பத்திரிகை ஆபீஸ் காண்டீனில் மாதம் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒரு சரக்கு மாஸ்டர் எதிர்கொண்டு அழிக்க முடியாத பகையாக இருந்தது அது. அடுப்படியில் வேர்வை சொட்டச் சொட்ட மாடாக உழைக்கும் ஒரு சரக்கு மாஸ்டருக்கு இத்தனை அழகான மகள் பிறந்திருக்கக் கூடாதுதான்.
மன எரிச்சலாலும் எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் பிறந்த வேதனையினாலும் பல சமயங்களில் அனந்தபத்மநாபன் என்ற முழுப்பெயரை உடைய அனந்துவுக்கே இப்படித் தோன்றியது. அந்தப் பிரச்சினை அவர் மனத்தை வாட்டி எடுத்தது.
ஒரே பெண், அதுவும் தாயில்லாப் பெண். அவளுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நேருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வேதனையினால் அனந்துவுக்குத் தொடர்ந்து பல நாட்களாக இராத் தூக்கமில்லாமல் போய்விட்டது. வேலையை விட்டுவிட்டுப் பெண்ணின் கல்லூரிப் படிப்பையும் பாதியில் நிறுத்திக் கொண்டு, சென்னையை விட்டு ஊரோடு திரும்பிப் போய்விடலாமா என்று கூட அவர் யோசித்தார்.
திருவல்லிக்கேணி வேங்கடரங்கம் பிள்ளைத் தெரு என்பது, இப்பால் கடலோரத்துக் குடிசைப் பகுதிகளுக்கும் அப்பால் மேற்குப் பக்கம் சம்பிரதாயமான பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலைச் சுற்றிய தெருக்களுக்கும் இடையே அமைந்திருந்தது.
அந்தத் தெருவிலுள்ள பல ஒண்டுக் குடித்தனங்கள் அடங்கிய ஒரு வீட்டில், ஒரு போர்ஷனில்தான் அனந்து குடியிருந்தார். அந்த வீட்டில் நடுவே நடப்பதற்குச் சிமெண்டுத் தளமிட்ட பாதையின் இருபுறமும் எதிரெதிராக மூன்றும் மூன்றும் ஆறு ஒண்டுக் குடித்தனப் போர்ஷன்கள் இருந்தன. அதை ஒரு வீடு என்று சொல்வதை விட ஒண்டுக் குடித்தன போர்ஷன்கள் அடங்கிய ஸ்டோர்ஸ் என்றே சொல்லிவிடலாம்.
அனந்து வேலை பார்த்த காண்டீன் இருக்கும் பத்திரிகைக் காரியாலயம் மவுண்ட் ரோடில் இருந்தது. காலை ஐந்து மணிக்கு சைக்கிளில் வீட்டை விட்டுப் புறப்பட்டாரானால் மறுபடி அனந்து வீடு திரும்ப இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்கு மேலாகிவிடும்.
வீட்டில் கல்லூரிக்குப் போகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் இருக்கிறவள் சாரதா மட்டுந்தான். காலையில் அவளே சமைத்துச் சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்கு ஓடவேண்டும். கூட்டத்தில் இடிபட்டு பஸ்ஸில் இடம்பிடித்துக் கமாண்டர் இன் சீஃப் சாலையிலுள்ள கல்லூரிக்கு நேரத்துக்குப் போயாக வேண்டும்.
அப்படி அரக்கப் பரக்கப் போகிறபோதுதான் ஒரு நாள் பஸ்ஸில் அந்த வம்பு வந்து சேர்ந்தது. வம்பு ஒரு நாளோடு போகாமல் வாடிக்கையாக மாறி விடவே சாரதா வேதனைக்குள்ளானாள். தன்னை இத்தனை அழகாகவும், பிறருடைய கவனத்தைக் கவரும்படியும் படைத்த தெய்வத்தின் மேலேயே அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.
விளையாட்டாக ஆரம்பித்து, தொந்தரவாக மாறி விபரீதமான எல்லைக்கு வந்திருந்தது அது. பஸ்ஸில் அரும்பு மீசையும், சுருட்டை முடியுமாகத் தமிழ்ச் சினிமாக் கதாநாயகனின் களையோடு ஒரு மாணவன் அவள் கையிலிருந்த புத்தகப் பையில் ஒரு கடிதத்தை மடித்துப் போட்டான். பஸ்ஸில் நாலு பேர் முன்னால் வீண் கலாட்டா வேண்டாமென்று முதல் நாள் பேசாமால் இருந்துவிட்டாள் சாரதா.
கல்லூரிக்குப் போய் அதைப் பிரித்துப் பார்த்தால், அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த ஓர் இளம் சினிமாக் கதாநாயகியைப் போல் அவள் அழகாயிருப்பதாகப் புகழ்ந்துவிட்டு அவளைத் தான் காதலிப்பதாக எழுதியிருந்தான் அந்த அசடு. அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு மறந்து போனாள் சாரதா.
ஆனால், அவன் அப்படி அவளை மறந்து விடவில்லை என்பது மறுநாளும் சரியாக அதே நேரத்துக்கு அவன் பஸ் ஸ்டாண்டில் வந்து முளைத்ததிலிருந்து தெரிந்தது. இன்று முன்னைவிடப் பெரிய கத்தையாக ஒரு கடிதம் வந்து சாரதாவின் பையில் விழுந்தது. சாரதா கோபமாக ஏதோ சொல்ல வாயைத் திறக்குமுன் அவன் பஸ்ஸின் முன் பக்கமாக விரைந்து நடந்து போய்க் கும்பலில் கலந்து கொண்டான்.
அவள் பையில் அவன் கடிதத்தைப் போடுவதைப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், பார்க்காதது போல் இருந்து விட்டார். வர வரப் பெரிய நகரங்களில் தவறுகளை ஆண்மையோடு தலையிட்டுக் கண்டிக்க முன்வரும் ஆண்பிள்ளைகளே இல்லையோ என்று கூடச் சாரதாவுக்குத் தோன்றியது.
தங்களுக்குச் சம்பந்தமில்லாத நல்லதோ கெட்டதோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் நடுவாகப் போய்விட வேண்டும் என்ற நாசூக்கு மனப்பான்மையில் நகரங்களில் முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் கோழைகளாக இருப்பதையும் அவள் கண்டாள். இரண்டாம் நாள் எழுதிய கடிதத்தில் ஒரேயடியாகப் பிதற்றியிருந்தான் அவன்.
"கண்ணே! சொந்தக் காரில் கல்லூரிக்குப் போகிற நான் உன் பொருட்டு பஸ்ஸில் ஏறி வந்து கால் கடுக்க அலைகிறேன். உனக்காக நான் படும் சிரமங்கள் ஏராளம்.இன்று நாம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாமா? உன்னைக் காரிலேயே அழைத்துச் சென்று காரிலேயே பத்திரமாகக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்" என்பதாக எழுதியிருந்தது அந்தக் கடிதத்தில்.
கடிதத்தைக் கூடச் சொந்தமாக எழுதாமல் ஏதோ சினிமாக் காதலில் வருகிற வசனம் போல் எழுதியிருந்தான். சொந்தமாக அவனுக்கு எதுவுமே தெரியாதோவென்று சாராதாவுக்குத் தோன்றியது. காதலைக் கூடப் பல திரைப்படங்களைப் பார்த்ததன் இமிடேஷனாக அவன் செய்து கொண்டிருப்பதாகப் பட்டதே ஒழிய, உணர்ந்து ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவனுக்கு வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இருந்ததாகவும் தெரியவில்லை.
வேறொரு நாள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி அவளை அவன் பின் தொடர்ந்தபோது கோபத்தோடு தன் கால் செருப்பைக் கழற்றி அடிக்கப் போவது போல் காண்பித்தாள் அவள். சாரதாவின் அந்தச் செயல் கூட அவனை அவமானப்படுத்தவோ எரிச்சலூட்டவோ செய்யவில்லை.
"கோபத்தில் கூட நீ அழகாயிருக்கிறாய். உன் பட்டுப் பாதங்களை நாள் தவறாமல் சுமக்கும் செருப்பு செய்த புண்ணியத்தைக் கூட நான் செய்யவில்லையா?" என்று புலம்பினானே ஒழியக் கோபப்படவில்லை. அவன் சரியான கல்லுளிமங்கனாக இருந்தான். அவனை எரிச்சலூட்டவும் முடியவில்லை அவளால்.
ரோஷமில்லாதவனை, மான உணர்ச்சியில்லாதவனை, ஆண் பிள்ளையாகவே மதிக்கத் தோன்றவில்லை சாரதாவுக்கு. செருப்பைக் கழற்றிக் காண்பித்த மறுநாளிலிருந்து அவன் தன்னைப் பின்பற்றி வரமாட்டான் என்றே அவள் நினைத்திருந்தாள்.
ஆனால், அவள் நினைத்தபடி நடக்கவில்லை. மறுநாள் காலையில் பஸ்ஸிலும் திரும்பி வரும்போதும் அவன் தட்டுப்படவில்லை என்றாலும் அவள் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தெரு முனையில் ஒரு கார் அவள் அருகே வந்து மெல்ல நின்றது. அவன்தான் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.
"மிஸ், ஏறிக்குங்க! உங்களை வீட்டிலே விட்டுடறேன்."
அவள் அவன் வார்த்தைகளைக் காதில் போட்டுக் கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. விடுவிடுவென்று நடந்தாள். காரும் மெதுவாக அவளைத் தொடர்ந்தது.
அதிகபட்சம் வீட்டு வாசல் வரை பின்தொடர்வான்; அதற்கு மேல் துணியமாட்டான் என்றே சாரதா நினைத்தாள். ஆனால், அவள் ஸ்டோருக்குள் நுழைந்து தன் போர்ஷன் கதவைத் திறந்தபோது, மற்ற ஐந்து போர்ஷன் ஆட்கள் பார்க்கும்படி உள்ளே வந்து, "இந்தாங்க, உங்களுக்காகவே வாங்கினேன்!" என்று ஒரு மல்லிகைப் பூப்பொட்டலத்தை நீட்டினான் அவன். சாரதாவுக்குச் சர்வநாடியும் ஒடுங்கினாற் போல ஆகிவிட்டது.
பூப்பொட்டலத்தை வாங்காமலே, "முட்டாள்! பண்பில்லாத ஜடமே!" என்று அவள் கூப்பாடு போடவே, மற்ற போர்ஷன் வாசலில் நின்று பார்த்தவர்களின் கவனம் இன்னும் அதிகமாகவே இவர்களிடம் திரும்பியது.
ஐந்து போர்ஷன்களில் இரண்டில் ஆண்கள் கூட ஆபீஸிலிருந்து திரும்பியிருந்தனர். எட்டியும் பார்த்தனர். ஆனால் சாரதாவின் உதவிக்கு யாரும் துணிந்து முன் வரவில்லை. என்னவென்று விசாரிக்கக்கூடப் பயப்பட்டார்கள்.
அவள் வாங்கிக் கொள்ளாமல் மறுக்கவே பூப்பொட்டலத்தை வாசற்படியில் வைத்துவிட்டுச் சினிமாக்களில் வருகிற மாதிரி முன்புறம் வலக்கையை நீட்டி, உள்ளங்கையை மறுபடி முகத்துக்குக் கொண்டு போய் முத்தம் கொடுக்கிறாற்போல உதடுகளில் பதித்துவிட்டு, விசிலடித்துப் பாடியபடியே திரும்பிப் போய் வாசற்படிக்கு நேரே நிறுத்தியிருந்த காரைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் அவன்.
அவன் முயற்சி என்ன என்பதை எரிச்சலோடு புரிந்து கொண்டாள் அவள். அக்கம்பக்கத்தார் தன்னையும் அவனையும் சம்பந்தப்படுத்திப் பேசிக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டே இப்படி அவன் நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.
ஆத்திரத்தோடு அவன் வைத்துவிட்டுப் போன பூப்பொட்டலத்தை வாயிற்புறம் வீசி எறிந்தாள் அவள்.
இரவில் தந்தை வீட்டுக்கு வந்ததும் அழுது கொண்டே நடந்ததைச் சொன்னாள் சாரதா. அவன் ஓட்டிக் கொண்டு வந்த காரின் நம்பரையும் ஞாபகமாகக் குறித்துக் கொடுத்தாள்.
இரவு அகாலமென்றும் பாராமல் பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்த ஏ.ஜி ஆஃபீஸ் கிளார்க் ஒருத்தரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கச் சென்றார் அனந்து. இப்போதே புகார் செய்துவிட்டால் காலையில் சாரதா கல்லூரிக்குப் புறப்படும்போதே பஸ் நிறுத்தத்தில் வந்து அந்தப் பையனைப் போலீஸார் பிடிக்க முடியும் என்று அனந்து எண்ணியிருந்தார்.
போலீஸ் நிலையத்தில் புகார் செய்தபோதும் அவ்வாறே காலையில் பஸ் நிறுத்தத்தில் வந்து கவனிப்பதாக அவர்கள் கூறினார்கள்.
போலீஸ் நிலையத்திலிருந்து திரும்பும்போது, "ஓய் அனந்து! இதை என்ன பண்ணியாவது நிறுத்தியாகணும். இப்படித் தினம் ஒரு பையன் பூவையும் வளையலையும் தூக்கிண்டு உம்ம பொண்ணைத் தேடிண்டு வந்தா ஸ்டோர்லே மத்தக் குடித்தனக்காரா ஒரு மாதிரி நினைக்க ஆரம்பிச்சுடுவா. தெருவிலேயும் பேர் கெட்டுப் போயிடும். தாறுமாறாப் பேச்சுக்கள் வேற கிளம்பும்" என்று உடன் வந்தவர் அனந்துவை எச்சரித்தார்.
அனந்துவுக்கும் அது நியாயமென்றே பட்டது. எதிர்பார்த்தது போல் மறுநாள் காலையில் போலீஸ்காரர் ஒருவர் அனந்துவைத் தேடி வந்தார். வந்தபோது அனந்து வீட்டில் இல்லை. முதல் நாள் போலீஸ் நிலையத்துக்கு உடன் சென்ற பக்கத்துப் போர்ஷன்காரர் இருந்தார். அவரைத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போய் இரண்டு நிமிஷம் பேசியபின் அவரிடமே தேநீர் குடிக்கச் சில்லறையும் வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் கான்ஸ்டேபிள். அவர் பஸ் நிறுத்தத்துக்கே வரவில்லை.
வழக்கமான தொல்லை தொடர்ந்தது. இளைஞன் வந்தான். பஸ்ஸில் ஜாடைமாடையான அர்த்தமுள்ள சில சினிமாப் பாடல்களைச் சாரதாவின் காதருகே முணுமுணுத்தான். ‘மெதுவா மெதுவாத் தொடலாமா?’ என்று சீட்டியடித்துக் கொண்டே அவள் தோளைத் தொட்டான். பின்னலைப் பிடித்து இழுத்தான். அவனைச் சுற்றி நின்ற மற்ற இளைஞர்களும் மாணவர்களைப் போல் தோன்றவே, பஸ்ஸிலிருந்த மற்றவர்கள் இதில் தலையிட்டுச் சண்டையை விலைக்கு வாங்கப் பயந்தார்கள். பேசாமல் இருந்தார்கள்.
சாரதாவுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இராமாயணம் நடந்தால் சீதையைப் பறிகொடுத்த இராமர்கள் எல்லாம் இராவணன் மேல் போலீஸில் புகார் கொடுத்து விட்டு அப்புறம் சும்மா இருந்து விடுவார்கள் போல் தோன்றியது. போலீஸ் விசாரிக்க வருவதற்குள் இராமனும் கிழவனாகி விடுவான், சீதையும் கிழவியாகி விடுவாள். உடனடியாகக் கோபம் கொண்டு பொங்கியெழ வேண்டிய விஷயங்களில் எல்லாம் கையாலாகாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடும் ஆண் பிள்ளைகளை ஆண்களாகவே சாரதா நினைத்ததில்லை.
"புதுமணத் தம்பதிகளிடம் கடற்கரையில் நகைகள் கொள்ளை. கணவனும் இளம் மனைவியும் இரவு கடற்கரையில் தனியே உலாவச் சென்றபோது ரௌடி ஒருவன் கணவனிடம் பேனாக் கத்தியைக் காட்டி மிரட்டி மனைவியின் நகையை அவனே கழற்றித் தருமாறு செய்த திருட்டு! கணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் புலன் விசாரித்து வருகிறது" என்பன போன்ற தினசரிப் பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும்போது எல்லாம், "கேவலம், ஒரு ரௌடியின் பேனாக்கத்தியிலிருந்து மனைவியைக் காக்கத் தோள் வலியில்லாத ஓர் ஆண்பிள்ளையா வாழ்நாள் முழுவதும் அவளைக் கட்டிக் காக்கப் போகிறான்? இன்றைக்கு முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் ஆண்களைப் போல் தோன்றுகிறார்களே ஒழிய ஆண்மையுள்ளவர்களாக இல்லேடி! ஆண்களைப் போலத் தோன்றுகின்றவர்கள் எல்லாம் ஆண்மையுள்ளவங்க இல்லை. இது மாதிரி செய்ததிலேருந்து நாம அதைத்தான் தெரிஞ்சுக்கணும்" என்று தன் தோழிகளிடம் சொல்லி விமரிசித்திருக்கிறாள் சாரதா. முதல் நாளிரவே அப்பாவும் பக்கத்துப் போர்ஷன்காரரும் போலீஸில் புகார் செய்திருந்தும் அவர்கள் இன்றும் வராதது அவளுக்கு எரிச்சலூட்டியது. பொறுமை இழக்கச் செய்தது.
மாலையில் வீடு திரும்பியதுமே போலீஸ் வராததன் மர்மம் அவளுக்குப் புரிந்தது.
–முடிவு அடுத்த வாரம்…