கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

மரத்தை மறைத்தது…

பச்சை நிற சீருடை அணிந்த பத்து பேர் தப தபவென்று ஜீப்பிலிருந்து அந்த சாலையோரத்தில் இறங்கினார்கள். அங்கிருந்த நாய்கள் தங்கள் ஆட்சேபத்தைத் தெரிவிக்கும் விதமாக பலமாய்க் குரைத்தன. அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், வந்திருந்தவர்கள் சாலை ஓரத்தில் அழகாய் வளர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்த குல்மோஹர் மரத்தை நெருங்கினார்கள்.

வந்திருந்தவர்களில் ஒருவன் மரத்தில் ஏறி ஒரு கிளையை நெருங்கினான். பிறகு, தன் கையிலிருந்த கோடாரியால் அந்தக் கிளையை வெட்டத் துவங்கினான். கீழே இருந்தவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டு பீடி வலித்துக் கொண்டிருந்தனர். பாதிக் கிளை வேட்டி முடிந்ததும் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் கிளையை கயிற்றால் கட்டி இழுத்தனர். பெரிய சத்தத்துடன் அது கீழே சாய்ந்தது. அது கீழே விழும்போது ஏற்படுத்திய சப்தம் பலரை மரத்தின் பக்கம் இழுத்தது. அதன்பின் இன்னொரு கிளை, மற்றுமொரு கிளை என எல்லாக் கிளைகளும் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

மதியத்திற்குள், வந்தவர்கள் அவர்கள் வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டார்கள். "நான் நாற்பது வருஷங்களாக பலருக்கு நிழல் கொடுதுக் கொண்டிருந்தேன்” என்று மற்றவர்களுக்கு நினைவுபடுத்துவது போல ஒரு காலத்தில் பசுமையாய் வளர்ந்திருந்த மரத்தின் வேர் பாகம் மட்டும் மிச்சமிருக்க, முழு மரமும் வெட்டப்பட்டுவிட்டது.

நேற்றுவரை இந்த குல்மோஹர் பார்ப்பவர்களின் கண்ணுக்கு விருந்தாக இருந்தது. எலுமிச்சை நிறத்திலும், பச்சை நிறத்திலும் இலைகள் படர்ந்து ஒரு முழுவட்டமான கிரீடத்துடன் பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்திருந்தது. பருவ காலங்களில் அந்த மரம் முழுவதும் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என பல வண்ணப் பூக்கள் பூத்து பார்ப்பவர்கள் மனதைக் கொள்ளை அடிக்கும்.

வெய்யில் காலங்களில் சிறுவர் சிறுமிகள் அந்த மரத்தின் கிளைகளில் ஊஞ்சல் கட்டித் தொங்கவிட்டு பட்டாம் பூச்சிகளைப் போல குதூகலத்துடன் விளையாடுவார்கள். பூக்களும் இலைகளும் உதிர்ந்து விழுந்திருக்கும் மரத்தின் அடியில் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியோடு விளையாடுவதைத் தாய்மார்கள் பார்த்து ரசிப்பார்கள். பெரியவர்கள் ஊர்க் கதை பேசி மகிழ்வார்கள். மரங்களின் கிளைகளில் பலவிதமான பறவைகள் தங்களது கீச்கீச் மொழியால் பரவசத்தைக் கொடுக்கும். விரைந்து போகும் வாகனங்களின் இரைச்சலையும் தாண்டி அந்த மரம் ஒரு மன அமைதியைக் கொடுக்கும்.

ஆனால் இன்று எல்லாமே மாறிவிட்டது. ஜீப்பில் வந்தவர்கள் மரம் இருந்த இடத்தில் ஒரு விளம்பரப் பலகையை வைத்து விட்டுச் சென்று விட்டார்கள். நிச்சயமாக அந்தப் பலகை மரம் கொடுத்த ஆனந்தத்தைக் கொடுக்க முடியாது. பெரிய புயல் வந்து தாக்கினாலன்றி அந்தப் பலகை விழாது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அந்த விளம்பரத் தட்டியில் ஒரு வாசகம் எழுதப்பட்டது கொட்டை எழுத்தில்.

"ஓய்வெடுக்க நிழலில்லையா? சூரியனைப் பழிக்காதீர்கள்! வீட்டுக்கொரு மரம் நடுங்கள்!"

(நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா)

மரமெல்லாம் மரம் மட்டுமல்ல

நின்றபடி தென்னை.
நீள்வதும், குறைவதும், மறைவதுமாய்
அலைந்தபடியே அதன் நிழல்

வான்தொடும் பிரயத்தனத்துடன்
வளர்ந்த ஆலஞ்செடி,
மரமானதும் மண் தொடவே விழைகிறது
விழுதுகளால்.

கோவிலில் இருப்பது சாமி மரமாம்
சின்னத்தாயி தூக்குப் போட்டது பேய் மரமாம்
இரண்டுமே வேம்புதான்!

பள்ளி நடுவில்
நிழல் பரப்பும் பெரும் விருட்சம்,
ஆணியால் கீறியவர் பெயரெல்லாம்
அடிமரத்தில் சுமந்து நிற்கிறது.
நட்டவர் பெயரை
எங்கு சுமந்திருக்கும்?

”அம்புடன் வருகிறார்கள்; பறந்து செல்”
தன் கிளையில் கூடு கட்டிய பறவையைத் தப்புவித்தது மரம்.
இப்பொழுது கோடரியுடன் வருகிறார்கள்.
மரத்திடம் பறவை என்ன சொல்லும்?

(நன்றி : அருட்பெருங்கோ. அவரது வலைப்பூவிலிருந்து ஒரு கவிதை )

About The Author

1 Comment

  1. இரா.சேகர்

    மரமெல்லாம் மரம் மட்டுமல்ல….சிந்தனையைத் தூண்டும் தலைப்பு…நன்

Comments are closed.