அகமும் புறமும்
அகம்
Print of Life என்ற தலைப்பில் உள்நோக்கிப் பயணிக்கும் உள நூலில் (பி.எஸ்.வாசு எழுதியது) நம்மைக் கவர்ந்த பகுதி:
பன்னாலால் : ஞானம் என்றால் என்ன?
ஹீராலால் : இந்த பெஞ்சைப் பார். இதைத் தயாரித்தது எப்படி?
ப : இதை மரக்கட்டையால் செய்திருக்கிறார்கள்.
ஹீ : மரக்கட்டை எங்கிருந்து வந்தது?
ப : மரத்திலிருந்து.
ஹீ : அந்த மரம்?
ப : விதையிலிருந்து.
ஹீ : விதை எப்படி மரமாயிற்று?
ப : மண், தண்ணீர், சூரிய வெளிச்சம் இவற்றின் துணை கொண்டு. எனவே, இவையும் பெஞ்ச் தயாரிப்பில் பங்கு பெறுகின்றன.
ஹீ : இவை தவிர?
ப : தச்சர்.
ஹீ : தச்சர் எங்கிருந்து வந்தார்?
ப : அவரது பெற்றோர் பிறப்பு கொடுத்தார்கள்.
ஹீ : அவர்களின் பெற்றோர்கள்?
ப : இப்படி ஆதி மனித குலம் வரை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஹீ : போகட்டும். அவருக்கு எப்படித் தச்சுத் தொழிலில் திறமை வந்தது?
ப : அவரது ஆசான் கற்றுக் கொடுத்தார். இப்படி அவருக்கு அவரது ஆசான்..என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ஹீ :ஆக, அவருக்குத் தச்சுத் தொழில் தெரிந்ததற்கு எண்ணற்ற பேர் காரணம். அது போகட்டும். தச்சர் ஏன் பெஞ்சைச் செய்ய வேண்டும்?
ப : வாடிக்கையாளருக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்க. இது பார்க்கில் உள்ள பெஞ்ச். எனவே நகராட்சிதான் வாடிக்கையாளர்கள். உங்கள் தத்துவப்படி, இந்த பெஞ்ச் தயாரிப்புக்கு, வரி செலுத்தும் ஏராளம் பேரும் காரணம்.
ஹீ : சரியே. நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு சிறு பொருள் உருவாவதில் கூட பிரபஞ்சம் முழுமைக்கும் பங்கு இருக்கிறது. அது மட்டுமல்ல, நீ நீயாக உருவாவதற்கு காரணம் கூட, எண்ணில் அடங்காத ஆண்களும் பெண்களும் ஆதி நாள் முதல் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்ததுதான்.
ப : மறுபடியும் ஆதி மனிதர்கள்?
ஹீ : அது சரியே. உன்னுடைய அறிவு எப்படி வந்தது?
ப : ஆசிரியர்கள், புத்தகங்களில் இருந்து.
ஹீ : அவர்களது ஆசிரியர்கள், அவர்கள் படித்த புத்தகங்கள், ஆசிரியர்கள் என்று பின் நோக்கிச் செல்!
ப : தலை சுற்றுகிறது! ஆக, நான் பல மனங்களின் கூட்டமைப்பு என்கிறீர்கள்!
ஹீ : அதே! நீ ஓர் அலை. கடல் இல்லாமல் அலை இல்லை; அலைகள் இல்லாமல் கடலும் இல்லை! முழுமை இல்லாமல் பகுதி இல்லை; பகுதி இல்லாமல் முழுமை இல்லை. நீயும் இந்த பிரபஞ்சமும் சேர்ந்தே இயங்குகிறீர்கள்.
ப : புரிந்து கொண்டேன்.
புற உறவுகள் மேம்பட..
புறம்
குடும்பம், நட்பு வட்டாரங்கள், அலுவலகம், வெளியிடங்கள்.. எங்கென்றாலும் அங்கே மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்க, சிறிய விரிசல்கள் மேலும் பெரிதாமல் இருக்க :
• தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)
• அர்த்தமில்லாமலும், பின் விளைவுகளை அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்த்து விடுங்கள். (Loose talks)
• எந்த விஷயத்தையும், பிரச்சினையையும் நாசூக்காக (Diplomatic) கையாளுங்கள்.
விட்டுக் கொடுங்கள். (compromise)
• சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் (tolerance).
• எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ.. சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
• உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (flexibility).
• மற்றவர்களுக்குரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (courtesy).
• புன்முறுவல் செய்யவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
• பிரச்சினைகள் ஏற்படும்போது அடுத்தவர்தான் இறங்கி வர வேண்டுமென்று என்று காத்திராமல் நீங்களே பேச்சைத் துவங்க முன்வாருங்கள்
(நன்றி : ஜென் வாழ்வியல் கலை)
“
(ஜ)னங்களுக்குத்தேவையானவற்றை (ப)டிக்கவும் (ர)சிக்கவும் தருகிறீர்கள்.
வாழ்வில் கடைபிடிக்க நான் பாடுபடுவேன்