இரண்டு போர்க் கதைகள்
ஒரு முறை இத்தாலி இன்னொரு நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. தொலைதூரக் கண்ணாடி மூலம் ஒரு குன்றின் உச்சியிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு இளைஞன். சில ராணுவ வீரர்கள் மடிந்துவிட்டிருந்தனர். பலர் இறக்கும் தருவாயில் துடித்துக் கொண்டிருந்தார்கள். மடிந்தவர்களைக் கழுகுகளும் நரிகளும் கொத்திக் கொண்டிருந்தன. காயப்பட்டவர்களில் சிலரை குப்பையைப் போல அள்ளிச் சென்று கொண்டிருந்தார்கள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞனின் மனம் துடித்தது. அவன் அந்தப் போர்க்களத்தைப் பார்ப்பதற்காக செல்லவில்லை. அவன் பாரிஸ் நகரத்திற்கு நெப்போலியனைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தான். இத்தாலிக்கு உதவி செய்வதற்காக நெப்போலியன் போர்க்களத்துக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காகவே அவன் அங்கு வந்திருந்தான்.
அருகிலிருந்த அந்தக் குன்றிலிருந்து அந்தக் கோரக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு அந்தக் காயம் பட்ட ராணுவ வீரர்களுக்கு எப்படியாவது, எந்த வகையிலாவது உதவ வேண்டுமென்று தோன்றியது. ஆயிரத்திற்கும் மேலான வீரர்கள் காயமுற்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தது. அவர்கள் அருகில் இருந்த தேவாலயத்தில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரமும் தெரிந்தது. அந்த தேவாலயத்திற்கு அவர்களைக் கவனிப்பதற்காக விரைந்தான்.
சில நாட்களில் அந்தப் போர் முடிவுக்கு வந்தாலும் அவன் கண்ட சோகக் காட்சிகள் அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தன. போரில் காயப்படும் வீரர்களுக்கு பணிபுரிய வேண்டுமென்ற அவன் எண்ணம் தீவிரமடைந்து ஒரு நிரந்தரமான அமைப்பைத் துவங்கினான். அது மட்டுமல்லாமல் பல நாடுகளுடன் விடாமல் தொடர்பு கொண்டு, முழு முயற்சியுடன் அதை ஒரு உலக அமைப்பாகவே மாற்றி விட்டான்.
எந்த நாட்டில் போர் நடந்தாலும் சரி.. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சக தொண்டர்களுடன் சென்று காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவியும் பராமரிப்பும் அளித்தார்கள். தங்களுடைய நாடு, மாற்றார் நாடு என்று எந்தப் பாகுபாடும் இன்றி மனித நேயம் ஒன்றையே மனதில் கொண்டு அவர்கள் பணி புரிந்தார்கள்.
அந்த இளைஞன் தான் Jeane Henry Dunant. ஜெனீவாவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவன் துவங்கிய உலகப் புகழ் பெற்ற தொண்டு அமைப்புதான் செஞ்சிலுவைச் சங்கம். ஒவ்வொரு ஆண்டும் அவன் பிறந்த நாள் மே 8 ந்தேதி செஞ்சிலுவை நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த இளைஞனின்
மனதில் விழுந்த ஒரு சின்ன விதைதான் இன்று ஒரு உலகளாவிய ஒரு விருட்சமாக பரவி வளர்ந்திருக்கிறது. மனதில் விழும் சின்ன விதைகள் மக்கிப் போவதோ அல்லது விருட்சமாக வளர்வதோ நம்மிடம்தான் இருக்கிறது.
முதலாவது உலகப் போரில் ஒரு சம்பவம்
தன்னுடைய உயிர் நண்பன் போரில் தொலைவில் துடிதுடித்து விழுவதை ஒரு ராணுவ வீரன் பார்த்தான். விடாமல் குண்டு மழைகளும் துப்பாக்கி சப்தங்களும் அந்தப் போர்முனையில்! அவன் அருகிலேயே சில குண்டுகள் விழுந்தன. அந்த ராணுவ வீரன் தன் கேப்டனிடம் தொலைவில் விழுந்த தன் நண்பனைச் சென்று பார்ப்பதற்கு அனுமதி கேட்டான். அவர் சொன்னார். ”நீ போகலாம். ஆனால் எந்தப் பயனும் இராது. நீ போவதற்குள் அவன் இறந்தே போயிருப்பான். நீ போவதற்குள் உன் உயிரையும் நீ இழக்க நேரிடும்” என்றார்.
அதிருஷ்ட வசமாக அவன் பல தடைகளையும் தாண்டி தன் நண்பன் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் தன் பகுதிக்கு சுமந்து வந்தான்.
வழியிலேயே அவன் உயிர் பிரிந்தது.
அந்தக் கேப்டன் சொன்னார். ”நான்தான் சொன்னேனே! நீ அவனைப் பார்க்க செல்வதில் எந்தப் பயனும் இருக்காதென்று! அவனும் இறந்து விட்டான், உனக்கும் எவ்வளவு காயம்!” என்றார்.
ராணுவ வீரன் சொன்னான். “இல்லை கேப்டன், நான் சென்றதற்கு முக்கியத்துவம் இருந்தது! உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த கடைசி நேரத்தில் நான் சென்றதும், என் நண்பன் முனகினான் ”நீ கண்டிப்பாக என்னைப் பார்க்க வருவாயென்று எனக்குத் தெரியும்” என்று!
வாழ்க்கையில் பலமுறை நாம் செய்யும் செயல்கள் பயனுள்ளதுதானா என்பது நாம் அதை அணுகுகின்ற, பார்க்கிற முறையில்தான் இருக்கிறது. இதயத்தின் அடி நாத நேயக் குரலுக்கு உடன் நாம் செவி சாய்த்தால் வாழ்க்கையில் பின்னால் வருந்தும்படி நேராது!
“
ஒரு சல்யூட்.
செஞ்சிலுவைச் சங்கம் என்றொரு அமைப்பிற்கான அவசியமே இல்லாமல் போகும் உலகத்தைப் படைப்பதே என் மனதில் எப்போதோ விழுந்த விதை.
உண்மையிலேயே மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
நல்ல தகவல்கள்.. நல்ல செய்திகள்
அருமையான தகவல் நன்றீ
சிரந்த கட்டுரை. இந்த மாதிரி கட்டுரைகல் மேலும் மேலும் வரவேன்.டும்