திரட்டி வந்த தனிப்பாடல்கள்
தமிழ் இலக்கியத்தில் பல புலவர்களால் பல சமயங்களில் பாடப்பட்ட தனிப்பாடல்கள் சிறப்பான இடத்தைப் பெற்றவை. நகைச்சுவையும், பொருட்சுவையும், கவிச்சுவையும் கலந்த இந்தத் தனிப்பாடல்கள் எந்தக் காலத்திலும் ரசிக்கத்தக்கவை. அவற்றில் சில செவி நுகர் கவிக்கனிகள் இதோ..
பழங்காலப் புலவர்கள் சிலர் பணம் கொடுத்தால் புரவலர்களைப் புகழ்ந்து பாடுவர். ஆனால் நிதி கொடுக்காவிட்டால் அவர்களை தூற்றவும் செய்வார்கள். அத்தகைய புலவர்களைப் பற்றி கம்பரின் ஒரு தனிப்பாடல்.
“போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடின்
தூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர்; வன் கணார்கள்
கூற்றினும் பாவலர் கொடியவர் ஆவாரே!”
அந்தகக் கவி விரராகவர் பாடிய பல தனிப்பாடல்களில் ஒன்று இங்கே. அவர் திருவேங்கடம் என்ற வள்ளலிடம் பரிசுகள் வேண்டிச் சென்றார். அப்போது அந்த வள்ளலின் மூத்த சகோதரர் கண்ணுக்கினியான் புலவருக்குப் பரிசு கொடுப்பதைத் தடுத்தார். வள்ளலான திருவேங்கடத்தானுடன் கண்னுக்கினியானும் முன் பிறந்தது, லட்சுமிக்கு முன் அவளின் மூத்த சகோதரி மூதேவி பிறந்ததுபோல இருக்கிறது என்று பாடுகிறார் விரராகவர்.
“தேன்பொழிந்த வாயான் திருவேங் கடத்துடனே
ஏன் பிறந்தான் கண்ணுகினியானே – வான் சிறந்த
சீதேவி யாருடனே செய்யத் திருப் பாற்கடலில்
மூதேவி ஏன் பிறந்தாள் முன்?..”
மணமகனுக்கு வரதட்சணை கொடுப்பது அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. எட்டிக்குள வியாபாரியான குட்டிச் செட்டி என்பவர் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காய் அளித்த சீர் வரிசையில் ஆயிரம் யானைகளும், எழுநூறு ஒட்டகங்களும், எண்பதைந்து எருதுகளும் அடக்கம். இது போதுமா.. என கவி காளமேகம் கேலி செய்து பாடியது இதோ..
“எட்டிக் குளத்தில் இருந்து சரக்கு விற்கும்
குட்டிசெட்டி தன் மகளைக் கொண்டுபோய் நொட்டுதற்கே
ஆயிரம் யானை; எழுநூறு கூன்பகடு
பாயும் பகடென்பத் தைந்து.”
தனிப்பாடல்களில் நிந்தாஸ்துதி – அதாவது இறைவனை இகழ்ச்சி செய்வதுபோல் புகழ்வது. இதில் தொண்டை நாட்டில் பிறந்த சொக்கநாதப் புலவர் மிகவும் பெயர் பெற்றவர். அவர் சிவபிரானைப் பார்த்து பரிதாபப்படுவதுபோல இயற்றிய பாடல் ஒன்று.
“அடிபட்டீர்; கல்லாலும் எறியப்பட்டீர்;
அத்தனைக்கும் ஆளாய் அந்தப்
படிபட்டும் போதாமல் உதை பட்டீர்;
இப்படியும் படுவார் உண்டோ?
முடிபட்ட சடையுடையீர்! கழுக்குன்றீர்!
முதற் கோணல் முட்டக் கோணல்
இடிபட்டும் பொறுதிருந்தீர்; சிவசிவா!
உமைத் தெய்வம் எனலாமே!”
இதில் சிவபெருமானைப் பாண்டியன் பிரம்பால் அடித்ததும், சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததும், கண்ணப்பர் செருப்பால் உதைத்ததும், இந்திரன் இடியால் அபிஷேகம் செய்ததும் அவைகளை அவர் பொறுமையாகப் பொறுத்துக் கொண்டதும் பாடப்படுகின்றன.
இப்படி பற்பல தனிப்பாடல்களை அவ்வப்போது சுவைப்போம்.
(நன்றி : உதவிய நூல்: “நையாண்டிப் பாடல்கள்“. ஆசிரியர் வ.ஜோதி அவர்கள்)
“