கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

தமிழ் இலக்கியத்தில் பல்துறை மேதையாக விளங்கிய அமரர் பேராசிரியர் அ.சீனிவாசராகவன் அவர்களின் நூற்றாண்டு வெளியீட்டிலிருந்து – நன்றியுடன் (‘அ.சீ.ரா எழுத்துக்கள்’ – பதிப்பாசிரியர் மு.ஸ்ரீனிவாசன் – அலயன்ஸ்)

இலக்கியம் பொழுதுபோக்கா?

"மனிதனுடைய தனிப்பண்பை இலக்கியம் வளர்க்கிறது. காலையும் மாலையும் வாசற்படிகளாக அமைந்த இந்தக் காலச் சக்கரத்திலே நாம் தங்கியிருக்கிற சில நாட்களில் நம்மையெல்லாம் துன்பத்திலோ இன்பத்திலோ வெறியிலோ அமைதியிலோ ஆழ்த்தும் சக்திகள்தான் இலக்கியம் பேசுகின்ற பொருள். நம்முடைய ஆசைகள் (அவற்றிற்கு எல்லைகள்தான் உண்டா?), நம்மை தெய்வ நிலைக்கு உயர்த்தும் நல்லுணர்ச்சிகள், பிசாசுகளாக்கும் மிருக வேகம், மனித முயற்சியின் பெருமை, அதன் பேதைமை, அழகின் மந்திர சக்தி, இத்தனைக்கும் மேலே.. இதையெல்லாம் போர்த்தியுள்ள சாவு நிழல், இவற்றின் குரல்தான் இலக்கியம். இதைக் காதில் வாங்கினால் போதும்; நம்மிதயத்தோடு கலந்துவிடும். மனிதப் பண்பு தானாகவே வளரும். நம்முடைய வாழ்விலே இலட்சியம் உதயமாகும்.

மனிதத் தத்துவத்தின் மகோன்னத நிலைகளால் ஆன தெய்வ நாட்டிற்கும், அதன் மிகத் தாழ்ந்த படிகளால் சமைந்த நரகத்திற்கும் இலக்கியம் நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால் இரண்டிலிருந்து நம்முடைய தினசரி வாழ்க்கைக்கு திரும்பும்போது ஆத்ம உணர்ச்சி விரிவடைந்தவர்களாய் வருகிறோம்.

இலக்கியம் பொழுதுபோக்கா? பொழுதுபோக்கானால் போகின்ற பொழுதை அமர நிலையில் கழிக்கின்ற பொழுதுபோக்கு. பொழுது செல்லுவதைத் தடுக்க முடியாது. அதோடு செல்லும் நாம் ஒன்று செய்யலாம், அது போகின்ற பாதையை இலட்சிய உலகை நோக்கி சிறிது திருப்பலாம்"

********

நலமாக வாழ ஆசைதானே! (சில டிப்ஸ்)

(படித்தது மற்றும் இணையத்தில் சுட்டது)

* தொலை பேசியில் பேசும்போது இடது காதில் பொருத்தியே பேசவும்.

* ஒரு முறைக்கு மேல் காஃபி அருந்துவதைத் தவிர்க்கலாம்.

* மாத்திரைகளை குளிர்ந்த நீரில் விழுங்க வேண்டாம்.

* மாலை 5 மணிக்கு மேல் வயிறு புடைக்க சாப்பிடுதல் ஆரோக்கியமானதல்ல.

* பகல் வேளைகளில் அதிகமாகவும் மாலை நேரத்திற்குப் பின்பு குறைவாகவுமே குடிநீர் அருந்தவும்.

* துயில்வதற்கு உகந்த நேரம் 10 மணி முதல் 6 மாணி வரை. (பகல் வேளையிலா அல்லது இரவிலா என்று அலுவலகம் செல்கிற சிலர் கேட்பது காதில் விழுகிறது!!)

* செல்ஃபோன் பேட்டரியில் சார்ஜ் குறைந்து இறுதி நிலையில் இருக்கும்போது பேசுவது நல்லதல்ல ( 1000 மடங்கு ரேடியேஷன் இருக்குமாம்!!)

*******

இரா.முருகனின் ‘ராயர் காப்பி கிளப்’ என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து நாம் ரசித்த சில பகுதிகள்:

ஜபார் என்பவர் சொன்னதாக ஒரு நகைச்சுவை:

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர் ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா மட்டும் இருந்தார்.

உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன என்று கேட்டார்.

"என்னங்க, இது கூடப் புரியாம கேக்கறீங்களே? புருஷன் பெயரைப் பெண்டாட்டி சொல்லலாமா?" என்று அந்த அம்மா சீறினார். பிறகு ஆறு விரலைக் காட்டினார்.

"ஆறு"

"ஆமாம்" என்று விட்டு "அதோடு கழுத்துக்கு மேலே இருக்கறத்தைச் சேர்த்துக்குங்க" என்றார்.

"ஓஹோ! முகம். ஆறுமுகமா உங்க புருஷன் பேரு?"

"அப்படித்தாங்க.. அந்த நாயை எல்லாரும் கூப்பிடறது!"

*****

தக்காண ஏர்லைன்ஸ் போன்ற சிக்கன விமான சர்வீசுகள் பற்றிய முருகனின் கவிதை:

சீட்டுக் கிழித்தபின் சிக்கனமாய் இந்தியில்
கூட்டம் தலைஎண்ணிக் குர்நாம்சிங்- ஓட்டச்
சமொசாவும் கெட்டிலில் சாயுமாய் நாயர்
விமானம் பறக்குது பார்.

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    முருகனின் வெண்பா முழுமையாய்த் தந்தீர்
    அருமையாம் அன்னார் படைப்பு!
    -அரிமா இளங்கண்ணன்

Comments are closed.