ஆன்டி ரூனி (Andy Rooney) என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர், நகைச்சுவையாளர், அரசியல் விமர்சகர். பல பெரிய விஷயங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வித்தகர். அவர் எழுத்துக்களிலிருந்து சில இங்கே…
நான் தெரிந்து கொண்டுவிட்டேன்,
அனுபவம் வாய்ந்த ஒரு முதியவரின் காலடிகளே ஒரு சிறந்த வகுப்பறை என்று!
எவரோ ஒருவரேனும் "உன்னால் இன்று எனக்கு நல்ல தினமாயிற்று" என்று சொல்லும்போது அதுவே என்னுடைய சிறந்த நாளென்று!
ஒரு பிஞ்சுக் குழந்தை அமைதியாக களங்கமற்று மடியில் துயிலும்போது அதுவே உலகிலேயே மிகவும் அமைதியான உணர்வென்று!
சரியாக நடந்து கொள்வதைவிட அன்பாக நடந்து கொள்வது முக்கியமென்று!
ஒரு குழந்தை பிரியமுடன் ஒரு பரிசைத் தரும்போது – அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும்
– அதை வேண்டாமென்று சொல்லாமல் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று!
ஒருவருக்கு எந்தவிதத்திலும் உதவ சக்தி இல்லாத போதிலும் அவருக்காக மனதார பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று!
பல சமயங்களில் ஒருவருக்குத் தேவையாக இருப்பது அன்புடன் பற்றிக் கொள்ள ஒரு கரமும், புரிந்து கொள்ள ஒரு மனமும் என்று!
நாம் கேட்ட ஒவ்வொன்றையும் இறைவன் நமக்கு கொடுத்துவிடவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று!
வெறும் பணத்தினால் மட்டும் மதிப்பை வாங்கிவிட முடியாதென்று!
தினசரி நடக்கும் பல சின்னச் சின்ன விஷயங்களாலேயே வாழ்க்கையை அனுபவிக்க முடியுமென்று!
சிலர் வெளித் தோற்றத்திற்குள் கடினமாக இருந்தாலும் மனதிற்குள் அன்புக்காகவும் பாராட்டுக்காகவும் ஏங்குகிறார்களென்று!
காலம் அல்ல, அன்பே காயங்களை ஆற்றுகிறதென்று!
நாம் வளருவதற்கு சுலபமான வழி நம்மைவிட புத்திசாலிகளை நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டுமென்று!
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் புன்னகையுடன் வாழ்த்தத் தகுதியானவர்களென்று!
வாழ்க்கை கடினமானது, ஆனால் நாம் அதைவிடக் கடுமையாக இருந்து சமாளிக்க வேண்டுமென்று!
சந்தர்ப்பங்கள் தொலைந்து போவதில்லை.. வேறு யாரோ எடுத்துக் கொண்டு விடுகிறார்களென்று!
மனதில் கசப்பான உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ளும்போது மகிழ்ச்சி எங்கோ மறைந்து கொள்கிறதென்று!
இனிமையான, மிருதுவான வார்த்தைகளையே உபயோகிக்க வேண்டும், கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கும்போது அது நமக்கே திரும்பி வரலாமென்று!
நமது புன்னகையே செலவில்லாமல் நம்மை அழகாகக் காட்டுகிறதென்று!
ஒரு குழந்தை நம் விரலை தன்னுடைய பிஞ்சுக் கரத்தால் பிடித்துக் கொள்ளும்போது, நாம் அதற்கு அடிமையாகிப் போகிறோமென்று!
ஒவ்வொருவரும் மலையின் உச்சியில் வாழ்வதற்கு விரும்பினாலும், அந்த மலை உச்சிக்கு ஏறுவதில்தான் எல்லா மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இருக்கிறதென்று!
பணிகளை முடிப்பதற்கு அவகாசம் கொஞ்சமாக இருக்கும்போதுதான் அதிகம் செய்து முடிக்க முடிகிறதென்று!
(நன்றி: Dignity dialogue ஆங்கில மாத இதழ்)
*******
தராதே!
அன்பே!
இனி எனக்கு
தொலைபேசியில்
முத்தம் தராதே-அது
முத்தத்தை எடுத்துக்கொண்டு
சத்தத்தை மட்டும்
எனக்குத்
தருகிறது!
(கவிஞர் நா.முத்துக்குமார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியது)
எக்ஸ்லண்ட்
அருமையான(அனுபவ)பொன்மொழிகள்!
நானும் தெரிந்து கொண்டுவிட்டேன்..!