கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சென்னை நகரில் நகைச்சுவையாளர் மன்றங்கள் பேட்டைக்குப் பேட்டை இருக்கின்றன. உலக நகைச்சுவையாளர் ம‎ன்றத்தின் திருவல்லிக்கேணி பிரிவு மிகச் சிறப்பாக நடந்து வரும் ஒன்று. மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் பள்ளி வளாகம் ஒன்றில் கூட்டம் நடத்துகிறார்கள். இந்த மன்றத்தின் மூலம் விவேக், சார்லி போன்றவர்கள் பட்டை தீட்டப்பட்டு நகைச்சுவை நடிகர்களாக பிரபலமாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நம்ப முடியாத அளவு கூட்டம்.

மழலை மாறாத குழந்தையிலிருந்து, பல்லுப் போன கிழவர் வரை, அன்றாடக் கூலியிலிருந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி வரை, உற்சாகத்துடன் ஜோக் சொல்லுகிறார்கள். இடையிடையே ஒருங்கிணைப்பாளர் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற்போல் தம் சரவெடியைக் கொளுத்தி விடுவது சிறப்பாக இருக்கிறது. இது தவிர ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு சிறப்புப் பேச்சாளர் கலந்துகொண்டு சிரிப்புரை ஆற்றுகிறார். ஏறத்தாழ, மூன்று மணி நேர அட்டகாசம்தான் போங்கள்!

எதற்குச் சொல்ல வருகிறோம் என்றால், அங்கிருந்து பொறுக்கி எடுத்த சில நகைச்சுவைகளை இங்கு அவிழ்த்து விடப் போகிறோம்!

******

அவர்:- "அரவிந்தசாமிக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் என்ன வித்தியாசம்?"

இவர்:- "அவர் மின்சாரக் கனவு; இவர் மின்சாரம் கனவு!"

******

ஆசிரியர்:- "கடற்படைக்கும் விமானப்படைக்கும் என்ன வித்தியாசம்?"

மாணவன்:- "சார், ராணுவ ரகசியங்களை எல்லாம் வெளியே சொல்லக் கூடாது!"

******

அரசு அலுவலகம் சென்ற ஒருவர் வியந்து சொன்னார்:- "என்ன சார் இது, லஞ்சம் வாங்குவதை இப்படி வெளிப்படையாகச் செய்கிறார்கள்?"

"எதை வைத்துச் சொல்கிறீர்கள்?"

"அங்கே பாருங்கள் போர்டில், லஞ்ச நேரம் 2.00 மணி முதல் 3.00 மணி வரை என்று போட்டிருக்கிறார்கள்."

"அடப்பாவி, அது லஞ்ச் நேரம் ஸார். புள்ளியை யாரோ அழித்திருக்கிறார்கள்!"

******

இது ஒரு முன்னாள் அதிகாரி சொன்னது. ‘ஒரு மாதிரியா’ இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.

ஆஸ்பத்திரியில் ஒரு அறையின் பக்கம் பெண்கள் போகவே பயப்பட்டார்கள். காரணம், அந்த அறை வாயிலில் போர்டில் போட்டிருந்தது, "Psycho-the-rapist."

If you don’t mind, இது போல இன்னொரு ஜோக். அந்த ஆடிட் ஆஃபீசர், காமத் என்ற உதவியாளருடன் ஆடிட் செய்ய கிளை அலுவலகம் போவதாக உத்தேசித்தார். முன்கூட்டியே கடிதம் போட்டு தகவலை தெரிவித்துவிட்டார். அவர் வந்த அன்றைக்கு ஆபீஸில் பெண் அலுவலர்கள் யாரும் வரவில்லை. விசாரித்ததில் தெரிந்தது, யாரோ சொல்லியிருக்கிறார்கள், “அதிகாரி காமத்துடன் வருகிறார்” என்று!

ஆடிட்டர்கள் சமீப காலமாக நகைச்சுவைக்கு உள்ளாகிறார்கள். சத்தியமாக நமக்குக் காரணம் தெரியவில்லை!

******

"அந்த மென்பொருள் நிறுவனத் தலைவர் facts and figures தருவதில் வல்லவர்"

"என்ன அது? அவரைப்பற்றி தப்புத் தப்பாகச் செய்தி வருகிறதே?"

"அவர் figuresஐ Balance Sheetல் கொடுப்பார்; factsஐ போலீஸ் விசாரணையில் கொடுப்பார்!"

******

எந்த இடத்தில் நகைச்சுவை கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

கோவிலில் சாமியைப் பார்க்க முடியாமல் அர்ச்சகர் குறுக்கும் நெடுக்கும் போய் மறைத்துக் கொண்டிருந்தார்.

பக்தர் கோபமாக, "ஐயரே! சாமியைப் பார்க்க முடியாதபடிக்கு குறுக்கே குறுக்கே போறீங்களே?" என்று கத்தினார்.

அதற்கு அர்ச்சகர் புன்னகை மாறாமல் பதில் சொன்னார்:- "அதனால்தான் எனக்குக் குருக்கள் என்று பேரு!"

******

"நீ வீக்கா இருக்கே, வீக்கா இருக்கே, வீக்கா இருக்கே, வீக்கா இருக்கே", என்று டாக்டர் பெண் பேஷண்டிடம் சொன்னார்.

"ஏன் டாக்டர், நாலு தடவை சொல்றீங்க?" என்று பேஷண்ட் வினவ,

டாக்டர் சொன்ன பதில்: "நீ மாசமா இருக்கே என்பதை வித்தியாசமாய்ச் சொன்னேன்!".

******

வீடு கட்ட கடன் வாங்கின நபர் அதிகாரியை இன்ஸ்பெக்ஷனுக்கு அழைத்துச் சென்றார். கட்டிடத்தைப் பார்த்த அதிகாரி திகைத்துப் போனார். நல்ல கட்டிடம். ஆனால் மேலே ‘சீலிங்’கே போடவில்லை.

அவர் கேட்டதற்கு, வாடிக்கையாளர் சொன்ன பதில் :- "ஏன் வீண் செலவு என்று விட்டு விட்டேன், அதுதான் urban propertyக்கெல்லாம் கவர்ன்மெண்ட்டே ceiling போடப் போகிறார்களாமே?".

******

கலைஞர் தென் மாவட்டத்தில் ஓர் ஊருக்குப் போனார். அங்கிருந்த கட்சி பிரமுகர் சொன்னார், "அடுத்த மாதம் மீண்டும் நீங்கள் இங்கு வரும்படி இருக்கும். ஒரு மாபெரும் கூட்டம் போட இருக்கிறோம்."

கலைஞர் அவருக்கே உரிய பாணியில் சொன்ன பதில், "வரும்படி இருந்தால் வராமல் போவேனா?"

******

‘கொஞ்சம் ஒரு மாதிரி ஜோக்’ சொன்ன பாவத்தைக் கழுவ ஒரு நல்ல விஷயம்.

காஞ்சிப் பெரியவரிடம் ஒரு பக்தர் முறையிட்டார். "வறுமை வாட்டுகிறது, சாப்பாட்டுக்கே வழியில்லை. வருமானம் போதவில்லை. பெரியவர்கள்தாம் அனுக்கிரகம் செய்ய வேண்டும்."

"கந்தர் அனுபூதியில் ‘உருவாய் அருவாய்’ என்று வரும் பாடலைத் தினம் சொல்லு” என்றார் பெரியவர். வியப்புடன் கேட்டார் பக்தர், "அதில் வருமானம் வருவதற்கு என்ன இருக்கிறது?"

பெரியவர் பாடலைச் சொன்னார்.

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"

"’வருவாய் அருள்வாய்’ என்று வருகிறது பார்த்தாயா?" என்றார் பெரியவர்!

ரிஷிகுமாரும், காயத்ரியும் பிழைத்துப் போகட்டும், இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்!”

About The Author

1 Comment

Comments are closed.