ரசித்த சில குட்டிக்கதைகள் :
ஒரு நாயமான பதில்!
ஆர்தர்நிகஸ் என்பவர் ஒரு புகழ் பெற்ற பாடகர். அவரின் இனிய குரல் மக்கள் உள்ளங்களை எல்லாம் ஈர்த்துக் கொண்டது. அவரைக் கண்டுவிட்டால் மக்களுக்கு ஏற்படும் உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இரசிகர்கள் அவரை அப்படியே சூழ்ந்து கொள்வார்கள். சிலர் அவர் உடம்பைத் தொட்டுப் பார்ப்பார்கள். சிலர் அவர் உடையைப் பிடித்துப் பார்ப்பார்கள். இன்னும் சிலர் அவர் உடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்துக் கொண்டு போய்விடுவார்கள். பெண்களோ அவரைக் கண்டுவிட்டால் அவர் கையைப் பிடித்து முத்தமிடாது போகவே மாட்டார்கள். சில அதி தீவிர இரசிகர்கள் அவர் தலைமயிரைக்கூடக் கேட்பதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர் தமது கோட்டுப் பையில் தயாராக வைத்திருக்கும் தம் தலை மயிரை எடுத்துக் கொடுப்பார். வெளியூர் இரசிகர்கள் கூட தலைமயிர் அனுப்புமாறு அவருக்குக் கடிதம் எழுதுவதுண்டு. அவரும் சிரமத்தைப் பாராமல் அனுப்பி வைத்து விடுவார்.
இப்படிச் சிலருக்கு செய்யப் போய் எல்லோரும் கேட்கத் துவங்கிவிட்டார்கள். அவரால் மறுக்கவும் முடியவில்லை. எனவே மனம் கோணாது கேட்போருக்கெல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனைப் பார்த்த அவருடைய நண்பர் ஒருநாள், "இப்படியே கொடுத்துக் கொண்டிருந்தால் விரைவில் நீங்கள் மொட்டையாகி விடுவீர்கள்" என்றார்.
அதற்கு ஆர்தர்நிகஸ் அமைதியாகப் பதில் கூறினார், "மொட்டையாகப் போவது நானல்ல. என் நாய்" என்று. ஆக, வீட்டில் உதிர்ந்து போகிற அவருடைய நாய் முடியைத்தான் அவர் கேட்டவர்களுக்கெல்லாம் வாரி வழங்கி இருக்கிறார் என்று இந்த நிகழ்ச்சியைச் சொன்னபோது கூட்டத்தில் எழுந்த சிரிப்பொலி அடங்க சிறிது நேரமானது.
(நன்றி : ‘தன்னம்பிக்கை’ மாத இதழ்)
ஒட்டகத்தைக் கட்டிக்கோ!
ஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். தரையில் கழியை அடித்து ஒட்டகங்களைக் கயிற்றால் கட்டிக் கொண்டு வந்தனர். ஆனால், கடைசி ஒட்டகத்திற்கு மட்டும் கயிறு, கழி இரண்டும் இல்லை.
ஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.
வழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.
பிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, "சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்" என்றார்.
பெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்கள்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம்! அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது! சந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக்கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை. கட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது! அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.
"அதை அவிழ்த்து விட்டீர்களா.. இல்லையா?" என்று கேட்டார்.
பெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், "அதைத்தான் கட்டவே இல்லையே? கட்டினது மாதிரி பாவனைதானே பண்ணச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்" என்றார்கள்.
"அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்"
"ஏன்? நாங்கள்தான் கட்டவே இல்லையே?"
"சொன்னதைச் செய்யுங்கள்"
அவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.
(இது சுரேஷ் பத்மனாபன் எழுதிய On cloud 9 என்கிற ஆங்கில நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் கதை – நன்றி. கேஜிஜவர்லால் வலைப்பதிவில் கண்டது)
எறும்பு வளர்ந்து யானையானது
ஹாவர்ட் பாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில், பூங்கா ஒன்றில் ஒருநாள் எறும்புகள் திடீரென உடல் பருமனாகி முயல் அளவுக்கு வளர்ந்துவிடும். அதைப் பார்க்கும் மனிதர்கள் அத்தனை பேரும் உடனே எறும்புகளை தடியால் அடித்துக் கொல்லத் துவங்குவார்கள். ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஒரு மருத்துவர் ஒவ்வொரு மனிதனாகத் தேடிச் சென்று விசாரணை செய்வார். எறும்பு மிகப் பெரியதாக இருக்கிறது, அதனால்தான் என்று பலரும் சொல்வார்கள். யாரையாவது கடித்ததா அல்லது ஏதேனும் தீங்கு விளைவித்ததா என்று மருத்துவர் கேட்பார். அப்படியொன்றுமில்லை என்று அவர்கள் கூறினாலும், எறும்பு எறும்பாகத்தானே இருக்க வேண்டும் என்றும் ஆட்சேபனை செய்வார்கள். உடனே மருத்துவர் சொல்வார். "மனிதர்கள் மட்டும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும், ஆனால் காலம் காலமாக எறும்புகள் எறும்புகளாகவும், யானைகள் யானைகளாகவும் இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயமிருக்கிறது? வளர்ச்சியும், மாற்றமும் மனிதர்களுக்கு மட்டுமேயானதில்லையே?"
கற்பனையான கதை என்ற போதிலும் கதையின் அடிநாதமாக விளங்குவது, மனிதர்கள் எப்போதும் ஒரு கற்பனையான பயத்திலும், உலகம் தனக்கு மட்டுமே ஆனது என்ற அகந்தையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்!
(எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் "ஆதலினால்" என்ற புத்தகத்திலிருந்து – நன்றியுடன்)
“