கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

வம்புநாதனின் "சேதி கேட்டோ, சேதி கேட்டோ"

புனிதம்

ராஜஸ்தான் சட்டசபைக்கு ஜெய்ப்பூரிலிருந்து தேர்தலுக்குப் போட்டியிடும் ராஜேந்திர பிரசாத் தன் தொகுதியின் வீதிகளில், சந்துகளில் கங்கை புனித நீரைத் தெளித்து தூய்மைப்படுத்தி செல்லுகிறாராம். இவர் உமாபாரதி புதிதாகத் துவங்கி இருக்கும் பாரதிய ஜனசக்தி கட்சிலிருந்து போட்டியிடுகிறார். மதுபானக் கடைகளால் வீதிகள் தூய்மை இழந்து விட்டன என்பது இவர் சொல்லும் காரணம்.

(அது சரி, சில அரசியல்வாதிகளின் மனம் தூய்மையாக எந்த கங்கை ஜலம் தெளிக்க வேண்டும்? – பாமரன்)

(ச)மோச(¡)டி

சோன்பூரின் புகழ்மிக்க கால்நடைச் சந்தையைப் பார்க்க வந்த டச்சு நாட்டின் தம்பதிகளிடம் நாலு சமோசாக்களுக்கு 250 டாலர் (ரூபாய் 10,000) விலை சொல்லி ஏமாற்ற இருந்தார்கள். அந்த சமோசா மிக அரிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்டதென்று கடைக்காரர் சொல்லியதை நம்பிப் பணம் கொடுக்க இருந்த டச்சு தம்பதிகளை சரியான சமயத்தில் காவல்துறையினர் காப்பாற்றினர்.

(அவர்களிடமிருந்து தம்பதிகள் எப்படித் தப்பினார்கள் என்பது தெரியாத சேதி!)

சொத்து யாருக்கு?

நீதியின் சக்கரங்கள் மிக மெதுவாகத் தான் சுழலும் – ஆனாலும் இவ்வளவு மெதுவாகவா?

175 ஆண்டுகளாக ஒரு வழக்கு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஒரு பழைய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜகிருஷ்ன சாஹிப் என்பவர் 1823ல் இறந்தபோது ஏழு பேர் அடங்கிய வாரிசுகளுக்கு சொத்துக்களை எழுதிச் சென்றார். ஆனால் அவர் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் 200 பேர் அதற்கு உரிமை கோரி கல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சொத்து எவ்வளவு தெரியுமா? சுமார் 1,00,000 ஏக்கர் நிலம், மூன்று பெரிய கிராமங்கள் உள்ளிட்டவை.

(கடைசியில் சொத்து வக்கீல்களுக்குத்தான் சேரும் என்கிறார் வாய்தா வக்கீல் வராகசாமி!)

கைம்பெண் வாங்கலியோ!

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ‘ஹண்டி கொராச்சா’ என்ற வகுப்பினரிடம் கணவனை இழந்த பெண்களை பன்றிகள் மேய்ப்பதற்காகவும், வீட்டு வேலைகள் செய்வதற்காகவும் அடிமைகளாக விற்கும் ‘ரூகா’ என்ற புராதனப் பழக்கம் இன்றும் இருக்கிறதாம். இதை எதிர்த்து பெண்ணுரிமைவாதிகளோ, வேறு சமூக ஆர்வலர்களோ சுண்டு விரலைக் கூட அசைத்ததில்லையாம்.

(வருவார்கள்.. டி.வி., பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்கள் புடைசூழ சமூகத் தொண்டர்கள் ஒரு நாள் வருவார்கள்)

குபேராய நமஹ!

உலகப் பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளிப்பது எனப் பொருளாதரா நிபுணர்கள் உலகெங்கிலும் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் வேளை இது. ஆனால் இதைப் பற்றி எதுவுமே தெரியாத குஜராத் மெஹ் சரணா என்ற கிராமத்தில் இந்த உலக நிதி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக கடவுளர்களின் அருளை வேண்டி 150 கோடி ரூபாய் அளவில் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக ஒரு யாகம் நடக்கத் துவங்கியிருக்கிறது. 108 யாக சாலைகள் அமைத்து 3000 பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத பிரம்மாண்டமான அளவில் நடக்கும் இந்த யாகம் துவங்கி சில நாட்களாகின்றன.

(இந்த யாகத்தில் அமெரிக்காவிலிருந்து ஒபாமாவும் கலந்து கொள்வார் என்று வதந்திகள் பரப்பும் வரதராஜன் ஒரு பிட் போடுவார் என எதிர்பார்க்கலாம்!)”

About The Author