஒருமணி நேரம் கூட பொருந்தி பிரார்த்தனை செய்யாத நான் எவ்வளவு துரதிருஷ்டசாலி என்று அடிக்கடி பெருமூச்சு விடுவேன்"
அவர் சொன்னார். "நான் கடவுளாக இருந்தால் உன் காலைப் பிரார்த்தனையை விட உன் பெருமூச்சைத்தான் அதிகம் நேசிப்பேன்"
பாட்டி : தினமும் இரவில் பிரார்த்தனை செய்கிறாயா?
பேரன் : ஓ! தவறாமல் செய்கிறேன்.
பாட்டி : காலை வேளைகளில்…?
பேரன் : இல்லை. பகல் நேரங்களில் எனக்கு பயமே ஏற்படுவதில்லையே!
"உங்கள் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது"
இதென்ன பிரமாதம்! இதன் புகைப்படத்தை நீங்கள் பார்க்கவே இல்லையே!
தன் நண்பன் அவனுடைய நாயுடன் சீட்டு விளையாடுவதைப் பார்த்தவன் சொன்னான். "உன் நாய் புத்திசாலித்தனமாக விளையாடுகிறது."
நண்பன் சொன்னான். "நீ நினைப்பது போல அது அவ்வளவு புத்திசாலி இல்லை.
ஒவ்வொரு முறையும் அதற்கு நல்ல சீட்டு கிடைக்கும்போது அது தன் வாலை ஆட்டி விடுகிறது"
இஸ்லாமிய மதகுரு பரீத்திடம் அவருடைய நண்பர்கள், தங்கள் கிராம வளர்ச்சிக்கு அக்பர் மன்னரிடம் நிதி உதவி கேட்கும்படி சொன்னார்கள். பரீத் அக்பரிடம் சென்ற போது அவர் பிரார்த்தனை முடிந்து வந்துகொண்டிருந்தார்.
பரீத் அக்பரிடம் "என்ன பிரார்த்தனை செய்தீர்கள்?" என்று வினவினார். "எனக்கு சகல சவுக்கியங்களும், வெற்றி மேல் வெற்றியும், நீண்ட ஆயுளும் தரும்படி வேண்டிக் கொண்டேன்" என்றார்.
பரீத் சட்டென அரசவையிலிருந்து வெளியேறி "நான் ஒரு பேரரசனைச் சந்திக்க வந்தேன். ஆனால் நான் சந்தித்ததோ ஒரு பிச்சைக்காரனை" என்றார்.
முல்லா ஒருவரிடம் தனது யானைக்கு கரும்பு வாங்க பணம் வேண்டுமென்று கேட்டார். அவர் "உங்களிடம் யானை இல்லாதபோது எதற்கு இந்த செலவு?" என்று பதிலுக்குக் கேட்டார்.
முல்லா கோபத்தில் அளித்த பதில். "நான் கேட்டது பணம்தான், அறிவுரை அல்ல"
ஆங்கில நாடகாசிரியர் ஆஸ்கார் ஒயில்டின் நாடகம் ஒன்று அன்று மாலையில் அரங்கேற்றப்பட்டு படு தோல்வி அடைந்திருந்தது. ஒருவர் அவரிடம் கேட்டார். உங்கள் நாடகம் எப்படி நடந்தது?
ஆஸ்கார் ஒயில்ட் சொன்னார். "ஓ, நாடகம் மகத்தான வெற்றி, ரசிகர்களின் ரசனைதான் படு தோல்வி"
கவிஞர் அவாடி என்பவர் தன்னுடைய வீட்டு வாசலில் அம்ர்ந்து ஒரு இரவில் ஒரு பாத்திரத்தைக் குனிந்து பார்த்த வண்ணம் இருந்தார். அந்த வழியாக வந்த சூஃபி "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"இந்தப் பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் தெரியும் நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் கவிஞர்.
சூஃபி துறவி சொன்னார். "எதற்கு கழுத்தை வளைத்துக் கொண்டு பார்க்கிறீர்கள்? வானத்திலிருக்கும் நிலவை நேராகவே பார்க்கலாமே!"
“
ஜ.ப.ர.!
தவளையும் ஓர் உயிர்தானே? அதனுடைய சத்தத்தையும் ஏத்துக்கிறதுதானே முறை. மனுஷங்க கத்துற காட்டுக்கத்தலை கேட்கிறதவிட தவளையின் கத்தலை கேட்கலாம். சந்தோஷமாகவும் இருக்கும். இந்த பாராவில் இருக்கிற சிந்தனையை தூண்டும் கருத்துக்கள் அருமை.
கடைசில இருக்கும் சூஃபி துறவியின் கருத்தும் நல்லாருக்கு.