ரோபோக்களுடன் திருமணம்
"என்ன இது, இந்த மனுஷனைக் கட்டிக்கொண்டு? பொழுது விடிந்து பொழுது போனால் ரோதனை தாங்கலை" என்று அலுத்துக் கொள்ள வேண்டாம் இனி! ரோபோக்களை மணந்து நிம்மதியாக இருக்கலாம்!!
"2050ல் மஸாசூசெட்ஸ் மாகாணம் ரோபோக்களைத் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்கிவிடும் முதல் மாகாணமாகத் திகழ வாய்ப்பிருக்கிறது" என்று செயற்கை அறிவுத்திறன் பற்றிய ஆரய்ச்சியாளர் டேவிட் லெவி சொல்கிறார். திரு லெவி
அவர்கள் மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆராய்ச்சியை சமீபத்தில் முடித்திருக்கிறார். இவர் ரோபோக்களைக் திருமணம் செய்துகொள்வதால் உண்டாகும் வசதிகளைப் பற்றியும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட
உறவுகளைப் பற்றியும் ஆராய்ந்திருக்கிறார்.
கலைப் படைப்புகளுடனோ அல்லது இயந்திரப் படைப்புகளுடனோ காதல் புரிவது இன்று நேற்றல்ல, பண்டைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கிரேக்க புராணங்களில் சிற்பி பிக்மலியான் தான் வடித்த தந்தத் சிலை மீதே காதல் கொண்டதாகவும், அந்தச் சிலை அவன் காதலில் உருகி உயிர் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த எண்ணம் இன்றும் தொடர்கிறது. சில மாணவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன் எலிசா என்ற கணினி செயல்பாட்டுடன் (program) மோகம் கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
ரோபோக்கள் மனிதர்களைப் போல் தோற்றமளிப்பதோடு மனிதர்களுடன் இன்னும் அதிகத் தொடர்பு கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். முதலில் ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாகத்தான் கருதப்பட்டன. பல விதங்களில் மனித சக்தியை வீணடிக்காமல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டன. முதலில் கார் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட இவை பின்னர் அலுவலகங்களில் கடிதங்களைக் கொடுப்பது, பார்வையாளர்களுக்கு மியூசியத்தை சுற்றிக் காண்பிப்பது அல்லது வீட்டை சுத்தம் செய்வது போன்ற பல காரியங்களில் பயன்படுத்தப் பட்டன. இன்று ரோபோ நாய் எல்மோஸ் போன்ற பல ரோபோ விளையாட்டு சாதனங்கள் வந்து விட்டன.
தனது செயற்கைக் கூட்டாளிகளுடன் நெருங்கிய உறவு ("Intimate Relationships with Artificial Partners) எனும் ஆராய்ச்சிக் கட்டுரையில் இதுபற்றி எழுதும்போது, ரோபோக்கள் இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களைப் போலவே உருவம் பெற்று விடும். அவர்களைப் போலவே செயல்பட ஆரம்பிக்கும். பலர் ரோபோக்களைக் காதலித்துத் திருமணம் செய்து
கொள்வார்கள் என்று சொல்கிறார். இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும் இதுதான் உண்மை எனக் கூறுகிறார், லெவி!
ஏன் மனிதர்கள் காதலில் வீழ்கிறார்கள் என்பதற்கு உளவியலாளர்கள் காரணங்களைக் கூறுகிறார்கள். ஒரு காரணம் மற்றவர் தன்னைப் போலவே தோற்றத்திலும் அறிவிலும் இருப்பது. இது ரோபோக்களின் செயல்பாட்டில் சாத்தியமானதே. இன்னொரு காரணம் மற்றவர் தன்னைக் காதலிக்கிறார் என்பதை உணர்வது. இதனையும் ரோபோக்களின் செயல்பாட்டில் புகுத்த முடியும்.
ஐரோப்பிய ரோபோ ஆராய்ச்சி நிறுவனத்தைத் தோற்றுவித்த ஹென்ரிக் கிரிஸ்டென்சென் என்பவர் 2006ல் எழுதும்போது "இன்னும் ஐந்து ஆண்டுகளில் மனிதன் ரோபோவுடன் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடும்" என்று கூறியிருக்கிறார். திரு லெவியும் இது சாத்தியமே என்று சொல்கிறார். இப்போதே சில மின்னணு சாதனங்களைத் தயாரிப்பவர்கள் உண்மை போல் தோன்றும் செக்ஸ் பொம்மைகளை விற்பனை செய்கிறார்கள். இன்னும் கொஞ்சம் விஞ்ஞானத்தை சேர்த்தால் போதும் எனச் சொல்லப்படுகிறது.
கணினி மென்பொருள் ஆராய்ச்சிகள் வேகமாக வளரும் நிலையில் மனிதர்களுக்கும் கணினிகளுக்கும் உள்ள உறவுகள் மேலும் வலுப்படுகின்றன. இவை திருமணத்தில் முடிவதில் ஒன்றும் அதிசயமில்லை. சில காலங்களுக்கு முன்னால் வரை வேறு இனத்தவரைக் கல்யாணம் செய்து கொள்வதும், ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதும் அமெரிக்காவில் சட்டப்படி செல்லாதவையாக இருந்தன. இன்று இவை எல்லாமே மாறி வருகின்றன. ஒவ்வொருவருக்கும் தான் யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தேர்தெடுக்கும் உரிமை உண்டு என்பது இப்போது பெரிதும் உணரப்படுகிரது.
இது நடக்குமா என்பது கேள்வியல்ல! எப்போது நடக்கும் என்பதுதான் கேள்வி!! 2050ற்குள் நிச்சயம் நடந்துவிடும் என லெவி கருதுகிறார்.
மற்றொரு ஆராய்ச்சியாளர் எல்லாருக்குமே ரோபோக்களைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால் பலருக்கு விருப்பம் இருக்கும் என்கிறார்.
மனிதர்கள் ஒழுக்கவியல்படி இது சரியாக இருக்குமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. ஆனால் தினந்தோறும் சண்டை, மனம் ஒத்துப் போகாமல் விவாகரத்து போன்ற பிரச்சினைகள் குறையுமே என்று சொல்கிறார் கல்யாணத்திற்குப் பிறகு நொந்து நூடுல்ஸ் ஆன ஒரு அனுபவஸ்தர்.
“
கண்டது,கேட்டது,படித்தது,ரசித்தது,பயந்தது.