"நீ குடுத்த கார் நம்பரை வச்சு விசாரிச்சதிலே அந்தப் பையன் ஐ.ஜி-யோட தங்கை புள்ளைன்னும், அவன் ஐ.ஜி வீட்டிலேயே தங்கி மாநிலக் கல்லூரியிலே படிக்கிறான்னும் தெரிஞ்சிருக்கு. அதனாலேதான் போலீஸ்காரா தயங்கறா அம்மா" என்று பக்கத்துப் போர்ஷன்காரர் சாரதாவுக்குத் தகவல் சொன்னார்.
"பையன் பேரு தங்கப் பாண்டியன். முன்னாலேயும் இது மாதிரி இரண்டு மூணு புகார்கள் வந்து, மேலே இருந்து ‘ப்ரஷர்’ வந்ததாலே ஒண்ணும் பண்ணாமே சும்மா விட வேண்டியிருந்ததாம். அதனாலே இந்தப் புகார் விஷயத்திலேயே போலீஸ் தயங்கறாங்க."
சாரதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. அத்தனை குடித்தனக்கார ஆண்களும் வீட்டில் இருந்தபோதே பகல் ஒன்றரை மணிக்குச் சரியாக வாசலுக்கு நேரே காரைக் கொண்டு வந்து நிறுத்தி, ஏதோ தாலி கட்டின மனைவியைக் கூப்பிடற மாதிரி, "ஏய் சாரதா! இன்னிக்கு மாட்னி ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கியிருக்கேன். வம்பு பண்ணாமே எங்கூட உடனே புறப்படு" என்று இரைந்து கூப்பிட்டுக் கொண்டே அட்டகாசமாக வந்தான் அவன்.
எல்லாப் போர்ஷன்களின் வாசலிலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட அத்தனை பேரும் நின்று வேடிக்கை பார்த்தார்களே ஒழிய, "நீ யார்டா ராஸ்கல் அவளைக் கூப்பிட?" என்று ஒருத்தனாவது தைரியமாகக் கேட்க முன்வரவில்லை. ஏ.ஜி ஆபீஸ் கிளார்க், ரிடயர்டு போஸ்ட் மாஸ்டர் கேசவையர், எவர்பிரைட் ஸ்டீல் கம்பெனி ஸ்டெனோ நாகராஜன், ரெவின்யூ போர்டு ஆபீஸ் ரங்கராமாநுஜம், எல்.ஐ.சி லோகநாதன் ஒருத்தராவது தம் போர்ஷன் முகப்பிலிருந்து ஒரு முழங்கூட முன்னுக்கு நகர்ந்து வரவில்லை.
முந்தா நாள் சிங்கராசாரி தெரு டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் பதினைந்து ஏழைப் பையன்களுக்குத் தர்ம உபநயனம் பண்ணி வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்ட ரிடயர்ட் போஸ்ட் மாஸ்டர் கூட வாயைத் திறக்காமல் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பதைக் கண்டு சாரதாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது கோபம்.
அன்றிரவு அப்பா திரும்பி வந்ததும், "வேறு வீடு பாருங்கள்! அல்லது இந்த ரௌடியைத் தடுத்து நிறுத்த வழி சொல்லுங்கள்" என்று கண்டிப்பாகக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்தாள் சாரதா.
ஆனால், அப்பா அன்றிரவு திரும்பி வந்த நிலையில் சாரதா அவரிடம் அதிரப் பேசுவதற்கே முடியாது போயிற்று. காலிலும் கையிலும் அடுப்புச் சரிந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டிப் புண்ணும் ரணமுமாக, கூட வேலை பார்க்கிற ஆள் டாக்ஸியில் அவரைக் கொண்டு வந்து விட்டுப் போனான். இந்த நிலையில் அவளே நாலு நாள் லீவு போட வேண்டியதாயிற்று.
கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு அவள் அப்பாவுக்குச் சிச்ருஷை செய்த நாட்களிலும் அந்த ரௌடியின் தொல்லை ஓயவில்லை. சாரதா அப்பாவிடம் அழுது புலம்பினாள்.
"சூரியனைப் பார்த்து நாய் குரைக்கறதுன்னு நெனைச்சுண்டு பேசாம இரும்மா. அவனை எதிர்த்துக்க நமக்குப் பலமும் மனுஷா துணையும் இல்லே. அவன் பெரிய இடத்துப் புள்ளையாம்! தெய்வத்துக்குக் கண் இருந்தா அவனைக் கேக்கட்டும். நம்மாலே வேற ஒண்ணும் பண்ண முடியாது சாரதா" என்றார் அனந்து.
சென்னையிலேயே அனந்துவின் கூடப் பிறந்த சகோதரிகள் இருவர் இருந்தனர். ஒருத்தி அவருக்கு மூத்தவள். மற்றொருத்தி இளையவள். இருவருக்கும் வயது வந்த மகன்கள் இருந்தனர். அந்த மருமகன்களில் ஒருத்தருக்குச் சாரதாவைக் கொடுக்கலாமா என்று கூட அனந்துவுக்கு ஒரு நினைப்பு இருந்தது.
அனந்து கொதிக்கிற எண்ணெய் கொட்டித் தீப்புண்களோடு படுத்த படுக்கையான மறுநாள் அவருடைய தங்கையும் ஸ்டேட் பாங்கில் ஆபீஸராக வேலை பார்க்கும் அவளுடைய மகனும் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வந்திருந்த சமயம் பார்த்து அந்தக் காதல் ரௌடியும் வந்து சேர்ந்தான்.
அனந்து உடனே முழு விவரத்தையும் தன் மருமகனிடம் சொல்லி, "இந்தச் சண்டாளனைக் கொஞ்சம் விசாரியேன்! வயசு வந்த பொண்ணு கிட்ட நாள் தவறாமல் வந்து வம்பு பண்றான். அக்கம்பக்கத்திலே பேரைக் கெடுத்துடுவான் போலிருக்கு" என்று கேட்டுக் கொண்டார்.
"இந்த மாதிரி ரௌடிகிட்ட எல்லாம் நேரே வம்பு பண்ணினாக் கையிலே பிளேடு, கத்தி கித்தி வச்சிருப்பான் மாமா! நம்ம கௌரவம் என்ன ஆறது? அவன் அளவுக்கு நம்மாலே எறங்க முடியாது. நான் வேணா ஒண்ணு பண்றேன். போறப்போ போலீஸ்லே ஒரு ‘ஈவ்டீஸிங்’குன்னு புகார் கொடுத்துட்டுப் போறேன்” என்றான், அந்த மீசை முளைத்த ஆண்பிள்ளை. சாரதாவுக்கு ‘சை’ என்று ஆகிவிட்டது.
மூன்றாம் நாள் அனந்துவின் மற்றொரு சகோதரி வந்திருந்தாள். அவள் பிள்ளை ரகுவுக்கு ஒரு கம்பெனியில் ஸேல்ஸ் மேனேஜர் உத்தியோகம். அவன் நல்ல விளையாட்டு வீரன்; உடற்கட்டுள்ள பலசாலி, கொஞ்சம் கராத்தே, ஜூடோ பயிற்சி கூட உண்டு. அவனைக் கொஞ்ச நேரம் அங்கேயே தங்கச் சொல்லி அந்தக் காதல் ரௌடியிடம் மோத விட வேண்டும் என்று முயன்றார் அனந்து. அவனும் சம்மதித்தான். அதற்குள் ஏதோ பேச்சுவாக்கில் சாராதாவுக்குத் தொல்லை கொடுக்கிற அந்த இளைஞன் ஐ.ஜி-யின் தங்கை பிள்ளை என்பதால் போலீஸில் எவ்வளவு புகார் செய்தும் பயனில்லை என்று அவரே சொல்லிவிடவே அவனுக்குப் பயம் வந்து விட்டது.
"மாமா, யாரோ எவனோன்னாப் பரவாயில்லை. நாலு உதை உதைச்சுத் தெருவிலே தூக்கி எறிஞ்சிடலாம். நீங்க சொல்ற மாதிரியாயிருந்தா யோசிச்சு திட்டம் போட்டுத்தான் ஏதாவது செய்யணும். அவசரப்பட்டுடாதீங்கோ! சாரதாவைக் கூடக் கொஞ்சம் பொறுமையா இருக்கச் சொல்லுங்கோ" என்று உபதேசம் செய்துவிட்டு நழுவி விட்டான். இந்தத் தொல்லைக்கு விடிவே இல்லை என்ற முடிவுக்குச் சாரதா வந்துவிட்டாள்.
‘இரண்டு பேருக்கும் ஏதாவது பழைய சம்பந்தம் இருக்கும். இல்லாட்டா ஒருத்தன் இப்படி விடாமத் துரத்திண்டு கார்லே நாள் தவறாம வருவானா? முதல்லே கொஞ்சம் வருமானத்துக்கு ஆசைப்பட்டிருப்பாள். அப்புறம், ‘இப்போ வராதே, போடான்னு’ ஒதுக்கினா அவன் எப்படிப் போவான்?’ என்று கூட அக்கம் பக்கத்தில் அபாண்டமாகப் பேச்சுக் கிளம்பி விட்டது. நாக்கில் நரம்பில்லாத சில அயோக்கியன்கள் விதவிதமாகப் பேசத் தலைப்பட்டனர். "பணத்துக்கு ஆசைப்பட்டு அனந்துவே பொண்ணைப் பெரிய பெரிய பணக்காரப் பையன்களோட பழக விட்டுட்டான். அதுனாலே வந்த வம்புதான் இதெல்லாம். இப்பக் குறைப்பட்டுண்டா அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்?" என்று ரகசியமாகத் தம் மனைவியிடம் கூறினார், பக்கத்துப் போர்ஷனைச் சேர்ந்த சமஷ்டி உபநயன தர்மப் புகழ் போஸ்ட்மாஸ்டர்.
இப்படிச் சாரதாவால் வெறுக்கப்பட்டும், சாரதாவைப் பாதிக்காமலுமே அவளுக்கு எல்லா விதத்திலும் கெட்ட பெயரை உண்டாக்கி விட்டான், அந்த ரௌடிப் பையன்.
கொதிக்கும் எண்ணெய் பட்டு உண்டான தீப்புண்களை விட இந்த மனப்புண் அனந்துவை வாட்டியது.
நாலைந்து நாள் கழித்து ஒரு மாலை வேளையில் முன்பு அவரை டாக்ஸியில் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுப் போன அதே சக ஊழியன் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் போக வந்தபோது அனந்து கண்களிலிருந்து மாலை மாலையாக நீர் வழிய மௌனமாக அழுது கொண்டிருந்தார்.
"ஏன் மாமா அழறேள்?"
"வாடா ராஜு! நான் பொறந்த பொறப்பை நெனைச்சு அழறேன். காண்டீனெல்லாம் எப்படி இருக்கு? சரக்கெல்லாம் யார் போடறா?" என்று கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு அவனை வரவேற்றார் அனந்து.
"அதெல்லாம் அப்புறம் சொல்றேன் மாமா! நீங்க ஏன் இப்போ அழுதுண்டிருக்கேள்னு மனசிலே உள்ளதை மறைக்காமே நிஜத்தை எங்கிட்டச் சொல்லணும், பொய் சொல்லப்படாது!"
அனந்து சிறிது தயங்கிய பின் உண்மையை விவரித்தார். முதலில் அவர் தயங்கியதற்குக் காரணம் ஒரு காண்டீனில் தனக்குக் கீழ்ப்பட்டவனாக மாவரைக்கிற உத்தியோகம் பார்க்கும் எழுதப் படிக்கத் தெரியாதவனான ஒருத்தனிடம் நாசூக்கான தன் குடும்ப அந்தரங்கத்தைச் சொல்வதா வேண்டாமா என்று எண்ணியதுதான். அவர் அதைச் சொல்லி முடிக்கவும் காய்கறிக் கடைக்குப் போயிருந்த சாரதா திரும்பி வரவும் சரியாயிருந்தது.
"சாரதா! இவன் ராஜு. எங்கூட வேலை பார்க்கிறான். சொந்த ஊர் மானாமதுரை. மாவரைக்கிறதிலே நிபுணன். அன்னிக்கி என்னைக் கொண்டு வந்து விட்டப்போ அவசரத்திலே நான் உனக்கு இவனைப் பத்திச் சொல்லலே. இவனுக்கு ஒரு காபி கலந்து குடு" என்றார் அனந்து.
சாரதா அவனைப் பார்த்தாள். ஆள் ஒற்றை நாடியாக, ஊதினால் விழுந்து விடுகிற மாதிரி இருந்தான். ஆனால் நல்ல உயரம். உழைத்து இறுகி உரம் பாய்ந்த தோள்கள். தோளில் சமையல் கைக்காரியத்துக்குப் பயன்படுகிற மாதிரி பிடித்துணியையே துண்டாகப் போட்டுக் கொண்டிருந்தான். அழுக்குப் பனியன். அழுக்கு வேஷ்டி. ஆளே நல்ல கறுப்பு. கறுப்பு முகத்தில் இடுங்கிப் போய் மின்னும் ஒளிமிக்க கண்கள். எந்த ஊரிலும், எந்த வீட்டிலும் எவ்வளவு உயரமான நிலைப்படியும் நிச்சயம் இவன் நிமிர்ந்தால் இடிக்கும் என்பது போல் அத்தனை உயரம். கறுத்த உதடுகளும் மூக்கும் வசீகரமற்ற முகமுமாக இருந்தான் அவன். சிரித்தால் மட்டும் தேங்காய்ச் சில்லு மாதிரி வெள்ளை வெளேரென்று பற்கள் மின்னின. அப்பாவின் அறிமுகத்தை ஏற்பது போல் அவனை நோக்கிக் கைகூப்பி விட்டுக் காப்பி கலப்பதற்காகச் சமையற்கட்டுக்குள் சென்றாள் சாரதா. அப்போது வாசலில் வெறுப்பூட்டும் குரல் கேட்டது.
"ஹல்லோ மை டியர் சாரதா!" என்ற அழைப்பைத் தொடர்ந்து சினிமாப் பாடல்; ‘உன்னை நான் சந்திப்பேன். என்னை நீ கொஞ்சிவிட்டால்…’என்று, பாதியில் நின்றது. சீட்டியடிக்கிற ஒலி தொடர்ந்தது.
"இவன்தாண்டா ராஜு! நாள் தவறாமே வந்து மானத்தை வாங்கறான். யாரோ பெரிய போலீஸ் ஆபீஸருக்கு உறவாம். அதனாலே எல்லாம் பயப்படறா. கோயில்காளை மாதிரி பொம்பளைகள் பின்னால் ஒவ்வொரு திறந்த வீடா நுழைஞ்சிடுவான் போலிருக்கு."
“சித்தே இருங்கோ மாமா, வரேன்!” ராஜு வெளியே போக எழுந்திருந்தான்.
"உனக்கெதுக்குடா வந்த இடத்திலே வம்பு? பேசாமே உக்காரு."
"நான் ராமநாதபுரம் ஜில்லாக்காரன் மாமா! கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துண்டு கையைக் கட்டிண்டு ஆம்புள்ளையா நின்னுண்டிருக்க என்னாலே முடியாது."
அவன் அவர் தடுத்ததையும் மீறி வெளியே பாய்ந்தான்.
அடுத்த நிமிஷம் என்ன நடக்கிறது என்பதை அனந்து உள்ளிருந்தே கேட்கவும் அநுமானிக்கவும் முடிந்தது. ராஜுவின் குரல்தான் முதலில் விசாரித்தது.
"நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும் இங்கே?"
"நானா? நான் சாரதாவின் ஆருயிர்க் காதலன்."
இதற்கப்புறம் உரையாடல் இல்லை. பளீரென்று ஓர் அறை விழுகிற ஓசை கேட்கிறது.
"டேய்! என்னையா அறையறே? நான் யார் தெரியுமா?"
"தெரியுமே! பொம்பளைப் பொறுக்கிகளிலே ஒருத்தன். போடா! உனக்குப் பெருமை ஒரு கேடு."
இன்னொரு பலமான அடி விழுகிறது. "நீங்க யாராயிருந்தாலும் தெருவிலே போய் அடிச்சுக்குங்கோ. இங்கே சண்டை கூடாது. இது கௌரவமா நாலு பேர் குடியிருக்கிற இடம்." இப்படிக் குறுக்கிட்டது சமஷ்டி உபநயன தர்ம போஸ்ட்மாஸ்டரின் குரல்.
"சும்மா வாயை மூடுங்க சார்! உங்க கௌரவந்தான் நல்லாத் தெரியுதே. வீட்டோட இருக்கிற பொம்பிளையைத் தேடி வந்து எவனோ ஒரு கிறுக்கன் நாள் தவறாம வம்பு பண்றதைப் பார்த்துக்கிட்டுப் பொறுமையா இருக்கிற கௌரவத்தையே நான் சொல்றேன் சார்." இது அவரைச் சாடும் ராஜுவின் குரல்.
அனந்துவால் எழுந்திருந்து நடமாட முடியாத நிலை. ஓடிப்போய் ராஜுவைத் தடுக்க முடியவில்லை அவரால். படுத்த இடத்திலிருந்தே, "ராஜு” என்று பலங் கொண்ட மட்டும் அவர் கத்தினார். ஆனால், ராஜு அப்போது அதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை. தெருவில் நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி ஓடத் தொடங்கியிருந்த காதல் ரௌடியைத் துரத்திப் போய்ப் பிடித்து மேலும் உதைத்து கொண்டிருந்தான் அவன்.
பத்து நிமிஷத்தில் கார் சர்ரென்று சீறிக்கொண்டு கிளம்பும் ஓசையும், "போடா ராஸ்கல்! இனிமே இந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தியோ தொலைச்சுப்பிடுவேன் தொலைச்சு. சொந்த அக்கா தங்கையோட பிறந்ததில்லையாடா நீ?" என்று ராஜு அவனை எச்சரித்து அனுப்பும் ஓசையும் உள்ளே படுத்திருந்த அனந்துவுக்குக் கேட்டன.
ராஜு உள்ளே திரும்பி வந்தபோது சாரதா காபி கலந்து கொண்டு வந்திருந்தாள்.
"வந்த இடத்திலே ஏண்டா வம்பை விலைக்கு வாங்கினே? காபியைக் குடிச்சிட்டு எங்கேயாவது ஓடிப்போயிடு. அவன் போய்ப் போலீஸோட வரப் போறான்" என்றார் அனந்து.
"ஓடிப் போறது எதுக்கு மாமா? கோழைன்னா பயந்து ஓடிப் போவான். நான் ஏன் போகணும்? போலீஸ் வரட்டும். வந்தா என்ன? நடந்ததைச் சொல்றேன். கேக்கலேன்னா ஜெயிலுக்குள்ளே போறேன். நீங்க என் சம்பளத்தை வாங்கி எனக்காக ஒரு வக்கீல் வச்சு வாதாடுவேளா இல்லியா சொல்லுங்கோ?"
"சாரதா, முதல்லே அவனுக்குக் காபியைக் கொடு, சொல்றேன்." சாரதா காபியைக் கொடுத்தாள். ராஜு அதை வாங்கிப் பருகி முடிக்கவும், வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.
‘அஸால்ட் அண்ட் அட்டெம்டட் ஃபார் மர்டர்’ என்று எஃப்.ஐ.ஆர். தயாரித்து அவனை இழுத்துச் சென்றார்கள் போலீஸார். அவன் புன்முறுவலுடன் நடந்து போனான்.
காபி டவரா டம்பளருடன் தெரு வாசல் வரை அவனை வழியனுப்ப வந்த சாரதா முதல் முதலாக முழுப் பௌருஷமும் நிறைந்த ஒரு பூரண ஆண்மகனுக்குத் தன் கையால் காபி கலந்து கொடுத்த பெருமையோடு கண்களில் நீர் மல்க நின்றாள்.
பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. கடைசியாக, அவள் ஓர் ஆண் பிள்ளையைப் பார்த்து அவனுக்குத் தன் கைகளால் காபியும் கலந்து கொடுத்திருந்தாள்.
அவன் அழகாக இல்லைதான். ஆனால், நிச்சயமாக ஆண்பிள்ளையாக இருந்தான். ஜாமீன் கேட்டு அவனை விடுவிக்க வக்கீலைத் தேடிச் செல்வதற்கு அப்பாவிடம் யோசனை கேட்பதற்காக உள்ளே விரைந்தாள் சாரதா.