காத்திருத்தல்!
காத்திருத்தல் என்றால் வாளாவிருத்தல் அல்ல. சோம்பேறி மடத்தில் சுகமாய் கொட்டாவி விடுதல் அல்ல. தயாராய் இரு. தன் முனைப்புடன் இரு.. எதிர்பார்த்திரு. தனித்திரு. விழித்திரு. பெறும் ஆவேசத்துடன் பசித்திரு. காலியாய் இரு. திரை மேலேற்றிய காலியான நாடக மேடையாய் இரு. மவுனக் குமிழி உடைபட்டுத் தெறிக்கிற அந்தச் சிறு வினாடியில் வானவில் மிளிரும் வண்ணக் கொந்தளிப்பு. நிசப்த குதூகலம். வண்ணச் சிதறல் அல்ல. இப்படி அழகாய் வளைவாய் யார் கோடு போட முடியும் அந்த வளாகத்தில்? மனிதனால் கூடுமோ? இயற்கை என்றாலே பிரமிப்புதான், பிரம்மாண்டம்தான். ஆனந்தந்தான். இழந்துவிடாதே, நண்பா! காத்திரு. விழித்திரு. குமிழுக்குள் வானம், வானத்தில் வானவில், தரிசனக் காட்சி, இயற்கையால் கூடும்
காத்திருத்தல், உனக்கான தருணங்களை அடையாளம் கண்டு கொண்டாக வேண்டும். நீ அதற்கு வெள்ளைத்தாள் போல காத்திருக்க வேண்டும். காகித மனசு வெண்பலகை. மனதை வெள்ளைத்தாள் போல வைத்திருக்க, வகுப்பறைப் பலகை போல் வைத்திருக்க, இயற்கையின் விடைகளைச் சுமக்க, மனதை வைத்திருக்கக் கூடுமா நம்மால்?
(எஸ் ஷங்கர நாராயணன் – யானைகளின் ஊர்வலம்)
ஃபிடல் காஸ்ட் ரோவா.. பிரகலாதனா ?
க்யூபாவின் ஃபிடல் காஸ்ட் ரோவின் உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட முயற்சிகளைப்போல் உலக சரித்திரத்தில் வேறொரு தலைவரைக் கொல்ல இத்தனை முயற்சிகள் நடந்திருக்க முடியாது. ஆகஸ்ட் 4, 2006 ம் இந்து நாளிதழில் வெளிவந்த ஒரு கட்டுரை, கார்டியன் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரையின் இந்தியப் பதிப்பு. அதில் காஸ்ட்ரோவைக் கொல்ல 638 முறைகள் சி. ஐ. ஏ முயன்றதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எடுத்த டாகுமெண்டரி படம்தான் இந்தச் செய்திக்கு ஆதாரம்.
("உஷார், உளவாளி" – சுதாங்கன்)
எனக்கு மட்டும் ஏன்?
புகழ் பெற்ற விம்பிள்டன் விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷே 1983ம் ஆண்டில் ஒரு இருதய அறுவை சிகிச்சையின் போது எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட இரத்தம் செலுத்தப்பட்டுவிட்டதால் அந்த நோய்க்கு ஆளானார். உலக முழுவதிலுமிருந்து பிரார்த்தனை நிரம்பிய கடிதங்களும் ஆறுதல் செய்திகளும் வந்தன. அதில் ஒருவர் ஆதங்கமாகச் சொல்லியிருந்தார். "ஏன் உங்களை மட்டும் கடவுள் இந்த மோசமான வியாதிக்கு தேர்ந்தெடுத்தார்?"
ஆர்தர் ஆஷே பதில் எழுதினார்."உலகில் ஐந்து கோடிசிறுவர்கள் டென்னிஸ் விளையாட அரம்பிக்கிறார்கள். 50 லட்சம் பேர் டென்னிஸ் கற்றுக் கொள்கிறார்கள். 5 லட்சம் பேர் முறைமையாக தேர்ச்சி பெறுகிறார்கள். 50000 பேர் விளையாடும் புகழ் வட்டதுக்குள் நுழைகிறார்கள். 5000 பேர் க்ராண்ட் ஸ்லாமை எட்டுகிறார்கள். 50 பேரே விம்பள்டன் வரை வருகிறார்கள் 4 பேர் அரை இறுதி வரையிலும் இரண்டு பேரே இறுதி வரையிலும் வருகிறார்கள். நான் அந்த விம்பிள்டன் கோப்பையை கையில் வைத்துக் கொண்டிருந்த போது "ஏன் எனக்கு மட்டும்?" என்று இறைவனைக் கேட்கவில்லை, இப்போது வலியால் தவிக்கும் போது மட்டும் "எனக்கு மட்டும் ஏன்.. என்று கேட்கலாமா?" என்றார்.
சேகரித்த செய்திகள்
வந்தே மாதரம் 1896ல் கல்கத்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக இசைக்கப்பட்டது. பாடியது கவிஞர் தாகூர்.
தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் அரசியல் வெளியீடு சமூகச் சீர்திருத்த செம்மலும் இந்து பத்திரிகை ஆசிரியருமான திரு ஜி. சுப்ரமணிய ஐயரால் 1883 ல் வெளியிடப்பட்ட சுய அரசாட்சி – வினா விடை என்ற நூல்.
1812ல் ஸ்பெயின் நாடு தமது அரசியல் சட்டத்தை உருவாக்கியதும் அதனை ராஜா ராம் மோஹன் ராயை கவுரவிக்கும் நோக்கில் அவர் பெயருக்குச் சமர்ப்பித்தனர்.
(இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் – பெ. சு மணி)
எது புரட்சி?
"என் திருமணம் காதல் திருமணம்தான். எனக்கு சொந்தக்காரப் பொண்ணுதான். வைதீகத் திருமணம்தான். ஆனால் அதற்கு ஒரு காரணம் உண்டு. என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடந்தது சுய மரியாதைக் கல்யாணம். அதனாலேதான் நான் வைதீகமா, அய்யரை வச்சு. பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு, பூணூல் போட்டு, ஓமம் வளர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்க குடும்பத்தில் அதுதான் புரட்சி" ஜெயகாந்தன்
வித்தியாசம்
இப்போதெல்லாம் அனைவரின் உரையாடலிலும் அடிபடுவது recession (பொருளாதார மந்த நிலை) மற்றும் Depression. அப்படி ஒரு உரையாடலில் ஒட்டுக் கேட்டது.
கேள்வி: Recession னுக்கும் Depression னுக்கும் என்ன வித்தியாசம்?
நொந்துபோனவரின் பதில்: மற்றவருக்கு வேலை போனால் அது recession. நமக்கே போனால் அது Depression.
புதுக் கவிதை
புதுக் கவிதை பற்றி சற்று பேசலாம். புதுக்கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவி இருக்கிறது. "அடிக்கடி கட்சி மாறும் அரசியல் வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன" என்ற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் அப்த்பித்திருக்கிறார்கள்.
என்னையா விளையாடுகிறீர்கள்?
(சுஜாதா 1972)
வேண்டுவன
"ராமருக்கு வேண்டும் கோயில்
பாபருக்கு வேண்டும் மசூதி
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான கழிப்பறைகள்"
– மனுஷ்ய புத்திரன்
“