எல்லாம் இப்படித்தான் ஆரம்பித்தது. என் வீட்டு டிராயிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு மாலைப் பொழுதுகளை வீணாக்காமல் நாங்கள் நடத்துகிற அரட்டைக் கச்சேரியில் நடந்தது இது. நானும் வேணுவும் மட்டும்தான்.
யாரையோ பற்றி "விபூதிப் பட்டையும் உச்சிக் குடுமியுமா இருக்காரேன்னு நினைக்காதே. சாமி நல்ல தண்ணி" என்று ஏளனமான தொனியில் ஜாடை காட்டியபடி சொன்னான் வேணு.
சொல்லத் தேவையில்லை. எனக்கும் ‘நடுத்தர வர்க்கத்து மதிப்பீடுகளில்’ நம்பிக்கை உண்டு என்றாலும் ‘வம்பு’க்காகச் சொன்னேன். "என்னவோ, பிரமாதமாச் சொல்றியே? அதுலே என்ன தப்பு? விபூதிப் பட்டை போட்டால் தண்ணியடிக்கக் கூடாதா? தேவர்கள் சோமபானம் குடிக்கல்லியா?" (இந்த விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. என்றாலும் இப்போது அதைப் பற்றிக் கவலையில்லை.)
"சாரே.. .. நன்றாயிருக்கே, நீ பேசறது விதண்டாவாதம். குடிக்கறது பாவம் இல்லையா?" அ
ரொம்ப சந்தோஷம், கோபம், அல்லது விவாதச் சூடு இவற்றில் என்னை "சார், சாரே" என்றுதான் கூப்பிடுவான்.
"பேஷ்.. எது பாவம், எது புண்ணியம்? வா, ‘பாவம்’ என்பதற்கு உன்னுடைய விளக்கம் என்ன, சொல்லு?"
ஓடுகிற எதிரியை விரட்டுகிற உற்சாகத்தில் அலட்டினேன்.
"குடிக்கறது தப்பில்லேங்கறேளா? அப்ப.. நீங்க..?" என்று குழந்தைத்தனமான சந்தேகத்துடன் குறுக்கிட்டாள் என் மனைவி.
"நான் குடிக்கிறேனா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சினை. குடிக்கிறதில் என்ன தப்பு? நீதான் சொல்லேன்?"
நொடித்துக் கொண்டு பேசாமல் போய் விட்டாள் சாரு. (அவள் யாருன்னு சொல்லணுமா?)
"பெர்யவாள்ளாம் அது பாவம்னு சொல்லறா.." என்றான் வேணு.
"ஆ(ங்)! அப்படி வா வழிக்கு! குடிச்சா நம்ம அறிவு மயங்கிப் போகும்; கலாட்டா பண்ணுவோம்; பிறரைத் துன்புறுத்துவோம் அதுக்காகப் பெரியவா அப்படிச் சொல்லி வெச்சிருப்பா; குடிச்சுட்டு நான் நிதானம் இழக்காம இருக்கேன், அல்லது ரூமிலே படுத்துண்டு தூங்கறேன். அதுலே என்ன தப்பு இருக்கு?"
கிராமத்தில் என் பள்ளிக்கூடச் சிநேகிதன் ஒரு நாள் திடுதிப்பென்று குடுமியைச் சிரைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான் அன்றைக்கு அவன் தாத்தா இப்படித்தான் அவனைப் பார்த்தார்.
நான் மட்டும் என்ன? வியப்போடு பார்க்கிற நண்பர்களுக்கு முன்னால் வீரமாகச் சிகரெட் பிடிக்கிற பத்தாம் வகுப்புப் பையனின் உற்சாகத்துடன் பேசினேன்.
"சரி. நீதான் சொல்லேன். what is your conception of sin?" என்று மடக்கினான் வேணு.
ஒரு நிமிஷம் யோசித்தேன். "sin என்று எதுவுமே கிடையாது. எல்லாம் நாமாக ஒரு ஒழுங்கு, ஒரு கட்டுப்பாடு, சட்ட திட்டத்துக்காக ஏற்படுத்திக் கொண்டது. முன்பு எல்லாம் ஒரு ஒழுங்கான ராஜாங்கம், ஒரு போலீஸ் இதெல்லாம் கிடையாது. தடியெடுத்தவன் தண்டல்காரன் ஆகக் கூடாதுங்கறத்துக்காகப் பெரியவா இந்த மாதிரி எல்லாம் சொல்லி வெச்சா. அதெல்லாம் இப்ப, they have outlived their purpose. இப்ப என்னன்னா நாமெல்லாம் இதெச் செஞ்சா தப்பு,இதைப் பண்ணினாப் பாவம், இப்படி உட்கார்ந்தா தெய்வ குத்தம்னு பயந்து பயந்து வாழறோம். we are, all of us, I say, are suffering from guilt complex. அது போனாத்தான் இஷ்டப்படி சந்தோஷமா வாழ முடியும். நாளுக்கு நாள் மணிக்கு மணி, நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதிச்சுண்டு நம்மளை வதைச்சுக்கறோம்."
"அப்ப, சமுதாயத்திலே ஒரு கட்டுப்பாடு இருக்கணும்ங்கறதையாவது நீ ஒத்துக்கிறியா, இல்லையா?"
இவ்வளவு அப்பாவியாக இருந்த இவனுடன் விவாதிக்கவே எனக்கு அலுப்பாக இருந்தது. "எது கட்டுப்பாடுன்னு நீ சொல்லறேன்னு எனக்குத் தெரியணும். இப்ப நாம limited levelலே தெரிஞ்சிண்டிருக்கற valuesதான் சரியான valuesனு நாம நினைச்சுக்கக் கூடாது. Polyandry வழக்கத்திலே இருக்கற சமுதாயத்திலே polyandry தவறு இல்லே. Imagine a society where Homosexuality is a regular way of life.."
"சிவ சிவா" என்று காதைப் பொத்திக் கொண்டான் வேணு.
(மீதி அடுத்த இதழில்)