உள்ளாட்சி அமைப்புக்கள் அன்றே உள்ளன!
தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளாட்சி அமைப்புக்கள் செயல்பட்டு வந்துள்ளன என்பதற்கு பல்வேறு இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் ஆதாரங்களாக உள்ளன.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தின் மூலம் பாடலிபுத்திர நகர நிர்வாகத்திற்காக 5 குழுக்கள் நியமிக்கபட்டிருந்ததையும் இக்குழுக்கள் வரிவிதிப்பு, சமுதாய மேம்பாடு, மற்றும் நிதி நிர்வாகத்தை நடத்திய பாங்கினையும் அறியலாம்.
நகரத்தினுடைய வருவாய் 22 தலைப்புக்களிலும் செலவினம் 38 தலைப்புக்களிலும் பகுக்கப்பட்டு வரவு செலவினங்கள் இக்குழுக்களின் மூலம் அரசர் முன் சமர்பிக்கப்பட்டன..உத்திரமேரூர் கல்வெட்டில் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்தி வந்ததைக் காணமுடிகிறது. கி.பி. 10 மற்றும் 11-வது நூற்றாண்டு காலத்தில் சோழர் ஆட்சியின் கீழ் இச்சமுதாய குழுக்களின் நிர்வாகத்திறன் உச்ச நிலையிலிருந்தது.
தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் வரி விதிப்பு, சமுதாய மேம்பாடு, நீதி, நிர்வாகம் ஆகியவற்றில் இக்குழுக்கள் திறம்பட செயலாற்றி வந்ததைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிய முடிகிறது.
ஊராட்சி மன்றங்களின் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய குட ஓலை என்ற ரகசிய வாக்கெடுப்பு முறை அன்றே பயன்படுத்தப்பட்டதாம்.
செல்போனா ”கொல்”போனா?
செல்போனிலிருந்து வெளிப்படும் நுண்கதிர்கள்(micro wave radiation) நமது ஆரோக்கியத்தை பாதிக்குமா இல்லையா என்ற கேள்விக்கு இரு வேறுவிதமான பதில்கள் வருகின்றன.
கம்பி இல்லா நுண் கருவிகள்(wireless insruments) தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்துவோர் உடல்நலம் பாதிக்கக் கூடும் என்று 25 சதவிகிதத்திற்கும் குறைவான ஆராய்ச்சி முடிவுகளே சொல்கின்றன..ஆனால் மற்ற பொது ஆராய்ச்சி நிறுவனங்களின் ஆராய்ச்சிகளில் 75 சதவிகிதத்திற்கு மேற்பட்டவை உடல் நலம் பாதிக்குமென்றே அறிவிக்கின்றன.
செல்போனை 450 கோடி பேர் பயன்படுத்துவதால் இதுவே மனிதர்களின் உடல்நலத்தைப் பற்றிச் செய்யபடும் மிகப் பெரிய பரிசோதனை என்று சொல்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர். ( The New Indian express 24-02-2010).
நமது நாட்டில் சிட்டுக் குருவிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் தியோடர் பாஸ்கரன் பேசுகையில், ”ஐம்பது சிட்டுக்குருவி முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமிடம் வைத்து பரிசோதித்ததில் அவற்றின் கருக்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார். (தினமலர்-20-02-2010)
செல்போனை பயன்படுத்துபவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.!
(நன்றி : குடிமக்கள் முரசு – மார்ச் இதழ்)
கவிக்குயில் சரோஜினி நாயுடு
கவிக்குயில் என்று அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு அவர்கள் தன்னுடைய கவித்திறனால் இந்தியா முழுவதும் ஏன் விடுதலை வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கினார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்தியாவின் துன்ப நிலையையும் காங்கிரசின் நோக்கங்களையும் எடுத்துரைத்து இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடினார்.
தண்டியில் காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகம் மேற்கொண்டபோது ஒரு பிடி உப்பை அள்ளி காந்திஜி அவருக்கு வழங்கியது முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி.!
இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக ஜின்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்.
இந்தியாவின் முதல் பெண் கவர்னரான இவர், 1949, மார்ச் 2-ம் தேதி இவர் இவ்வுலகிலிருந்து மறைந்தார்.
இப்படி ஒரு கருத்து!
டக்லஸ் ஆடம்ஸ், பிரபஞ்ச முடிவில் ஓர் உணவகம் என்ற ஒரு அறிவியல் புதினத்தில்-(Douglas Adams in ‘The restaurant at the end of the universe’) தரும் ஒரு கருத்து :
யாராவது இந்த பிரபஞ்சத்தின் காரணம் என்ன, எதற்காக இங்கே இருக்கிறது ஆகிய கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்துவிட்டால், அந்த கணம் இப்பிரபஞ்சம் மறைந்து, அதனிடத்தில் இன்னும் குழப்பமான, விளக்க முடியாத வேறொன்று வந்துவிடும்.
இன்னொரு கருத்து: இது ஏற்கெனவே நடந்துவிட்டது.
தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்..
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை!
டவுசர்கள் இல்லை என்று குழந்தைகள் அழுகும்..
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடி விடுவார்கள்!
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாய் கிடைக்கிறது!
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது!
கால் நீட்டி தலைசாய்க்க
தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது!
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்?
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது!
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது!
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை!
நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்.
மு. சுயம்புலிங்கம்.(அங்குமிங்கும் வலைப்பதிவில்)
–
திரு.சுயம்புலிங்கம் அவர்களின் கவிதை அருமை!