திகட்டாத எழுத்துக்கு தேவன் அவர்கள்
ஆனந்த விகடனில் 20 ஆண்டுகள் பணியாற்றிய தேவன் அவர்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ் இலக்கியத்திற்கு புது வடிவம் கொடுத்தவர் தேவன். சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள், செய்தி விமர்சனங்கள் என்று பல தளங்களிலும் தனக்கே உரிய மெல்லிய நகைச்சுவையுடன் எழுதி ரசிகர்களைக் கவர்ந்தவர் அவர். ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பற்¢யும் சாம்பு, கல்யாணி, மிஸ்டர் வேதாந்தம் என்று பல நினைவில் நிற்கும் பாத்திரங்களைப் படைத்திருக்கிறார் தேவன்.
அவருடைய ‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலில் இருந்து ஒரு பகுதியை இங்கு காண்போம். இதில் அவர் கும்பகோணம் கல்லூரியை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.
கரை புரண்டோடும் காவிரி ஆற்றின் கரையில் பல விருக்ஷங்களின் குளிர்ந்த நிழலிலே, சிவப்புக் கரை பூசிய பிரம்மாண்டமான சுவர்களுடன் நீண்டு படுத்திருக்கிறது கல்லூரிக் கட்டடம். கரையோரம் கிடக்கும் நீல நிறப் ‘பெயிண்ட்’ அடித்த பெஞ்சுகளில் சாய்ந்து சுழியிட்டு ஓடும் நதியைப் பார்த்தவாறு, சிந்தனைக் குதிரையைத் தட்டி விடலாம்; ஆற்றிலே மிதக்கும் வெள்ளை வர்ணம் பூசிய படகுகளில் ஏறிப் பிரவாகத்தை எதிர்க்கலாம்; காற்று வாங்கியபடி அலுக்காது சலிக்காது தாழ்வாரங்களில் உலாவி வரலாம்; அல்லது, பெரிய பெரிய ஹால்களுக்கு வெளியே சகாக்களுடன் நின்று அரட்டை அடிக்கலாம்; அல்லது டென்னிஸ் விளையாடலாம். இத்தனை சலுகைகளும், சம்பளம் கட்டிக்கொண்டு அங்கு வித்தியார்த்தியாகச் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் உண்டு.
விடுமுறை முடிந்து காலேஜ் திறந்த தினங்களில் அதிகமாகவே கலகலவென்றிருக்கும், காலேஜ் கட்டடம். நோட்டீஸ் போர்டைச் சுற்றி நிற்கும் பிள்ளைகளின் கூட்டம்! ‘புரொபஸர்ஸ் காமன்’ என்னும் மத்தியமான ஹாலிலிருந்து எழும் சிரிப்பொலி; ‘டக்டக்’கென்று பூட்ஸ் ஓசையுடன் இரண்டொரு புத்தகங்களை ஏந்தித் தாழ்வாரங்களில் விரைந்து நடக்கும் புரொபஸர்கள்; அவர்களை வளைய வரும் அபிமான மாணவர்கள்; ஐம்பது நிமிஷத்துக்கொரு முறை ஒலிக்கும் மணி ஓசை; அதைத் தொடர்ந்து வகுப்பு கலைந்து கூட்டமாக வெளியேறும் பையன்கள்; எல்லாவற்றையும் மேற்பார்வை செய்யும் பிரின்ஸிபால்; பிரின்ஸிபாலை விட மதிப்பாக நடந்து கொள்ளும் குமாஸ்தாக்கள்; குமாஸ்தாக்களைக் காட்டிலும் மேலாக அதிகாரம் செய்யும் சேவகர்கள்; தகப்பனார் செல்வாக்கினால் அட்டகாச நடைபோடும் பிள்ளைகள்; மூளைச் சிறப்பினால் புருவத்தை நெளித்து அலட்சியமாக நோக்கும் படிப்பாளிகள்; விளையாட்டு முகமாக அலையும் காளைகள்; பிழைப்பைத் தேடிக் கொள்ள காலேஜ் படிப்பைச் சாதனமாக எண்ணி நாட்களைத் தள்ளும் பிள்ளைகள்; அடங்கினவர்கள்; அடங்காதவர்கள்; காலேஜ் சம்பளத்தை ஒரு சுமையாகக் கருதி அதைக் கட்டும் தேதியைக் கண்டு நடுங்குபவர்கள்; அதையே ஒரு துச்சமாக எண்ணி மொத்தமாகக் கட்டிவிட்டு விஸ்ராந்தியாக உட்கார்ந்திருப்பவர்கள்; பெற்றோர் நிர்ப்பந்தத்துக்காக காலேஜை நாடினவர்கள்; நிலத்தை விற்றுப் பணத்தைப் படிப்பில் போட்டவர்கள் என்பதாகப் பலவகைப்பட்டதொரு சமூகம் அந்தக் காலேஜில் காலையில் கூடியது; மாலையில் பிரிந்தது.
ஒரே பாடத்துக்கு மூன்று நான்கு பேர் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பெயர் போனவர்கள். ஷேக்ஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கற்பிக்கும் பெருமை கொண்டவர் ஒருவர். எந்த இடத்தில் எந்த வார்த்தையை ஷேக்ஸ்பியர் உபயோகித்தார், அதன் பொருள் என்னவென்று எந்தெந்த வியாக்யானகர்த்தாக்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதாக ‘அத்யயன’மே செய்திருந்தார் அவர். அவருடைய புலமையை விடக் கோபத்திலே மாணவர்களுக்கு அச்சம் அதிகம்!
இன்னொருவர் மனசாட்சியை முன்னால் வைத்துக் கொண்டு பாடம் கற்பித்தவர்; அத்தனை மாணவர்களும் புரிந்து கொண்டால்தான் மேலே போவார்; ‘இவர் ஹைஸ்கூல் வாத்தியார் மாதிரி இருக்கிறாரே’ என்ற அபக்கியாதியையும் லட்சியம் செய்யாமல், தெய்வத்தின் முன் கடமையைச் செய்தார். இன்னொருவர் நோட்ஸ்களை வைத்துக் கொண்டே காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்; தாம் ஒரு முறை நோட்ஸ்களை வாசித்து, பிள்ளைகள் அதை எழுதிக் கொண்டுவிட்டால், அவர்களிடம் சம்பளம் பெற்ற ‘ரிணம்’ காலேஜுக்கும், சர்க்காரில் சம்பளம் வாங்கும் ‘ரிணம்’ தமக்கும் தீர்ந்து விடுகிறது என்பதாக அவருடைய எண்ணம்!
இவர்களையெல்லாம் விட கெட்டிக்கார வாத்தியார் ஒருவர். எந்தப் பரீட்சையில் எந்தக் கேள்வி வரும் என்று அவருக்குத் தெரியும். அவர் சொன்னால் இட்சிணி வேலை மாதிரி இருக்கும்! அவரிடம் பாடப் புத்தகங்களைக் கொடுத்துவிட வேண்டியது; இன்ன புத்தகங்களைப் படித்தால் பாஸ் செய்யலாம் என்று ‘கர்ரெக்டாக’ எழுதியே கொடுத்து விடுவார். அது தவறினது என்பது ஒருக்காலும் இல்லை.!
சில பேர்வழிகள் இருக்கிறார்கள். அவர்கள் வருஷவாரியாகக் கேள்வித்தாள்களை அடுக்கி வைத்துக் கொண்டு, ‘போன வருஷமும் மூன்றாம் வருஷமும் இந்தக் கேள்வி கேட்டுவிட்டார்கள்; இந்த வருஷம் திரும்பாது’ என்று ஹேஷ்யம் செய்வதுண்டு. இது சில சமயம் பலிக்கும். சில சமயம் பலிக்காமலும் போகும். இந்த ரகத்தைச் சேர்ந்தவர் அல்ல நம் புரொபஸர். யார் பரீட்சைப் பேப்பர் தயார் செய்கிறாரென்று அவருக்குத் தெரிந்து விட்டால் போதும். இந்த ஆசாமிக்கு இன்ன கேள்விதான் கேட்கத் தெரியும் என்று நிர்த்தாரணம் செய்யும் சக்தியைப் பெற்றிருந்தார். அது மட்டுமல்ல, அதற்குச் சரியான விடை எழுதினால் கூடப் போதாது. யார் அதைத் திருத்துவார், அவர் எந்த மாதிரியான விடை எழுதினால் மார்க் நிறையப் போடுவார் என்கிற வரை அளந்து வைத்திருந்தார். புரொபஸரின் அளவை ஒரு நாளும் தவறியது கிடையாது. ஆகவே, அவரைச் சுற்றி ஒரு கூட்டம் போவது சகஜம்தான்.
சம்ஸ்கிருத வகுப்புகளிலே கிராதார்ஜுனீயம் சாகுந்தலம் ஆகியவற்றின் சம்ஸ்கிருதமன ஸுநாதம் நிரம்பி நின்றது. அநாயாசமாகத் தமிழ்க் காப்பியங்களைப் பெரிய நாமம் போட்ட ஆசிரியர் எடுத்து விளக்கினார். ‘சட்டை’ போட்டுக் கொள்ளாத பண்டிதர்கள் இவர்கள் எனினும், வகுப்பிலே அசட்டையாக யாரும் இராத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
“