கைகளைக் கட்டிக் கொண்டு
கதவோரம் ஒட்டிக் கொண்டு
கண்ணீரை விட்டுக் கொண்டு
கனலுக்குள் வேகாதேடா – தோழா
கவலைக்குள் சாகாதேடா
விழியோர நீரைத் தட்டும்
வேரோடு கவலை வெட்டும்
வார்த்தைகள் சேர்த்துக் கட்டும்
கவியோடு வந்தேனடா – தோழா
செவியோடு செந்தேனடா
உள்ளத்துச் சிறையின் உள்ளே
ஓயாமல் தள்ளப் பட்டே
சிறையையே தண்டிக்கின்ற
பொல்லாத கைதிகளடா – தோழா
பிணந்தின்னிக் கவலைகளடா
முடக்கங்கள் இந்தப் பக்கம்
பலகீனம் அந்தப் பக்கம்
மனத்தினுள் கிள்ளி வைக்கும்
கவலைகள் முள்ளாய் தைக்கும் – தோழா
முள்ளுக்குள் உயிரும் சிக்கும்
வாழ்வெனும் கடலில் நீந்தி
நம்பிக்கை வலைகள் வீசி
விழிகளை விரித்தே பாரு
குதூகல மீன்கள் நூறு – தோழா
கவலையோ விலகும் சேறு
மரணத்தின் முத்தச் சத்தம்
காதுக்குள் கேட்கும் போதும்
அகலாத முயற்சி வேண்டும்
அயராத உழைப்பு வேண்டும் – தோழா
வெற்றி உன் காலடி முட்டும்
கைவிட்ட காதல்தனையும்
கஷ்டத்தில் காணாதொளியும்
கயவாளித் தோழர்களையும்
காலுக்கடி மிதித்துவிடடா – தோழா
கருத்தினில் ஒதுக்கிவிடடா
ஏமாறு தவறே இல்லை
ஏமாற்றம் குற்றம் இல்லை
ஏமாற்றம் முதல்முறையென்றால்
ஏமாறு தவறே இல்லை – தோழா
ஏமாற்றம் குற்றம் இல்லை
‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here
“